இலக்கியம்

கண்ணம்மா | அகத்தில் அசையும் நதி 8

சு.தமிழ்ச்செல்வி

தன்னுடன் நடவு நடும் பெண்கள் எல்லாரும் சரசரவென நட்டுக்கொண்டு போகிறார்கள். ஆனால், கண்ணம்மாவால் ஒரு நாற்றைக்கூட வயலில் ஊன்ற முடியவில்லை. ஊன்றிவிட்டுக் கையை எடுப்பதற்குள்ளாக அது சேற்றைவிட்டுக் கிளம்பி மேலே வந்து தண்ணீரில் மிதக்கிறது.

‘அய்யோ தெய்வமே, இது என்ன கொடுமை?’ எனத் துடித்துப் பிடித்து எழுகிறாள். தான் கண்ட கெட்ட கனவிலிருந்து விடுபடும் முன்பாக மருத்துவமனையில் இப்படித் தூங்கிவிட்டோமே என வருந்தி பிள்ளையைத் தடவிப் பார்க்கிறாள். அவன் மூச்சற்று வதங்கிய வாழைத்தண்டுபோல் கிடக்கிறான்.

அவ்வளவு தான் கண்ணம்மா மருத்துவமனையே கிடுகிடுக்கும்படி அலறுகிறாள். முட்டி மோதுகிறாள். தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறாள். விழுந்து புரள்கிறாள். கொஞ்சநேரம் எல்லாரும் அவளுக்காக இரக்கப் படுகிறார்கள். அழாதே என்று ஆறுதல் சொல்கிறார்கள். பிறகு வலுக் கட்டாயமாக மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்படுகிறாள்.

மாரியப்பன் தன் அம்மாவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி ருக்கிறான். அவளும் ஏமாற்றாமல் நாலேகால் பேருந்திலேயே வந்து சேர்ந்தாள். சற்றுக் கனமான காதறுந்த பையொன்றைச் சுருட்டிப் பிடித்திருந்தாள். பைக்குள் பாத்திரம் இருந்தது. எந்த நேரத்தில் எழுந் தாளோ... சோறு வடித்து, புளிரசம் வைத்துக் கிளறிக்கொண்டு வந்தி ருந்தாள். பிள்ளைக்கு மட்டும் கடை யில் இட்லி வாங்கிக் கொடுத்துக் கொள்ளலாம் என்பது அவளின் கணக்கு.

தாயைக் கண்டவுடன் தேம்பித் தேம்பி அழுதான் மாரியப்பன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “யம்மவன் பெயிட்டாம்மா” என்று ஓங்கி ஓங்கித் தலையில் அடித்துக் கொண்டான். ஐயோ என ஒரு பாட்டம் அழுது களைத்தாள் கிழவி. மருத்துவமனையில் துப்புரவுப்பணி செய்யும் ஒருவன் வந்து விரட்டினான்.

மகனைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான் மாரியப்பன். மருமகளைக் கைதாங்கி எழுப்பி நடக்க வைத்தாள் கிழவி. மாரியப்பனின் தோளில் துவண்டு கிடக்கும் தன் மகனின் முகத்தை ஓடிப்போய் ஏந்திப்பிடிப்பதும் பின் கீழே விழுந்து அழுது புரள்வதுமாக தெரு நெடுகிலும் ஓலமிட்டவாறே சென்றாள் கண்ணம்மா.

பேருந்து நிலையம் வந்த மாரியப்பனுக்கு ஊருக்குச் செல்லும் வழி புரியவில்லை. “பணம் கொண்டாந்தியாம்மா?” “பயிஞ்சி ரூவா இருக்குடா” கார் எடுத்துக்கொண்டு போக இருநூற்றைம்பது ரூபாயாவது வேண்டும். ஆட்டோ எடுத்தாலுமேகூட நூற்றைம்பது ரூபாய்க்குக் குறைந்து வர மாட்டான்.

