நாகப்பட்டினம் தாலுக்கா, கீழ்வெண்மணி கிராமத்தில், 1968இல் அரைப்படி நெல்லுக்கான கூலி உயர்வுப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தியாவின் தேசியப் பத்திரிகைகளில் எல்லாம் தலைப்புச் செய்தியாக வந்தது.
‘நியூயார்க் டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகளிலும் செய்தியாகி, இந்தச் சம்பவம் உலகையே உலுக்கி எடுத்தது. ஆனால், இந்தக் கொடூரச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றங்களில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற விதம், நீதிமன்றங்கள் இந்த வழக்கை அணுகிய போக்கு முதலானவை பற்றி ‘கீழ்வெண்மணி: மறுக்கப்பட்ட நீதி’ என்ற தலைப்பில் வந்துள்ள நூல் விரிவாக அலசுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, ஐதராபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா ஆகியோர் எழுதிய இரண்டு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மனோஜ் மிட்டாவின் ஆங்கிலக் கட்டுரையை பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
மிராசுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்த உயர் நீதிமன்றம், மிராசுதாரர்கள் இந்தக் குற்றங்களை செய்திருப்பார்கள் என்பது நம்பும்படியாக இல்லை என்று கூறியது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இரண்டு ஆண்டுக் காலத் தாமதத்துக்குப் பிறகே உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் 14 ஆண்டுக் காலம் கிடப்பில் போடப்பட்டு 1990ஆம் ஆண்டுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசுத் தரப்பில் ஒரு மணி நேரம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஒரு மணி நேரம் என இரண்டு மணி நேரத்தில் வாதம் முடிந்து, வெறும் 4 பக்கத் தீர்ப்பின் மூலம் மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உள்ளிட்ட செய்திகள் இந்நூலில் உள்ளன.
“தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர், தான் எந்த வழக்குக்காக வாதாடுகிறோம் என்பதுகூடத் தெரியாமல் வாதாடி இருக்கிறார்” என்கிறார் கட்டுரையாளரான நீதிபதி கே.சந்துரு. ‘‘கீழ்வெண்மணி வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளிப்படைத்தன்மை
இல்லாமல் நடந்து கொண்டது” என்று குற்றஞ் சாட்டுகிறார் மற்றொரு கட்டுரையாளரான மனோஜ் மிட்டா. “வழக்கின் ஆவணங்களை உச்ச நீதிமன்றம் தனது ஆய்வுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமலேயே உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறிவிட்டது” என்கிறார் அவர்.
“சமூகக் கொடுமைகளின் வரலாற்றில் உலகம் முழுவதும் பதிவாகிவிட்ட கீழ்வெண்மணிப் படுகொலை வழக்கின் அநீதியை நீதிமன்றங்கள் இன்றுவரை களையவில்லை” என்கிறார் நீதிபதி சந்துரு. “அடித்தள மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில், இந்த வழக்கில் அளித்த தீர்ப்பு தவறு என்பதை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அறிவிக்க வேண்டும். இதுதான் அம்மக்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று சந்துரு வலியுறுத்துகிறார். - தேவதாசன்
கீழ்வெண்மணி: மறுக்கப்பட்ட நீதி
நீதிபதி கே.சந்துரு, மனோஜ் மிட்டா
விலை: ரூ.30
மணற்கேணி பதிப்பகம்
தொடர்புக்கு: 6382794478
புதிய உணர்வு தரும் கதைகள் | நூல் நயம்: முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான மார்க்சிம் கார்க்கி, ‘தாய்’ நாவல் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். அவரது 5 சிறுகதைகளை மட்டும் கொண்ட தொகுப்பாக வெளியாகி இருக்கிறது, மார்க்சிம் கார்க்கி கதைகள். ‘இருபத்தியாறு பேரும் ஒருத்தியும்’, ‘புயற்பறவை பற்றிய பாடல்’, ‘பனிக்கட்டி நகர்கிறது’, ‘மனிதன் பிறந்தான்’, ‘முதல் காதலைப் பற்றி’ என்கிற இந்த ஐந்து கதைகளும் எப்போதோ எழுதப்பட்டு இருந்தாலும் இப்போதும், சிறந்த வாசிப்பனுபவத்தையும் புதிய உணர்வுகளையும் தருவது இந்நூலின் சிறப்பு.
‘இருபத்தியாறு பேரும் ஒருத்தியும்’ என்கிற கதையில் வரும் தான்யா கேட்கிற “அட ச்சே ஆக்கங்கெட்ட கைதிகளே’ என்கிற வார்த்தையில் அவளின் உலகமும் ஆண்களின் குரூர மன உலகமும் வெளிப்படுவது இன்றைக்கும் ஏற்ற கதையாக இருக்கிறது. தமிழ்க் கதைகளை படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது பூ.சோமசுந்தரத்தின் மொழிபெயர்ப்பு. - அழகு
மார்க்சிம் கார்க்கி கதைகள்
தமிழில்:பூ.சோமசுந்தரம்
வளரி வெளியீடு
விலை. ரூ. 170.
தொடர்புக்கு:9003267399
எளிமையில் துலங்கும் திருவாசகம்: சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறை ‘திரு வாசகம்’ ஆகும். திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பதற்கு ஏற்ப பக்தியில் உருகச் செய்யும் படைப்பு இது. மாணிக்கவாசகர் இயற்றிய இந்நூலை எல்லாருக்கும் புரியும் வகையில் எளிய விளக்கத்துடன் எழுதியிருக்கிறார் சூலூர் கலைப்பித்தன். திருப்பதிக வைப்பு முறை பற்றிய நூலாசிரியரின் கட்டுரை சுவாரசியமானது. அதில் இதுவரை இயற்றப்பட்ட திருவாசக உரைத் தொகுப்புகள் குறித்து விரிவாகக் கூறுகிறார். பதிகங்களில் சேர்க்கப்படாத பாடல் தொகை பற்றியும் கூறுகிறார்.
இந்த நூலை திருவாசகத்தை இயற்றிய மாணிக்க வாசகர் அரிமர்த்தன பாண்டிய மன்னிடம் அமைச்சராக இருந்ததிலிருந்து தொடங்குகிறார். மாணிக்கவாசகர் மன்னனுக்காக திருப்பெருந்துறையில் குதிரை வாங்கச் சென்று தீட்சை பெறுகிறார். அங்கு 20 பதிகங்களைப் பாடுகிறார். அங்கிருந்து உத்தரகோசமங்கைக்குச் சென்று அங்கு ஒரு பதிகம் பாடுகிறார்.
திருத்தோணிபுரத்தில் (சீர்காழி) ஒரு பதிகம் பாடுகிறார். அடுத்ததாக திருவண்ணாமலையில் பதிகம் பாடுகிறார். இந்தப் பயண அடிப்படையிலேயே இந்த நூலில் வைப்பு முறையை நூலாசிரியர் பின்பற்றியுள்ளார். அதுபோல் பாடல்களுக்கான விளக்க உரைகளுக்கு இடையே தனது கருத்துகளையும் திருக்குறள் கொண்டு தந்திருக்கிறார். அது வாசிப்புச் சுவாரசியம் அளிப்பதாகவும் உள்ளது. - குமார்
மாணிக்கவாசகரின் திருவாசகம்
உரை: வெண்பாச் சித்தர் சூலூர் கலைப்பித்தன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.550
தொடர்புக்கு: 9940446650