இலக்கியம்

வெக்கை மண்ணின் கதைகள்

செய்திப்பிரிவு

இப்பெருநிலம் எங்கும் எழுதிய, எழுதப்பாடாத கதைகள் பெருமளவு கிடக்கின்றன. அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றைச் சொல்லிச் செல்கின்றன. அல்லது சொல்ல வருவதாக இருக்கின்றன. எழுதுபவர்களைப் போலவே, ஒவ்வொரு பகுதி மண்ணுக்கும் ஒரு கதை இயல்பு இருக்கிறது. அதிலும் கரிசலின் புழுதிக்கு மட்டும் தனித்துவம் உண்டு.

அது, கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி விதைத்த மண்ணில் இருந்து தொடரும் மரபு. இந்த வெக்கை மண்ணின் கதைகளைப் புதியவர்களின் மொழியில் ‘கரிசல் கதைகள்’ என வாசிப்பது நல் அனுபவம். கரிசல் இலக்கியக் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது.

கல்லூரி மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இக்கதைகள், மனித மனங்களின் வெளிப்பாடுகளை யதார்த்தமாகப் பேசுகின்றன. சில கதைகளின் வழியே கரிசலின் மொழியும் வெக்கையும் நமக்குள் ஊடுருவது இத்தொகுப்பின் சிறப்பு. இதில் எழுதியிருக்கும் புதியவர்களில் சிலரிடம் இருந்து, எதிர்காலத்தில் காத்திரமான படைப்புகள் வெளிவரும் சாத்தியங்கள் தெரிகின்றன - ஏக்நாத்

கரிசல் கதைகள்
மாவட்ட நிர்வாக வெளியீடு
விருதுநகர்

வாழ்வே ஒரு வரலாறு: பாரதி ஆர்வலரும் பேச்சாளருமான கிருங்கை சேதுபதியின் முயற்சியினால் இந்த நூல் கனிந்திருக்கிறது. பாரதி குறித்தும், பாரதியின் படைப்புகள் குறித்தும் ஆய்வுசெய்து பலரும் நூல்களை எழுதினாலும், பாரதியின் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படாதது ஒரு குறையாகவே இருந்தது. அக்குறையைக் களையும் வகையில் விடுபடல்கள் இல்லாமல் கவனமாகத் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.

1922இல் நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் எழுதிய ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்’, வி.சக்கரை செட்டியார் எழுதிய ‘ராஜீய வாழ்வு (1922)’, ஆக்கூர் அனந்தாச்சாரியின் ‘கவிச்சக்கரவர்த்தி பாரதி சரிதம் (1936)’, பாரதியாரின் மனைவியான செல்லம்மாள் பாரதி எழுதிய ‘பாரதியார் சரித்திரம் (1941)’, வ.ரா எழுதிய ‘மகாகவி பாரதியார் (1944)’, வ.உ.சிதம்பரனார் எழுதிய ‘வி.ஓ.சி.கண்ட பாரதி (1946)’, தன் குருவான பாரதியார் படைப்புகள் குறித்து அவரது சீடரான பாரதிதாசன் எழுதிய கட்டுரைகள், ரா.கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார் (1947)’, யதுகிரி அம்மாள் எழுதிய ‘பாரதி நினைவுகள் (1954)’, சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதிய ‘பாரதியார் புதுமைக் கண்ணோட்டம் (1982)’ ஆகிய 10 வரலாறுகளும் கால வரிசைப்படி நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளன - மு.முருகேஷ்

மகாகவி பாரதி வரலாறு
தொகுப்பு: கிருங்கை சேதுபதி
கவிதா பப்ளிகேஷன்
விலை: ரூ.1,200/-
தொடர்புக்கு: 7402222787

நூல் வரிசை

சுற்றுச்சூழல் அறிவியல்
ஜெகதா
சத்யா எண்டர்பிரைசஸ்
விலை: ரூ.125
தொடர்புக்கு: 044 45074203

சுற்றுச்சூழல் குறித்து அக்கறை பெருகிவரும் சூழலில் அது குறித்த அறிமுகத்தை இந்த நூல் அளிக்கிறது.

திராவிடக் கட்சிகள்
வீ.பழனி
அ ஆ இ பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 6381648023

திராவிட இயக்கத்தின் தோற்றம், அது தேர்தலை எதிர்கொண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது, அதன் வெற்றி எனப் பல விஷயங்களை இந்த நூல் பேசுகிறது.

SCROLL FOR NEXT