இலக்கியம்

பள்ளிகளுக்கான முன்னுதாரண நூல்! | நூல் நயம்

செய்திப்பிரிவு

திருச்சி எஸ்.ஆர்​.வி. பள்ளி தன்னுடைய வளாகத்​திற்கு 1,300க்​கும் மேற்​பட்ட ஆளுமை களை வரவழைத்து உள்ளது. அப்படி வருகை தந்த ஆளுமைகள் பள்ளி​யின் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்​றோருடன் கூட கலந்​துரை​யாடி இருக்​கின்​றனர். அங்கு வருகை தந்த ஆளுமை​களில் வெறும் 31 பேருடைய உரைகளை மட்டும் தொகுத்து 'வெளிக் காற்று' எனும் நூலாக கொண்டு வந்துள்ளனர். மிகக் குறைவான உரைகள். என்றாலும் அந்நூல் ஆயிரம் பக்கங்கள் கொண்​டதாக வந்திருக்​கிறது.

உரையாற்றிய​வர்​களில் களப்​பணி​யாளர்​கள், கல்வி​யாளர்​கள், மருத்​துவர்​கள், நடிகர்கள் , எழுத்​தாளர்​கள், மாவட்ட ஆட்சி​யர்​கள், பத்திரி​கை​யாளர்​கள், நம் நாட்​டின் தேர்தல் ஆணைய உயர் பொறுப்​பில் இருந்​தவர் எனப் பலரும் பேசி இருக்​கின்​றனர். வரலாறு, இலக்​கி​யம், வாசிப்பு, கனவு​கள், அரசி​யல், சமூகம், நாடகம், இசை, கல்வி என வாழ்​வின் அனைத்து சாளரங்கள் வழியாக​வும் வீசி​யிருக்​கிறது வெளிக் காற்று.. அந்த உரைகளை எல்லாம் மூத்த எழுத்​தாளர் கமலாலயன் எழுத்​தாக்கம் செய்​துள்ளார்.

ச.தமிழ்ச் செல்வன் மற்றும் பரிமளா தேவி ஆகியோர் தொகுத்​துள்ளனர். இதுபோல் பள்ளி​யில் புதிய கோணம் கொண்ட, புதிய குரல் ஒலிப்பது அந்தப் பள்ளிக்கே, அந்தப் பகுதிக்கே புதுரத்தம் பாய்ச்​சுவதாக அமையும். புழுக்கம் நிறைந்தவை நம் பள்ளி​கள். அதற்​குள் கழுத்​துப் பொத்​தானை இறுகப் பூட்​டிக் கொண்டு, காலுறை அணிந்து கொண்டு கடமை​யாற்றிக் கொண்​டிருக்​கின்​றனர் ஆசிரியர்​கள்.

அங்கு வெளிக் காற்று வீச வேண்​டும். வகுப்​பறைகள் சுகமான அனுபவங்கள் நிறைந்த ஒன்றாக மாற வேண்​டும். வழக்​கமான வழியில் புதிய தீர்​வுகளை எட்ட முடி​யாது என்பதே நிதர்​சனம்.. அவ்வப்​போது வீசுகின்ற வெளிக் ​காற்று சிலருக்​குப் பு​திய சிந்​தனையைக் கிளறி ​விடலாம்; பு​திய கனவை ​விதைக்​கலாம். - தேனி சுந்தர்

வெளிக்காற்று
எழுத்தாக்கம்: கமலாலயன்
தொகுப்பு: ச.தமிழ்ச்செல்வன்,
ஆ.பரிமளாதேவி
எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம்
விலை: ரூ.990.00
தொடர்புக்கு: 044 - 24332924

கமலிகளின் குரல்கள்: மா. அரங்கநாதனின் அனைத்துக் கதைகளிலும் வரும் ஒரே பாத்திரமான முத்துக்கருப்பன் போல, கார்த்திகா முகுந்த்தின் எல்லாக் கதைகளிலும் வரும் ஒரே ஒரு கமலி பலவிதமாக யோசிக்க வைக்கிறார். ‘இன்றைக்கு அலுவலகம் விடுமுறை. அவளுக்குச் சலிப்பாக இருந்தது. தான் மட்டும் வீட்டில் இருக்கவேண்டுமே. தனிமைக்குப் பல கூர்நகங்கள்’ இப்படிக் கதைகளுக்குள் வரும் ஒரு சில வாக்கியங்களில் பல இடங்களில் உப பிரதிகளை உருவாக்கிக்கொண்டே போகிறார்.

