தனியாக வாழலாம்; உள்ளம் தனித்து வாழாது. அதற்குத் துணை தேவை. அன்புசெய்தல் அவசியம். ஆசையாக அது உள்ளத்தில் ஊறும். மணற்கேணிபோல் மனக்கேணி. அதைத்தான் உய்த்துணர்ந்து எழுதி இருக்கிறார் யுகபாரதி. பாரதி, தன் கவிதையில் பாம்புப் பிடாரனைப் பாடினார். பாம்பாட்டியைப் பிடாரன் என்பர். யுகபாரதி, ‘மஹா பிடாரி’ என்கிறார். அது ஒரு மெய்யன்பு. அடங்காப் பிடாரி என்பது இந்நாளில் வசவுச் சொல். ஆதிகாலத்தில் அஞ்சாதவள் என்பதே அதன் பொருள். வீரமகளைக் குறிக்கும் சொல் பின்னர் வசையானது.
பாரதியின் பிடாரன் தொடங்கி, யுகபாரதியின் ‘மஹா பிடாரி’ வரை தமிழ்க் கவிதை அகலப் பருத்துள்ளது. ‘மனுஷக்குமாரியல்லள் மஹா பிடாரி’ எனப் பாடுகிறார் யுகபாரதி. பிடாரி என்பது வேட்டைத் தெய்வம். நாகர் வழிபாட்டின் எச்சம். பீட ஹரி என்றால் அல்லல் அறுப்பவள்.
பாண்டியனின் அவையில் நீதிகேட்டுத் தலைவிரிக் கோலமாக நின்ற கண்ணகியைக் கண்ட வாயிலோன், பிடாரி போல் தோற்றம் கொண்டுள்ளாள் என அரசனிடம் பொருள் கூறினான். சிலப்பதிகாரத்தில் பிடாரி, நீதியின் அடையாளம். அறத்தின் உரு என அறிகிறோம். ராஜராஜன் காலம் வரை பிடாரி தெய்வமகள்தான். அவள் ஆதிகாலத் தெய்வம். ஆதியில் காதல் இருந்தது. வேத மார்க்கத்தில் ஏவாள் இருந்ததைப் போல் தமிழ் நிலத்தில் பிடாரி இருந்தாள்.
ஆகவே ‘பிடாரிக்கோவிலுக்குப் பித்தளை விளக்கை நேர்ச்சையாகக் கொடுப்பேன்’ எனக் கவி பாடுகிறார் யுகபாரதி. காதலை ஆதி நெருப்பு என்கிறார். காமம் என்பது தீ. பசி, வயிற்றுக்கு மட்டுமன்று; உடலுக்கும் உண்டு. யுகபாரதிக்குப் பிடாரி காதல் உருவகம் என்றால், பாரதிதாசனுக்குக் காதல் எட்டிக்காய் படிமம். சிலநேரம் செங்கரும்பு. இல்லையெனில் எதிர்பாராத முத்தம். காதலிக்குக் கடிதம் எழுதிய அவர், ‘வீட்டில் மான், மயில், பசு நலம்’ என எழுதிச் செல்கிறார். ஆக, காதலன் சுகம் இல்லை என்பது உட்பொருள்.
இவருக்கு ‘கடைக்கண் கன்னியர் காட்டிவிட்டால் மாமலை ஓர் கடுகாகிவிடும்’. அவள் விழிப் பார்வை விழுந்தால் சிரஞ்சீவியாவார் அவர். யுகபாரதியின் காதல், பிடாரியாக அலைகிறது; காக்கையாகக் காத்திருக்கிறது; மைனாவாக மாறுகிறது; கெளளியாகக் கத்துகிறது; மேலும் குருவி, வெள்ளெலி, மருதாணி, முருங்கையாகத் தோன்றி மறைகிறது. காதலியை வேவு பார்க்கப் பகலில் காக்கையாகக் காவல்காக்கும் யுகபாரதி, இரவு ஆந்தையாக மரக்கிளையில் உட்கார்ந்திருக்கிறேன் என்கிறார். காக்கை முதுகுலத்தவர் சாயை; ஆந்தை இருண்மை யின் அடையாளம்.
பறவைகளை முதுகுலமாகக் கருதும் வழக்கம் தமிழரின் தொன்மை என்கிறார் ஜேம்ஸ் பிரேசன். காக்கை கரைவது விருந்தினர் வருகைக்காக; கூகை உலவுவது அச்சத்தின் குறியீடாக. காகமும் கூகையும் அடித்தட்டு மக்களின் அடையாளம். ஒரே நேரத்தில் காதல் விருந்தாகவும் விஷமாகவும் மாறுவதை யுகபாரதி வரிகள் பேசுகின்றன. யுகபாரதி தனது பாடல்களில் தன்னுணர்ச்சி இல்லை என்கிறார். பொது உணர்ச்சி தன் எழுத்தின் மையம் என்பது அவரது வாதம். தன்னுணர்ச்சி என்பதே பொது உணர்ச்சிதான் என்கிறார் ஹங்கேரி இலக்கியத் திறனாய்வாளர் மொரோட்டி லாஜோஸ்.
‘தன்னுணர்ச்சிப் பாடல்கள் இலக்கிய அந்தஸ்து பெற்று விளங்குவதற்குக் காரணம் அவை தனி மனிதனுடைய அனுபவங்களுக்கும் தனி ஒருவருக்கும் மட்டுமே உரிய உணர்வுகளுக்கும் வடிவம் கொடுக்காமல் மனிதருக்குப் பொதுவான உணர்வுகளுக்கும் அனுபவங்களுக்கும் உருவம் கொடுப்பதேயாகும்’ என்பது அவர் முன்வைத்த கோட்பாட்டின் ஒரு பகுதி. நவீன காலத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று, எந்தப் பொருளும் கவிதைக்குரியதே என்ற எண்ணம் செல்வாக்குப் பெற்று வந்திருப்பதுதான் என்கிறார் கைலாசபதி. விழுமிய பொருளைக் கவிஞன் இன்று தேடித் திரிய வேண்டியதில்லை.
அதன் ஒரு பகுதிதான் வழக்குத் தமிழ்ச் சொற்கள். அதைப் பல கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார் யுகபாரதி. இது விடுதலை வெளிப்பாடு. குறிப்பாகச் சொன்னால், ‘மஹா பிடாரி’ தன்னுரைப் பத்தியில் சங்கப் பாடல் வரிகளை நாட்டார் வழக்கில் எழுதிப் பார்க்கும் ஆவல் தனக்கு மிகுதி என்கிறார் யுகபாரதி. வள்ளுவர் குறளை, ‘குருளை’ எனும் சொல்லை புதிய நோக்கில் ஆய்ந்து செல்கிறார். அவர் பார்வை அறிவார்ந்த வாசிப்பாக மிளிர்கிறது. மரபின் நீட்சியை ஏற்கும் யுகபாரதி வழுவை நீக்க, துணிந்து பேசுகிறார். யோசித்துப் பார்த்தால் மனித குலத்தின் முதல் மார்க்கம் காதல். ஆகவே மையல் மிகும் பல கவிதைகளை யுகபாரதி, வழக்குச் சொற்களைக் கொண்டு இந்தத் தொகுப்பில் பசலைப் பந்தலாகப் போட்டு விருந்தோம்பல் செய்துள்ளார்.
மஹாபிடாரி
யுகபாரதி
நேர்நிறை பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9841157958
- தொடர்புக்கு:thonmam@gmail.com