தமிழ் வழியில் பள்ளி இறுதிவரை படித்த மாணவர்கள் ஆங்கிலம் ஒரு பாடம் என்ற அளவிலேயே படித்திருப்பார்கள். கல்லூரியில் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டும். கல்லூரி வகுப்புகளில் பேராசிரியர்களோடு ஆங்கிலத்திலேயே பேசவேண்டும் என்னும் நிலையில், 'ஆங்கிலம்' என்பதை ஒரு பாடமாகச் சுருக்கி அணுகியதற்குப் பதிலாக ஒரு மொழியாக ஆழமாகப் படிக்கத் தவறிவிட்டோமே என்று பெரும்பாலான மாணவர்கள் வருந்துவார்கள்.
அப்படி வருந்தியவர்களில் ஒருவர்தான் இந்நூலின் ஆசிரியர் ஷர்மிளா ஜெயக்குமார். ஆழமான புரிதலுடன் தான் கற்ற ஆங்கிலம் என்னும் மொழியை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எளிமையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகளை ‘இந்து தமிழ் திசையின்’ ‘வெற்றிக் கொடி’ பகுதியில் ஷர்மிளா ஜெயக்குமார் எழுதியபோது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நூல் வடிவம்தான் ‘கொஞ்சம் Technique கொஞ்சம் English’.
நூலின் தலைப்பில் இருக்கும் Technique, ஆங்கில இலக்கணத்தை எளிமையாக அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் நூல் முழுவதும் பல நுட்பங்களாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன. ‘நீ’ மற்றும் ‘நீங்கள்’ என்னும் இந்த இரு வார்த்தைக்கும் ஆங்கிலத்தில் ‘YOU’ என்று மட்டுமே எழுதவேண்டும் என்பது போன்ற ஆச்சரியங்களும், புதிய புதிய வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள உதவும் ‘வார்த்தை வங்கி’, ஒவ்வொரு பாடமும் முடிந்தவுடன் அந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கும் அட்டவணை, ஃபார்முலா அட்டவணை என ஆங்கிலம் என்னும் மொழியைப் புரிந்துகொண்டு பயிற்சி செய்வதற்கான நுட்பங்கள் நூல் முழுவதும் அணிவகுக்கின்றன.
கொஞ்சம் Technique கொஞ்சம் English
ஷர்மிளா ஜெயக்குமார்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.150
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562
இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி: உண்மையைச் சரணடைதல் என்ற எளிய நம்பிக்கைதான், இஸ்லாமியத்தின் அடிப்படை; அது பணிந்து நடக்க வலியுறுத்துகிறது. இதை இதன் நூலாசிரியர் பிஜ்லி கூறுகிறார். இஸ்லாம் ஒரு தத்துவமாகும். அது ஒரு வாழ்க்கை முறையாகவும் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஆனாலும் உள்ளூர்க் கலாச்சாரம் இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளைப் பாதிக்காத முறையில் அது பின்பற்றப்படுகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். சுற்றுச்சூழல் பொறியாளராக வெளிநாடுகளில் பணிபுரிந்து திருவனந்தபுரம் நகரில் வாழ்ந்து வருபவர் பிஜ்லி. அவரின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு நூல் இது.
இஸ்லாம் வெறும் மதம் மட்டும் அல்ல. இதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நூலை பிஜ்லி எழுதியிருக்கிறார். இஸ்லாம் ஒரு பழமையான மதம். அதே நேரத்தில் இஸ்லாம் மனிதனுக்கு ஏற்ற நவீனமான மதமாகவும் இருக்கிறது என்பதையும் சொல்கிறார். துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மோட்சம் அடைவதற்கான வழியாக இஸ்லாம் இருப்பதைப் பல உதாரணங்கள் மூலம் விளக்குகிறார். அந்த உண்மையை அறிந்து மோட்சம் அடைய இந்தக் கட்டுரைகள் வழி காட்டுகின்றன. இஸ்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதைச் சமீபத்திய சம்பவங்கள் மூலம் விளக்குகிறார்.
இந்தியா என்பது ஒரே கலாச்சாரத்தைக் கொண்டது என்ற கருத்து கற்பனையானது எனத் துணிச்சலாகச் சொல்கிறார் பிஜ்லி. இந்தக் கருத்தை கொண்டவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் இதை உறுதி செய்ய வேண்டும் என்று திட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல தரவுகள் மூலம் சொல்கிறார் நூலாசிரியர்.
இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லிம்களை, உயர் சாதிக் கலாச்சார ஆதிக்கம் பாதித்திருக்கிறது என்பதையும் சொல்கிறார் இவர். மேலும் இஸ்லாம் சிறந்த சமூகம் என்பதற்கான நெறிமுறைகளையும், அதைப் பிற மதத்தினரும் கைக்கொள்ளலாம் என்பதையும் இந்த நூல் வழி விளக்குகிறார் பிஜ்லி. - சுப்ரபாரதிமணியன்
கற்பனையும் கருத்துரையும்
B.F.H.R.பிஜ்லி
விலை: ரூ.300
சித்தார்த் பதிப்பகம்
தொடர்புக்கு: 8220550688
திண்னை | விஜயா வாசகர் வட்ட விழா: கோயம்புத்தூர் விஜயா வாசகர் வட்டம் வழங்கும் அ.முத்துலிங்கம் விருது விழா நாளை (09.02.25) மாலை 5 மணி அளவில் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, D அரங்கில் நடைபெறவுள்ளது. மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண் ராமனுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆ.சுவாமிநாதன், கவிஞர் ரவி சுப்பிரமணியன், மொழிபெயர்ப்பாளர்கள் சுசித்ரா ராமச்சந்திரன், ஆர்.அழகரசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசவுள்ளனர். தொடர்புக்கு: 9047087053
தமிழ்நூலுக்குப் பரிசு: பப்ளிஷிங் நெக்ஸ்ட் அமைப்பு, இந்திய அளவில் சிறந்த பதிப்பகம், பதிப்பாசிரியர், வடிவமைப்பு, அட்டை வடிவமைப்பு எனப் பல பிரிவுகளில் விருது வழங்கிவருகிறது. இந்த வருடம் சிறந்த அட்டை வடிவமைப்புக்கான (இந்திய மொழிகள் பிரிவு) இரண்டாம் பரிசை கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் ‘தரூக்’ (காலச்சுவடு பதிப்பகம்) பெற்றிருக்கிறது.
ஆஸ்திரேலியாவைக் களமாகக் கண்ட இந்த நாவலுக்கான அட்டையை அரிசங்கர் வடிவமைத்துள்ளார். அட்டையில் பயன்படுத்தப்பட்டுள்ளது விஜய் பிச்சுமணியின் ஓவியமாகும்.