பதினைந்து ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? திகைத்துப்போய் சிறிது நேரம் அப்படியே நின்றான். பின், “அம்மா நீங்க ரெண்டியரும் கொஞ்ச நேரம் அழுது ரெகள பண்ணாம வாங்க. நம்ம பஸ்சுலயே பெயிருவம்” என்றான். கிழவிக்கும் அதுவே சரியெனத் தோன்றியது. மருமகளின் தலையைக் கைகளால் வாரிக் கட்டிவிட்டாள்.

“கையில காசில்ல. செத்த புள்ளய பஸ்சுல ஏத்த மாட்டானுவ. நீ அளுவாம வந்தியன்ன பஸ்சுலயே பெயிறலாம். இல்லாட்டி இஞ்சயே கெடக்கவேண்டியாம். அளுவாம ஏறி வா.” மருமகளை பஸ்ஸில் ஏற்றிவிட்டுத் தன் ஓரமாக உட்கார வைத்துக்கொண்டாள். பிள்ளையுடன் மாரியப்பன் இரண்டு இருக்கைகள் தள்ளி மறுபுறத்தில் உட்கார்ந்துகொண்டான்.

தூங்கும் பிள்ளையை அணைப்பதுபோல அணைத்துப் பிடித்திருந்தான். துண்டால் உடலை போர்த்திவிட்டி ருந்தான். துக்கத்தைத் தொண்டைக்குள் அடக்கிக்கொண்டு பிள்ளைக்கும் சேர்த்து மூன்றரை டிக்கெட் எடுத்தான். கண்ணம்மாவைத் தன் பிடிக்குள் வைத்திருந்தாள் கிழவி. மிகவும் களைத்துக் காதடைத்துப் போயி ருந்தாள் கண்ணம்மா. அழுதழுது முகம் வீங்கிப்போயிருந்தது. நேற்று தெறித்த சேறு அவளது உடம்பிலும் துணிமணியிலும் புள்ளி புள்ளியாகக் காய்ந்து போயிருந்தது. நிமிர்ந்து உட்காரவும் தெம்பற்று மயங்கி சரிந்துகிடந்தாள்.

பாதிவழியில் சென்றுகொண்டிருந் தது பேருந்து. கண்மூடி மயங்கிக் கிடந்தவள் திடீரென்று ஆவேசம் வந்தவளைப்போல எழுந்தாள். கிழவி சுதாரித்துப் பிடிப்பதற்குள் “ஐயோ… நாம் பெத்த தங்கமே…” அலறியபடி மகனிடம் பாய்ந்தாள் கண்ணம்மா. ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தில் நிலை தடுமாறி விழுந்ததில் எங்கோ துருத்திக்கொண்டிருந்த இரும்பு நெற்றியில் குத்தியது. அதிலிருந்து பெருகிய ரத்தம் ஒருபக்கக் கன்னம், காது, துணியை நனைத்தது. பேருந்தி லிருந்து இறக்கி விடப்பட்டார்கள். அங்கிருந்த டீக்கடைக்காரனிடம் தன்னுடைய கையறு நிலையைச் சொல்லி அழுதாள் கிழவி.

பிள்ளை செத்த மறுநாள் குடிசையின் ஓர் ஓரத்தில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பக்கத்தில் பிள்ளையின் சட்டைத் துணிகளும் அவனுடைய விளை யாட்டுப் பொருள்கள் சிலவும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றையே வெறித்துப் பார்த்தபடி சுருண்டு கிடந்தாள் கண்ணம்மா. உள்ளே நுழைந்த கிழவி மெதுவாக அவளது தோளைத் தொட்டு அசைத்தாள்.

“இப்புடியே அளுதுகிட்டு கெடந்து என்னாவப்போவுது? கையவுட்டு போன புள்ள திரும்பியா வரப் போறான்? அடஞ்சி கெடந்தா அதே நெனப்பாத்தான் இருக்கும். எல்லாருகூடவும் நடவுக்குப் போனா வேல நெனப்புல எல்லாம் மறந்துபெயிரும். வேல வெட்டி செஞ்சா மனசுக்கும் கொஞ்சம் ஆத்தியா இருக்கும். எல்லாத்துக்கும் மேல அந்த டீக்கடக்கார மவராசன் கிட்ட வாங்குனத திருப்பிக் குடுக்கனு மில்ல... எளும்பி வா. அளுதளுதும் புள்ளய அவதான் பெறணும். நம்ம பட்ட கடன நாம அடச்சித்தான ஆவணும்” என்றாள்.

