இலக்கியம்

போர் நடுவினில் ஒரு காதல் | நூல் வெளி

மு.இராமனாதன்

ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய கீதம் இருக்கும். தேசியப் பறவை, தேசிய மிருகம் என்பனவும் இருக்கும். தேசிய நாவல் இருக்குமா? அஜர்பைஜானில் இருக்கிறது. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையில் அமைந்திருக்கும் நாடு அஜர்பைஜான். இது சோவியத் ஒன்றியத்தின் அங்கமாய் இருந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் (1991) பிறகு தனி நாடானது.

இந்த நாவலின் கதை அதற்கெல்லாம் வெகு காலம் முன்பு முதல் உலகப் போர் (1914-1918) காலக் கட்டத்தில் நடக்கிறது. ஜார் மன்னரின் ஆட்சிக் காலத்தில், ரஷ்யாவின் ஆளுகையின் கீழ் இருந்தது அஜர்பைஜான். அங்கு ஒரு பள்ளிக்கூடத்தில் ‘அலியும் நினோவும்’ சந்தித்துக்கொள்கிறார்கள்.

அலி கான் ஷிர்​வான்​ஷிர், ஒரு அஜர்​பைஜானி இளைஞன். முகம​தி​யன். செல்​வக்​குடி​யில் பிறந்​தவன். அவனது முன்னோர் போர்க்​களத்​தில் வீரமரணம் அடைந்​தவர்​கள். நினோ கிபி​யானி, அண்டை நாடான ஜார்​ஜியப் பெண். கிறிஸ்​து​வள். ஓர் அரச குடும்பத்​தில் பிறந்​தவள்; இளவரசி. நினோ​விற்கு மரங்கள் பிடிக்​கும். அவை ‘நிறைவாழ்​வின் உருவகங்​கள்’. மாறாக அலி பாலை​வனத்தை நேசிப்​பவன்.

அலி தரையில் அமர்ந்து உணவு உண்பவன். ஆனால், நினோ மேசை​யில் அமர்ந்து கத்தி, முள்​கரண்​டி​யுடன் சாப்​பிடு​பவள். அவள் அலியிடம் ஆசியத்​தன்மை இருப்​ப​தாகச் சொல்​கிறாள். அப்படிச் சொல்​வதற்கு அவளிட​மிருக்​கும் ஐரோப்​பி​யத்​தன்​மை​தான் காரணம். ஜார்​ஜியா ஐரோப்​பா​வின் வாசலாக இருக்​கிறது. ஆனாலும் அந்த இரண்டு இளம் உள்ளங்​களும் காதல் வயப்பட இவை எதுவும் தடையாக இல்லை.

ஆனால், காதல் கைகூடு​வதற்கு ‘மதம், வளர்ப்பு, வம்சாவளி வேறு​பாடு​கள்’ தடையாக இருக்​கின்றன. நினோ, மதம் மாறச் சம்ம​திக்க​வில்லை. எனினும் இந்தத் தடைகளைக் காதலர்​களால் தாண்ட முடிகிறது. ‘இரண்டு முதன்​மைக் குடும்​பங்​களிடையே கலப்புத் திரு​மணம்’ நடத்தத் தந்தை​மார் சம்ம​திக்​கின்​றனர். ஆனால், கதை இந்த இடத்​தில் முடிவ​தில்லை.

1917இன் ரஷ்யப் புரட்சி அஜர்​பைஜானை​யும் புரட்​டிப்​போடு​கிறது. அந்தப் புரட்​சி​யால் நிலை தடுமாறிய ரஷ்யா​விட​மிருந்து அஜர்​பைஜான் விடுதலை பெற்று, 1918இல் அஜர்​பைஜான் ஜனநாயகக் குடியரசு என்று பெயர் சூட்​டிக்​கொள்​கிறது. ஆனால், அது அதிக காலம் நீடிக்க​வில்லை. சோவியத் ரஷ்யா 1920இல் அஜர்​பைஜான் மீது படையெடுத்து அந்த நாட்டை மீண்​டும் ரஷ்யா​வுடன் இணைத்​துக்​கொள்​கிறது.

இந்தப் போர்​களும் அரசியல் மாற்​றங்​களும் உறவு​களைச் சோதனைக்கு உள்ளாக்கு​கின்றன. ஒரு நண்பன் துரோகம் இழைக்​கிறான். அதற்கான சம்பளத்தை அலி வழங்​கு​கிறான். குடும்​பங்​களுக்​குள் ‘ரத்தப் பகை’ உருவாகிறது. அலி ஒரு மலைக்​குகை கிராமத்​தில் கரந்​துறை​கிறான். நினோ பின் தொடர்​கிறாள்; மணமுடிக்​கிறார்​கள்.

கதை வேகம் பிடிக்​கிறது. அலியும் நினோ​வும் அண்டை நாடான பாரசீகத்​திற்கு (ஈரான்) இடம் பெயர்​கிறார்​கள். அஜர்​பைஜான் மீதான முற்றுகை தளர்​கிறது. நாடு திரும்​பு​கிறார்​கள். ஆனால் விரை​வில் ரஷ்யா, அஜர்​பைஜான் மீது படையெடுக்​கிறது. நினோவைக் குட்டி மகளுடன் ஜார்​ஜியா போகும் ரயிலில் ஏற்றியனுப்பு​கிறான் அலி.

அவன் போகவில்லை. யுத்த பூமியை​விட்டு ஒரு போர் வீரனால் எப்படிப் போக முடி​யும்? பயணிதரன் தனது மொழிபெயர்ப்​பின் வாயிலாக மூலத்​தின் ஆன்மாவை​யும் வசீகரத்​தை​யும் ஒவ்வொரு வரியிலும் தக்க​வைத்​துள்ளார். இந்தக் கதை போரை​யும் காதலை​யும் மட்டுமல்ல, ஒரு காலகட்​டத்​தின் இனவரை​வியலை​யும் வாழ்க்கை​யை​யும் உள்ளடக்கி​யிருக்​கிறது.

ஒட்டகங்கள் அளவான அடிகளுடன் தலையை ஆட்டியபடி செல்​கின்றன. குதிரைகள் நீண்ட சீரான அடிகள் வைத்து வேகமாக ஓடுகின்றன. ஆசியப் பெண்கள் உள்முற்​றங்​களைத் தாண்டு​வ​தில்லை. ஐரோப்​பியப் பெண்கள் வரவேற்​பறை​களில் வெள்​ளைக் கையுறை அணிந்து விருந்​தினருடன் கை குலுக்கு​கிறார்​கள்.

போர் வீரர்கள் எதிரி​களின் கண்களில் கண்ணீரைப் பார்க்க ஆசைப்​படு​கிறார்​கள். தொன்​மங்​களும் சடங்​கு​களும் பண்​பாட்டுக் கூறுகளும் நாவலின் ஊடும் பாவுமாக நெய்​யப்​பட்​டிருக்​கின்றன. இது ஏன் தேசிய நாவல் என்று ​கொண்​டாடப்​படு​கிறது என்பது இதை வாசித்து ​முடிக்​கும்​போது ​விளங்​குகிறது.

அலியும் நினோவும்
குர்பான் சையத் (தமிழில்: பயணி தரன்)
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.370
தொலைபேசி: 04652 278525

- தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

SCROLL FOR NEXT