ஒரு பொதுவினா: ‘உலகத்தில் யாருக்கும் நடக்காததா உனக்கு நடக்கிறது, நீ மட்டும் என்ன உசத்தி?’. ‘ஆமாம், எனக்கு நான் உசத்திதான்’ என்று அடித்துச் சொல்பவர்கள் ‘அந்தி வானின் ஆயிரம் வெள்ளி’ தொகுப்பின் கதை மாந்தர்கள். ஒரு சறுக்கலுக்குப் பிறகு, புழுதியில் வீழ்ந்த பிறகு, நிதானமாக எழுந்து, கை, கால் மூட்டுகளைத் தட்டி விட்டுக்கொண்டு, சுற்றி நின்று பார்க்கும், சிரிக்கும் முகங்களைப் பொருட்படுத்தாமல், சறுக்கிய வழியிலேயே மீண்டும் ஏறும் அபாய விரும்பிகள் இவர்கள்.
சில சமயங்களில், முணு முணுத்துக்கொண்டோ, கண்ணீரைத் துடைத்துக்கொண்டோ, சேர்ந்து சிரித்துக்கொண்டோ, காப்பியோ டீயோ ஒரு குவளையை கையில் ஏந்தித் திரும்பி ஏறும் வழியில் ஒரு துணைக்கரம் நீள்வதுண்டு. அப்படி நீளும் கரங்கள் இந்தக் கதைகளை உச்சிக்கு அழைத்துச் செல்கின்றன. பழ ஜூஸ் வாங்கித் தர விரும்பும் சவரியும், பக்கத்து வீட்டுக்குள் வந்து காப்பி கலக்கும் சீதாவும் நட்சத்திரங்களே.
தமயந்தியின் சொற்சிக்கனம் அபாரமானது. ‘‘எவன் தொட்டாலும் எனக்காக ஒருத்தன் கதவோரமா குத்த வச்சிருப்பான்னு அவளால சொல்ல முடியல...’’ ஒரு முழு வாழ்க்கையை, அதன் குழப்பங்களை, சறுக்கல்களை, தழும்புகளை இந்த வரியைக் கொண்டு விளக்கிவிட அவரால் முடிகிறது. குழந்தைக்குப் பிடித்தமான உணவைக் கொடுத்துவிட்டு, “அது பசியோடு சொர்க்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறது” என்று கண் முன்னால் குழந்தையை உட்கார வைத்து, அடுத்த வரிக்குக் கடந்து போகவிடாமல் நின்று ரசிக்க வைக்க அவரால் முடிகிறது.
இந்தச் சிறுகதைகளில்இருப்பவை எந்தக் கேள்விக்கான பதில்களும் அல்ல; சின்னஞ்சிறு வெளிச்சங்கள். கசப்பும் ஏமாற்றமும் முதுகில் தொற்றிக்கொண்டே இருந்தாலும், பிடிவாதமாகத் தன் வாழ்க்கையைத்தான் வாழ்ந்து பார்க்க எத்தனிக்கும் மனிதர்களின் கதைகள் இவை. ‘மீச...’ கதையின் செபாஸ்டியனும், பிடிமானம் இற்றுப்போய்ச் சரியும் ஒருத்தியை உடனடியாகத் தன் வாகனத்தில் ஏற்றிக் கொள்ளும் ‘இப்படிக்கு வாழ்க்கை’ கதையின் சவரியும், இவள் செய்வதெல்லாம் பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே தாங்கிப் பிடித்துக்கொள்ளும் ‘ஒளியின் வெளிச்சக்கிளைகள்’ கதையின் சீதாலமியும், தன்னைப் பிறழ்த்தியது இவளைச் சீண்டிவிடக்கூடாது என்ற தெளிவு நிரம்பிய ‘மரணமென்பது ஒரு சொட்டு அமிலத்துளி’ கதையின் அமலியும், சற்றும் உயிர் குன்றாமல் இந்தக் கதைகளில் வளைய வருகிறார்கள்.
ஒரு மர நிழல் கிடைத்துவிடாதா என்ற எதிர்பார்ப்பும், இல்லாவிட்டாலும்தான் என்ன, நாளை மீண்டும் ஓடுவோம் என்ற எளிய துணிவுமே ‘அந்தி வானின் ஆயிரம் வெள்ளி’ தொகுப்பில் மாறி மாறித் தென்படும் காட்சிகளாக இருக்கின்றன. தன்னியல்பாக மனிதர்களை நம்ப விரும்பும் மனிதர்கள், தோற்றாலும், வீழ்ந்தாலும் வசீகரிக்கிறார்கள்.