கிழவியின் வார்த்தை களில் இருக்கும் உண்மையை உணர்ந்த கண்ணம்மா எழுந்து வெளியே வருவாள். தெருவில் நடவுவேலைக்குச் செல்லும் மற்ற பெண்களோடு தானும் சேர்ந்துகொள்வாள். இப்படி முடிந்திருக்கும் இந்தக் கதை. இது முற்றிலும் உண்மையாக நடந்த ஒரு நிகழ்வு. இது நடந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்போது நான் எழுத ஆரம்பித்திருக்கவில்லை. என் மகன் பிறந்திருந்த நேரம்.

ஒரு வேண்டுதலுக்காகப் பக்கத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அவனைத் தூக்கிக்கொண்டு சென்றோம். விடிகாலையில் நகரப் பகுதியி லிருந்து கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் கூட்டம் இருக்காது. மழைக்காலம் வேறு. இன்னும் தூக்கம் கலையாத, சுறுசுறுப்படையாத அதிகாலைப் பொழுதாக அது இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கைகளில் தலைகள் தெரிந்தன.

குண்டும் குழியுமான சாலையில் கடமுடாவென பேருந்து சென்று கொண்டிருந்தது. நடத்துநரும் ஓட்டுநரும் அவ்வப்போது பேசிக் கொண்டு வந்தார்கள். அதைத் தவிர பேருந்துக்குள் வேறெந்த சத்தமும் இல்லை. பேருந்து அந்த ஊரை வந்தடைந்தபோது. சற்று வெளிச்சம் பரவியிருந்தது. குழந்தையைத் துணியால் சுற்றிக் கவனமாக நான் பேருந்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து தபதபவென ஓடிவந்த பெண் என்னை உரசிக்கொண்டு ஓடினாள். அவளது கால்களுக்குப் படிக் கட்டும் தெரியவில்லை. தரையும் தெரியவில்லை. தடுமாறி சாலையோரம் விழுந்தாள். என்ன ஏதென்று மற்றவர்கள் விளங்கிக்கொள் வதற்குள் அவளே எழுந்தாள்.

நெற்றியில் கூரான கல் குத்தி அதிலிருந்து ரத்தம் பெருகியது. உணர்வு இல்லாதவளைப்போல இரண்டு கைகளையும் பக்கவாட்டில் விரித்து நீட்டி சிறுவர்கள் அக்கரம் சுற்றுவதைப்போல வேகமாகச் சுற்றி விழுந்தாள். அவளுடன் வந்த வயது முதிர்ந்த பெண்ணொருத்தி கையில் துணிப்பையுடன் பரிதவித்து அப்பெண்ணின் பக்கத்தில் போய் நின்றாள். அவர்களுக்குப் பின்னால் இறங்கியவனின் தோளில் துவண்டு கிடந்தான் பிள்ளை. துணியைப் போட்டு முழுவதுமாக மூடியிருந்தான்.

தன்னைப் பரிதாபமாகப் பார்த்த அந்த முதியவளிடம் எப்படியாவது சமாளித்து அழைத்து வா என்பது போல சைகையால் சொல்லிவிட்டு வேகவேகமாகத் தெருவுக்குள் இறங்கி நடந்தான். ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் அப்போதுதான் எல்லாம் தெரியவந்ததுபோல. ஏதோ முணுமுணுத்துவிட்டுப் பேருந்தைக் கிளப்பிக்கொண்டு போனார்கள். எனக்கு அதற்கு மேல் கோயிலுக்குச் செல்ல மனம் ஒப்பவில்லை. இதுவரை எத்தனையோ பார்த்திருக்கிறேன். ஆனால், வறுமையின் கொடூர முகத்தை இவ்வளவு பக்கத்திலிருந்து பார்த்ததில்லை.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

SCROLL FOR NEXT