இலக்கியம்

யதார்த்தம் | அகத்தில் அசையும் நதி 7

சு.தமிழ்ச்செல்வி

தன் முன்னால் நிற்கும் நர்சைப் பார்த்தான் மாரியப்பன். பளிச்சென்ற வெள்ளை உடையிலிருந்த அந்த முகத்தில் மருந்திற்குக் கூடக் கனிவையோ இரக்கத்தின் சாயலையோ கண்டுபிடிக்க முடியவில்லை அவனால்.

நேற்றிரவு தேவதையைப் போலத் தெரிந்த அந்த முகத்தில் இருந்த கருணை இப்போது எங்கே போய்விட்டதென்று எண்ணத் தோன்றியது. அவர்கள் பார்க்கும் வேலை அப்படி. ஒவ்வொரு நாளும் எத்த னையோ உயிர்கள் பிறப்பதையும் எத்தனையோ உயிர்கள் இறப்பதையும் பார்ப்பவர்கள். ஆனால், மாரியப்பனால்தான் தாங்க முடியவில்லை.

அழுதழுது வீங்கிப் போயிருந்தது அவனது முகம். அவனுடைய மனைவி கண்ணம்மா தலைவிரி கோலமாக மருத்துவ மனைக்கு வெளியே இருக்கும் வேப்பமரத்தடியில் கிடக்கிறாள். நடுநிசியில் திடீரென்று மருத்துவ மனையே அதிரும் விதமாகப் பெருங்குரலெடுத்து அழுதாள்.

ஓடிவந்து பார்த்த நர்சுகளும் மற்றவர்களும் அவளுக்காகப் பரிதாபப்பட்டார்கள். ஆறுதல் சொன்னார்கள். ஆனாலும் அவள் ஓலமிட்டு அழுதுகொண்டே இருந்தாள். குறிப்பிட்ட நேரத்திற்கு மேலும் இதை அனுமதிக்க முடியாதென்று மருத்துவமனை சிப்பந்திகளால் அப்போது வெளியேற்றப்பட்டவள் தான். மரத்தடியில் மண்ணில் முகம் புதைத்து விம்மிக்கொண்டு கிடக்கிறாள். விடியும்வரை இங்கேதான் இருந்தாக வேண்டும்.

அழுது ஓலமிட்டு மற்றவர்களுக்குச் சிரமம் தராமல் இருக்க வேண்டும் என்பது மாரியப்பனுக்குப் புரிந்திருந்தது. பொழுது விடிவதற்காக அவன் காத்திருந்தான். அதிகாலை ஐந்து மணி பேருந்தில் அவனுடைய அம்மா வருவாள். செலவுக்கு யாரிடமாவது பணம் வாங்கிவரச் சொல்லி யிருந்தான்.

அவள் வந்தால்தான் இவர்கள் ஊருக்குப் போக முடியும். சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பார்த்தான். இரண்டு ரூபாய் போலச் சில்லறையாகக் கிடந்தது. இயலாமையும் துக்கமும் நெஞ்சை அழுத்தின. நேற்று காலையிலேயே அவனுடைய நான்கு வயது மகனுக்கு உடம்பு காய்ந்தது. அப்போதே கண்ணம்மா கூறினாள். “புள்ளைக்கு ஒடம்பு கொதிக்குது. நான் இடுமானம் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிட்டு வாறன்” என்றாள்.

அவனும் கைவைத்துப் பார்த்துவிட்டு “ஆமா இப்புடிக் கொதிக்கிதே” என்றவன் அவளைச் சமாதானப்படுத்தினான். முக்குட்டுக் கடையில் மாத்திரையும் காப்பித்தண்ணியும் வாங்கிவந்து கொடுத்தான். “நேத்து மழை யில ஆட்டம் போட்டான்ல்ல அதான் ஒடம்பு காயிது. இதப் போடு சரியாயிடும்” என்றான். நடவு வேலைக்குப் போக வேண்டியதன் அவசியத்தை அவளே உணர்ந்திருந்தாள். விவசாய வேலைகளை மட்டுமே நம்பியிருக் கக்கூடிய விவசாயக் கூலிகள் இவர்கள்.

காவிரியில் தண்ணீர் வந்தபோதெல்லாம் குறுவை, தாளடி என இருபோகம் பயிர் செய்வார்கள். ஆடியில் தொடங்கி உழவு, சேறடியல், தெளிப்பு, நாற்றடியல், நடவு, களையெடுப்பு, அறுவடை, போரடியல் என மாசி, பங்குனி வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலை இருந்துகொண்டே இருக்கும். அதன்பிறகும்கூடத் தாளடியில் வீசிவிட்ட பசலியும் பச்சைப்பயறும் உளுந்தும் செழித்துச் சித்திரை வைகாசியிலும் மக்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டிருக்கும்.

உள்ளங்கையளவு விவசாய நிலம் இல்லாதவர்கள் வீட்டில்கூடத் தொம்பைக்கூடும் குதிரும் நிரம்பி வழியும். இங்கு வரும் குடுகுடுப்பைக்காரன்களும் பூம்பூம்மாட்டுக்காரன்களும் தர்மமாகத் தமக்குச் சேர்ந்த தானிய மூட்டைகளைத் தூக்க முடியாதவண்ணம் நிரப்பிச் செல்வார்கள். ஆனால், அவர்கள் யாரும் இப்போ தெல்லாம் இந்தத் தெருக்களுக்கு வருவதேயில்லை. அப்படியே வந்தாலும் அவர்களுக்கு அள்ளிப் போட கையளவு தானியமாவது இருக்கவேண்டுமே. இதுவும் இங்குள்ள மக்களை வாட்டும் கவலைகளுள் ஒன்றானது.

