பெற்றோரால் பாராட்டிச் சீராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளின் அக வளர்ச்சியையும் புற வளர்ச்சியையும் அறிவியலின் துணை கொண்டு அலசி ஆராய்வதே ‘பதின் பருவ வாழ்வியல்’ நூலின் சாரம். நூலாசிரியர்கள் முனைவர் பெ.சசிக்குமார், எம்.ஜோதிமணி இணையர் அதனை செவ்வனே இந்நூலில் பதிவு செய்திருக்கின்றனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களின் கதகதப்பில் பிள்ளை வளர்ப்பின் நெருக்கடிகள் எதுவும் பெற்றோர்களுக்கு இருந்ததில்லை. ஆனால், இன்றைக்குத் தனிக்குடித்தனங்களே நடைமுறை யதார்த்தம் என்னும் சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் தடுமாற்றங்களுக்கும் இந்நூல் உதவும்; பதின் பருவ குழந்தைகளுக்கும் இந்நூல் உதவும் என்பதே இந்நூலின் சிறப்பு.
பதின் பருவ வாழ்வியல்
முனைவர் பெ. சசிக்குமார்,
M.ஜோஜிமணி
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.110
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
தமிழ்ப் பற்று செல்ல வேண்டிய திசை: பேராசிரியர் தங்க.ஜெயராமன் ஆங்கிலப் பேராசிரியராக 45 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர். அதேநேரம் க்ரியா தற்காலத் தமிழ் அகராதி, தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி எனத் தமிழ் மொழி சார்ந்தும் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார். தற்காலத் தமிழ், அதன் நடைமுறைகள், எளிய மக்களின் மொழிப் பங்களிப்பு போன்ற பல அம்சங்கள் தொடர்பாகத் தொடர்ச்சியாகக் கவனப்படுத்தி வருபவர்.
தமிழ்நாட்டில் ஆங்கிலக் கல்வி படும் பாடு, கலைப் பாடங்களைச் சமூகம் புறக்கணிக்கும் முறை, பாடநூல்கள் கைகொண்டிருக்கும் தீவிரத் தமிழ் மொழிநடை, கலைச்சொல்லாக்கக் குழப்பங்கள் போன்ற பல அம்சங்கள் தொடர்பாக அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினைகளைப் பற்றி இந்த நூலில் எழுதியுள்ளார்.
அவருடைய தமிழ் மொழிநடை தனித்துவமானது; வட்டார/ஆழம் பொதித்த அரிய சொற்களைக் கொண்டு கட்டுச்செட்டாக எழுதப்பட்டது. தமிழ் மொழி தொடர்பான நம் சமூகத்தின் செயல்பாடுகள் தீவிரமாக இருந்தாலும், நம் மொழியைப் புரிந்துகொள்வதில் அதே தீவிரம் காணப்படவில்லை.
இரண்டும் இணையாகப் பயணிக்க வேண்டியவை என்பதை பேராசிரியர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார். நம் மொழி இயல், மொழி பற்றிய தத்துவத்துடன் மொழிப் பற்று இணைய வேண்டும் என்கிறார். மொழியைக் குறிப்பிட்ட காலத்தில், வகையில் அடைத்து வைக்க விரும்புகிறோம். ஆனால், மொழி என்பது ஒரு பேராறைப் போன்றது. அதன் தடமும் போக்கும் பாயும் நீரும் காலந்தோறும் மாறக்கூடியது. மக்களுடன் கைகோத்து நடக்கும் மொழியே நீடிக்கும் - ஆதி
மொழியும் மொழி புனையும் கோலங்களும்
தங்க.ஜெயராமன்
க்ரியா
விலை: ரூ.225
தொடர்புக்கு: 72999 05950