இரண்டு வரிகள் மட்டுமே காதில் விழுந்த பாடலின் மூன்றாம் வரியாக இந்தக் கதைகளும், மனிதர்களும் வாசித்து முடித்த பின்னும் உடன் வருவதை உணர முடிகிறது - தென்றல் சிவகுமார்
அந்தி வானின் ஆயிரம் வெள்ளி
தமயந்தி
எழுத்து பிரசுரம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 8925061999
எலிகளின் உலகம்: சாகசம் என்றால் பிடிக்காத குழந்தைகள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. சாகசம் என்றால் தமிழில் துணிகரம் என்று சொல்லலாம். துணிவு மட்டுமல்ல நல்ல கூர்மையான அறிவும் சாகசம் செய்யத் தேவையான அடிப்படைக் குணங்களில் ஒன்று. இவை இரண்டும் மட்டும் சாகசத்திற்குப் போதுமா என்ன? இல்லை, இவையிரண்டையும் விட அவசியத் தேவை அச்சம்தான்.
சாகசம் செய்ய பயம் தேவையென்றால் அது உளறலாகத் தோன்றுகிறதா? இந்த முக்கியமான விஷயத்தைக் குழந்தைகளுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு உரிய வகையில் சொல்லும் கதையே ‘எலியின் வேட்டை’ எனும் சிறார் நாவல். இது விஷ்ணுபுரம் சரவணனின் புதிய நூல். பொதுவாக இங்கே புழங்கும் கதைகள் எல்லாமே மனிதர்களுக்கானவை மட்டுமே. ஆகவே கதையின் போக்கு, கதையின் முடிவு, அக்கதை உணர்த்தும் கருத்து என அனைத்துமே மனித வர்க்கத்தினரையே முன்னிறுத்துவதாக இருக்கும்.
உதாரணமாக காகம் வந்து பாட்டியின் கடையில் உரிய காசைக் கொடுத்து, அவர் பொட்டலம் கட்டித் தரும் வடையை வாங்கிப் போக வேண்டும். மாறாக அது தங்கள் குலவழக்கப்படி கண்ணில் பட்ட உணவைக் கொத்திக் கொண்டு போய்க் கிளையில் அமர்ந்து உண்ண நினைத்தால் அதற்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிடுவோம் நாம்.
காகத்தின் அகராதியில் திருட்டு என்றொரு வார்த்தை இருக்க முடியுமா என்பதைப் பற்றியெல்லாம் நமக்கு என்ன கவலை? மனிதர்களாகிய நமது அகராதியில் உள்ள பொருளின்படியே விலங்குகளையும் வகைப்படுத்தி, திருட்டுக் காக்கை, தந்திர நரி, வீரமான சிங்கம் என்றெல்லாம் முத்திரை குத்தி, நம் கதையுலகெங்கும் உலவ விட்டிருக்கிறோம்.
மாறாக மனிதர்களையே பொருட்படுத்தாத, முழுக்க முழுக்க எலிகளின் பார்வைக் கோணத்திலேயே உருவாகி வந்திருக்கும் உற்சாகமான நாவல் இது. இந்நூலை சுயமாக வாசிக்கத்தெரிந்த குழந்தைகள் அவர்களே வாசித்து மகிழலாம் அல்லது பெற்றோர் வாசித்துச் சொல்வதாக இருந்தால் குரலை ஏற்றி இறக்கி, வானொலியில் ஒலிச்சித்திரம் கேட்போமே அப்படி வாசித்துக் காட்டினால் ரசித்துக் கேட்பார்கள்.
குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுப்பதோடு மட்டுமல்லாது, அவர்கள் கற்றுக் கொள்ளவும் இதில் விஷயங்கள் உண்டு. சாகசங்களை விரும்பும் பிள்ளைகள், அவர்களின் பாதுகாப்பைப் பற்றியே சதா சர்வகாலமும் கவலைப்படும் பெற்றோர் என இருதரப்புக்கும் சரியான இடம் கொடுத்து, மிகுந்த சமநிலையோடு எழுதப்பட்டிருக்கு இந்த நாவல் குழந்தைகளுக்குக் கோடை விடுமுறைக்கு ஏற்ற பரிசாக இருக்கும் - லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
எலியின் வேட்டை (சிறார் நாவல்)
விஷ்ணுபுரம் சரவணன்
புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
விலை: ரூ.180,
தொடர்புக்கு: 044 2433 2924