மழையாவது பெய்து பயிர் பச்சையைக் காக்காதா என்கிற நப்பாசையில் வாய்க்காலில் கிடக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரை இயந்திரம் வைத்து இறைத்து விவசாயம் செய்வோர் சிலர்தான். அங்கும் வேலை செய்ய நான் நீயென்று போட்டி போட்டுக்கொண்டு நிற்பார்கள் கூலிகள். கண்ணம்மாவின் மாமியார் கெட்டிக்காரி. வயல்காரரிடம் நயந்து பேசி அவ்வப்போது தனக்கும் தன் மருமகளுக்கும் வேலையை உறுதிசெய்து விடுவாள்.

அப்படிக் கிடைத்திருப்பது தான் கண்ணம்மாவுக்கு இந்த நான்கு நாள் நடவு நடும் வேலை. இதையும் வேண்டா மென்று உதறி விட்டுப்போக யாருக்குத்தான் மனம் ஒப்பும்? எப்படித்தான் அடித்துப் பிடித்து வேலை செய்தாலும் வருடத்திற்கு முப்பது நாள்களுக்குக்கூட வேலை அமைவதில்லை. வேறு வருமானத்திற்கும் வழியில்லாதபோது இதை வைத்துக்கொண்டு ஆண்டு முழுவதையும் எப்படிக் கடத்துவது? இதையெல்லாம் யோசித்துத்தான் அவன் கண்ணம்மாவை நடவுக்குப் போகச் சொன்னான்.

தானும் நாற்றுப் பறிக்கும் வேலைக்குப் போய்விட்டான். வேலையின் ஊடாக வயல்களிலும் பக்கத்து வாய்க்கால்களிலும் பீநண்டு பொறுக்கி மடிக்குள் சேர்த்து வைத்துக் கொண்டாள் கண்ணம்மா. இந்தச் சிறு சிறு நண்டுகளை நசுக்கிப்போட்டு ரசம் வைத்துக் கொடுத்தால் மகனின் காய்ச்சலும் சளியும் சரியாகிவிடும் என்று நினைத்தாள். பெரும்பாலான தாய்மார்களின் கைவைத்தியம் இது.

மடியில் குறுகுறுத்த நண்டுகளோடு அந்தி சாய்ந்த வேளையில் அவள் வந்து பார்த்தபோது நினைவுதப்பிய நிலையில் கிடந்தான் மகன். “ஐயோ தெய்வமே” என்று தலையிலடித்துக்கொண்டு அழுதாள். மாரியப்பனும் அப்போதுதான் வந்து சேர்ந்தான். அவன் சற்று முன்பாகவே வேலைத்தலையிலிருந்து கலைந்து விட்டபோதும் கூலி பெறுவதற்காக இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

பிள்ளையைப் பார்த்து அவனும் வெகுவாய் அதிர்ந்துபோனான். அதற்குமேல் கொஞ்சமும் தாமதிக்கவில்லை. பிள்ளையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு ஓடினான். ஒரு சொம்பையும் டம்ளரையும் எடுத்து மஞ்சள் பைக்குள் போட்டுக்கொண்டு பின்னாலேயே ஓடினாள் கண்ணம்மா.

பேருந்தைப் பிடித்து திருத்துறைப் பூண்டி அரசாங்க மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் மணி எட்டைத் தாண்டியிருந்தது. அதற்குள் பிள்ளைக்குப் பாதி உயிர் போனது போலாகிவிட்டது. அதுவரை பணியில் இருந்த மருத்துவர் எட்டு மணியோடு தன் பணியை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். அடுத்து வரவேண்டிய மருத்துவரும் இன்னும் வந்துசேரவில்லை. நர்சுகள் மட்டும் நிறைய தயங்கியபடி ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டார்கள். கண்ணம்மா அவர்களின் கால்களில் விழுந்து கதறினாள்.

மாரியப்பனும் பரிதாபமாகக் கெஞ்சினான். மனமிரங்கியவர்களாகப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போய் கிடத்தி சிகிச்சையை ஆரம்பித்தார்கள். வாய்க்கு வந்த தெய் வங்களையெல்லாம் அழைத்து வேண்டிக் கொண்டிருந்தாள் கண் ணம்மா. இனிமேல் எதுவும் நேராது பிள்ளை யைக் காப்பாற்றி விடலாம் என்று நினைத்தான் மாரியப்பன். வெகு நேரத்திற்குப் பிறகு சொம்பை எடுத்துக் கொண்டுபோய் இரவுக் கடையொன்றில் இரண்டு டீயும் பன்னும் வாங்கி வந்தான்.

இருவரும் ஆளுக்கொன்றாய் டீயில் நனைத்து வாயில் போட்டுக் கொண்டார் கள். ஊசிபோட்ட மயக்கத்தில் பிள்ளை தூங்குவதாக எண்ணினர். கண்ணம்மா தரையில் தலை சாய்த்தாள். மாரியப்பன் மருத்துவமனை வராண்டாவில் துண்டை விரித்துப்போட்டு கால்களை நீட்டினான். பகல் முழுவதும் வேலைசெய்த அசதியில் இருவரும் சற்று தூங்கிப்போனார்கள். மீதியை அடுத்த வாரம் பார்க்கலாம்.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

SCROLL FOR NEXT