இலக்கியம்

அடையாளப் பதற்றங்கள்

சேனன்

உல​களாவிய புதிய அனுபவங்​களைத் தமிழுக்​குக் கொண்டு​வரும் தனித்து​வமான பங்கை ஈழ எழுத்துகள் செய்து வருகின்றன. யுத்​தத்​தை​யும் அகதி வாழ்​வை​யும் எழுதாத ஈழ எழுத்​தாளர் ஒருவரைக்கூட காட்ட முடி​யாது. யுத்​தத்​தின் ஆரம்ப காலத்தல் புலம் பெயர்ந்த ஈழ எழுத்​தாளர்கள் புலத்​தில் வாழ்ந்த பொழுதும் தாய்​நாட்டுக் கதைகளையே எழுதி வந்தனர்.

அந்த நிலை இன்று மாறிப் புலத்து வாழ்வும் ஈழ எழுத்​தில் ஊடுருவி கலந்​து​விடத் தொடங்கி உள்ளது. தமிழுக்கு இது ஒரு அகில உலகப் பரிமாணத்தை வழங்கி உள்ளது. பரந்த தளம் புதிய மொழி நடையை​யும் அவாவி நிற்​கிறது. எழுத்​தாளர்கள் பலர் இந்தப் பரிசோதனை முயற்​சி​யில் ஈடுபட்டு வருகிறார்​கள். அனோஜன் பாலகிருஷ்ணனின் முதலாவது நாவல் ‘தீக்​குடுக்கை’ இதன் இன்னொரு பரிமாணத்தை வெளிக்​கொண்டு வந்துள்ளது.

வெளி​நாட்​டில் பிறந்த தமிழரின் பார்​வை​யில் நகரும் கதை, தற்கால ஈழ அரசி​யல், வாழ்​வின் பல்வேறு முக்கிய முரண்​களை​யும் தொட்டுச் செல்​கிறது. அதே சமயம் யுத்​தத்​தின் பல கோர அனுபவங்​களை​யும் பதிவுசெய்​கிறது. ஒரு குறுநாவலில் இத்தகைய சிக்​கல்களை ஒன்றிணைப்​பது, அதுவும் வாசிப்​பவருக்​குச் சிரமமின்றி செய்வது ‘தீக்​குடுக்கை’ நாவலைக் கவனத்​திற்கு உள்ளாக்கு​கிறது. நாட்​டிற்​குள் அகதி, நாடு திரும்​பும் அகதி என அகதி​யாகும் உலகத்​தை​யும் அதற்​குள் இருக்​கும் அவலங்​களை​யும் செல்​கிறது நாவல்.

அனோஜன் நன்கறியப்​பட்ட ஈழ எழுத்​தாளர். அவரது ‘பச்சை நரம்பு’ மிகவும் பேசப்​பட்ட சிறுகதைத் தொகுப்பு. மௌனி போல் அகவய உணர்​வுகள் சார்ந்து கதை சொல்​லும் பாவனை கொண்​டவர் என அறியப்​பட்​டவர் அனோஜன். இந்நாவல் இதில் இருந்து முற்றி​லும் மாறிய நடை கொண்​டதாக இருக்​கிறது.

இது அவரது புதிய முயற்சி. புதிய முயற்சி என்பது இலகுவான ஒன்றல்ல. ஒரே பாவனை​யில் தொடர்ந்து எழுதி வருபவர்கள் மலிந்து இருக்​கும் தமிழ் இலக்​கியச் சூழலில் மீண்​டும் புதிய முயற்சி​கள், புதிய வெளி, புதிய கதைக் கரு என நகர்​பவர்கள் பெரும் சிரமம் எடுக்க வேண்டி உள்ளது. இது போலச் செய்தல் அல்ல. அதனால்​தான் அவர்கள் புதிய மொழி, எழுத்து நடை, சொல்​லும் முறை என நகர வேண்டி உள்ளது. இந்த வெளிச்​சத்​தில்​தான் இந்த நாவலை அணுக வேண்​டும்.

புலம்​பெயர் அனுபவங்​களை​யும், ஈழ யுத்த அனுபவங்​களை​யும் காயங்​களாக காவித் திரிபவர்​களுக்கு இது நாவலாக அனுபவம் தராமலும் போகலாம். ஆனால், ஆசிரியர் அவர்களை மட்டும் நோக்கி இதைப் படைக்க​வில்லை என்றே எண்ணுகிறேன். அதற்​கும் அப்பால் பரந்து கிடக்​கும் தமிழ் வெளிக்கு இந்த முரண்​களை​யும் அனுபவங்​களை​யும் பரப்​பிச் செல்ல விரும்​பும் அவா நாவலுக்கு லாவக​மும் எளிமை​யும் தந்திருக்​கிறது என்றே தோன்​றுகிறது.

அதே சமயம் இந்தக் கதையை முற்றி​லும் சாதா​ரணம் என ஒதுக்கி விட்டும் செல்ல முடி​யாது. கே.டானியலின் கதைகளைச் சாதா​ரணம் என எவ்வளவு ஒதுக்கிய போதும், இன்றும் அவரது கதைகள் தமிழ்ப் பரப்பை ஆக்கிரமித்து இருப்பதை அறிவோம். சில கதைப்​பரப்புகள் உள்ளங்​களில் வளரும். அதற்கு நாட்கள் எடுக்​கும்.

சில வார்த்தை அலங்கார நாவல்​களைப் படிக்​கும்​போது ஒரு அழகியல் உணர்​வைத் தரும். அதுவும் ஒரு திறமை​தான். கவர்ச்​சியை அற்புதம் எனச் சிலாகிக்​கும் வழமை உண்டு​தானே. ஆனால், கதை சேராத முறை​யில் விவரிப்பாக மட்டும் அது விரி​யும்​போது விரை​வில் நாம் அந்த நாவலை மறந்து விடு​கிறோம்.

சில சமயம் அத்தகைய எழுத்துகள் அலுத்​துப் போய் விடு​கின்றன. அந்த நாவலில் என்ன கதை இருந்​தது, என நம்மை யோசிக்க வைத்து விடு​கிறது. அனோஜனின் இந்த நாவல் அத்தகையதல்ல. ​மாறாக மன​தில் பரப்பு ​விரிய வைக்​கும் வகை. அனோஜன் ஒரு நல்ல கதை சொல்லி. அவரது எழுத்து தொடர்ந்து செழு​மைப்​பட்டு வரு​கிறது. கூடவே அவரது எழுத்து​களின் சமூக ஆழங்​களும் வளர்ச்சி கண்டு வருவதை இந்த நாவலில் நாம் பார்க்​கக் கூடிய​தாக இருக்​கிறது.

- தொடர்புக்கு: senann@hotmail.com

தீக்குடுக்கை
அனோஜன் பாலகிருஷ்ணன்
சால்ட் பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 7010908978

SCROLL FOR NEXT