இலக்கியம்

ஏஐ என்னும் மந்திரம் | அயல்மொழி நூலகம்

செய்திப்பிரிவு

இன்றைய காலம் என்பது செயற்கை நுண்ணறிவு (AI - Artificial intelligence) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கும் காலம். நம்மில் பலரும் அதிசயத்துடன் ஏஐயின் பங்களிப்பைப் பார்க்கிறோம். அதை விளையாட்டுத் தனமாகப் பரிசோதித்துப் பார்க்கிறோம். ஆனால், ஏஐயைப் பிரயோஜனமாகப் பயன்படுத்தித் தொழில்களில், வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெற முடியும். அதன் வழிமுறைகளைச் சொல்லும் நூல் இது.

இதை உதாரணங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். 15பேர் சேர்ந்து தீபாவளி கொண்டாட விழா அலங்காரத்துக்கு என்ன செலவாகும், எப்படிச் செய்யலாம், கேரளாவிலிருந்து மும்பைக்கு 3 நாள் சுற்றுலா செல்ல பட்ஜெட் என்ன ஆகும் எனப் பலதும் ஏஐயிடம் கேட்கலாம். பதில் கிடைக்கும்.

இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு, நடைமுறை எடுத்துக்காட்டுகளின் மூலம் ஏஐயின் பயன்பாட்டை விளக்குவதாகும். புனேயில் உள்ள தேநீர்க் கடைக்காரர், சமையல் செய்ய ஏஐயிடம் உதவி கேட்கும் ஒருவர் என இவர்களின் அனுபவங்கள் வழி ஏஐ எப்படி அன்றாட வாழ்க்கையில் இடம்பிடிக்கிறது என்பதையும் நூலாசிரியர் தெளிவாக விளக்குகிறார். ஏஐ ப்ராம்ட்ஸ் உருவாக்குவதற்கான 7 எளிய முறைகளை இதில் சொல்லியிருக்கிறார்.

உங்கள் இலக்கை முடிவுசெய்வதை முதல் முறையாகச் சொல்லி மேலும் 6 முறைகளை எளிய ஆங்கிலத்தில் விளக்குகிறார். புத்தகத்தின் முக்கியமான அம்சம், ஆழமான புரிதலில் இதை ஆசிரியர் பரிந்துரைப்பதாகும். குறிப்பாக, ஏஐ பயன்பாட்டில் நடைமுறைச் சிக்கல்கள், தகவல் தவறுகள், விதிகள் போன்றவை பற்றிய முக்கியமான விவாதங்களை இறுதி அத்தியாயங்களில் ஆசிரியர் விரிவாகக் கொடுத்திருக்கிறார்.

இந்த நூல் ஏஐயைப் பயன்படுத்த விரும்பும் அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். ஏஐயைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான தெளிவான வழிகாட்டி என்ற வகையில், மாணவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். - விஜித்ரன்

மாஸ்டரிங் ஸ்மார்ட் ப்ராம்ட்ஸ் இன் 7 ஸ்டெப்ஸ்
(Mastering Smart Prompts in 7 Steps)
கே.ஸ்ரீனிவாசன்
ப்ரைம் பாயிண்ட் பவுண்டேஷன்
விலை: ரூ.295
தொடர்புக்கு: 91766 50273

கவிதை பேசும் அரசியல்: வார்த்தைகளால் விளையாடும் கவிஞர் யாழன் ஆதியின் 'தொலைதலின் ரகசியங்கள் அடர்ந்த காடு' எனும் இத்தொகுப்பு அவரது படைப்புகளின் உச்சமாகப் படுகிறது. உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகனான ‘சே' பிடிபட்டதையும் அவர் பிடிபட்ட நேரம் மழைக்காலம் என்பதையும் அதோடு தன் தோள்களில் குறட்டை விடும் காதலியை/காதலையும் பேசும் ஒரு கவிதை, புத்தகத்தின் பத்தாம் பக்கத்தில் உள்ளது. பதினொன்றாவது பக்கத்தைப் புரட்ட விடாமல் ஆழ்ந்த யோசனையில் ஆழ்த்தி விடுகிறது அது.

'யாவர்க்கும்' என்றொரு தலைப்பிலான அந்தக் கவிதை: ‘ஓர் இயல்பு வாழ்க்கை/பாதிக்கப்பட்டிருக்கிது/உங்கள் பிரார்த்தனைக் கூடத்தின் வெளியே/தன் கண்ணீரின் மிகநீண்ட துண்டினை/நான்காக மடித்துப் போட்டுவிட்டு/உட்கார்ந்திருக்கும் அதன் சொற்களை ஏறெடுத்துப் பாருங்கள்/அனாதிக் கதவுகளை நீங்களே போய்த் திறவுங்கள்/மகிமையின் ராஜாக்களே/உங்கள் ஞாயிற்றின் பிரியாணியின் அளவைக் கூட்டி வையுங்கள்/யாவர்க்குமாம்/ஒரு கைப்பிடி பிரியாணி/யாவர்க்குமாம்/ஒரு கைப்பிடி பச்சிலை’. வாசகப் பரப்பின் கவனத்தைப் பெறும் தொகுப்பாக இது மாற வேண்டும் என்பது என் அவா. அதற்கான அத்தனை தகுதிகளும் இத்தொகுதி பெற்றுள்ளது. - பாரத் தமிழ்

தொலைதலின் ரகசியங்கள்
அடர்ந்த காடு
யாழன் ஆதி
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9080909600

ஏன் என்ற கேள்விகளின் விடைகள் | நம் வெளியீடு: எங்கும் அறிவியல். எதிலும் அறிவியல். அறிவியல் இன்றி உலகம் இல்லை. அறிவியல் இன்றி எதுவும் இல்லை. அறிவியலுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று கேள்விகளைக் கேட்க வைப்பதும் அறிவியல்.

அந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடிச் செல்ல வைப்பதும் அறிவியல். தேடிய விஷயங்களைப் பரிசோதனைக்கு உள்படுத்துவதும் அறிவியல். அந்தப் பரிசோதனைகளின் இறுதியில் இதுதான் உண்மை என்கிற ஒரு முடிவுக்கு வருவதும் அறிவியல்.

வேற்றுக் கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா, கண்ணாடியில் ஏன் ஒளி ஊடுருவுகிறது, ஞாபகங்கள் எப்படி உருவாகின்றன, விண்வெளி குளிருமா, ஆண், பெண் பாலினத்தை நிர்ணயிப்பது யார், பூமியில் நெருப்பை உருவாக்கியது யார், கோள்கள் எவ்வாறு நட்சத்திரங்களைச் சுற்றுகின்றன, தாவரங்களுக்குப் பச்சை நிறம் பிடிக்காதா, ஆக்சிஜன் ஆபத்தான வாயுவா, மனிதர்கள் சாகாவரம் பெற முடியுமா என்பன போன்று சுவாரசியமான, அதிகம் எழுதப்படாத விஷயங்களைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் சிறப்புப் பக்கமான ‘மாயாபஜா’ரில் ‘விடை தேடும் அறிவியல்’ என்கிற தொடராக எழுதினார் நன்மாறன் திருநாவுக்கரசு. அதன் தொகுப்பு இந்த நூல்.

மனிதர்களுக்கு இறக்கை முளைக்குமா
நன்மாறன் திருநாவுக்கரசு
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை : ரூ.120

SCROLL FOR NEXT