இன்னொரு கதையில், ‘அறையின் இருளுக்குள், கதவிடுக்கு வழியாக வரும் வெளிச்சம் நிறைந்து கொண்டிருந்தது. வெளிச்சம் நிறைகையில் இந்த இருள் எங்கே போகிறது? ஒளியும் இருளும் ஒளிந்து விளையாடும் போலும். பிறகு அந்த ஒளியினுள்ளேயே இருள் ஒளிந்து கொள்ளுமோ? – இப்படியாக யோசித்துக்கொண்டு சிறிது நேரம் கிடந்தாள். வெளிச்சம் கூடி வந்து கொண்டிருந்தது. வாசல் தெளிக்க வேண்டுமே என எழுந்தாள்”. எனக்கு பாரதியின் வசன கவிதையில் வரும் காட்சியின்பம் ஞாபகம் வந்துவிட்டது.

கதைகளுக்குள் வரும் சில பத்திகள்தான் அவை; நல் படைப்பின் சாமுத்ரிகா லட்ஷணப்படி எங்கெல்லாம் கொண்டு போய்ச் செலுத்தி நம்மை யோசிக்க வைத்து, மறுபடி கதைக்குள் அழைத்து வருகின்றன. ‘பாலை’ என்ற கதையில் இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வாருக்கு அடுத்து ஒரு பெண்ணாழ்வாராக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு கமலியின் வாழ்வு, வெறும் மண் சேகரிப்போடு முடிகிறது. ஒலிபெருக்கி வாங்க வரும் விவசாயி தங்கய்யா, பணத்தை செம்மண் ஒட்டிய மூன்று பாலிதீன் பைகளில் எடுத்து மேஜை மேல் வைக்கிறார். உள்ளே பத்து, இருபது, ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுகளும் சில்லறைகளும் இருக்கின்றன.

“கொஞ்சம் மண்ணாயிருக்கு… எண்ணிப் பாத்துட்டு இன்னும் எவ்வளவு தரணும்னு சொல்லும்மா…” என்கிறார் தங்கய்யா. அவரோடு அன்பாகப் பேசி, ஒலிபெருக்கிச் சாதனங்கள் தந்து, பில் போட்டு, விலை குறைக்கச் சொல்லி முதாலாளியிடம் பேசி அனுப்பிவிட்டுத் தன் இருக்கைக்குத் திரும்பும் கமலி, மேஜை ஓரத்தில் ஒதுங்கியிருந்த சிறிய மண்குவியலை ஒரு ஸிப்பர் பேக்கைத் தேடி எடுத்து அந்த மண்ணை ஒரு தூசி விடாமல் அந்தப் பையில் வாரிக்கொள்கிறார். அவள் படித்தது கணிணியியல்.

ஒலிபெருக்கி உபகரணங்கள் விற்கும் நிறுவனத்தில் பணி. கமலி அப்போது சேகரித்தது வெறும் மண்ணா, தொலைந்த கனவா? அவளுக்கு மண், நம் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு. கனவுகளைத் தொலைத்துவிட்ட, புதுப்புதுக் கனவுகளைக் காண்கிற, நிராதரவான, சம்மட்டி அடி வாங்கிய மனம்கொண்ட கமலி என்கிற இளம் பெண்களின் கேவல் கதைகள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கின்றன. – ரவிசுப்பிரமணியன்

ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும்
கார்த்திகா முகுந்த்
ஜீரோ டிகிரி பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 96001 95441

வணிகப் பாடம் சொல்லும் நூல் | நம் வெளியீடு: தொழில்முறை நிர்வாக ஆலோசகரான டாக்டர் ஆர்.கார்த்திகேயன், வணிகம், நிர்வாகம் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றிய தெளிவான அறிமுகத்தை ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் தொடர்ந்து தமிழில் கட்டுரைகளாகக் கவனப்படுத்தினார். அந்தக் கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகளைச் சேர்த்து வெளிவந்திருப்பதே ‘வணிக நூலகம்' என்னும் இந்த நூல்.வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இவரின் எழுத்தாற்றலின் பலமே, சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதுதான். புகழ் பெற்ற வணிக நிறுவனங்களின் முதலாளிகள் முதல், மிகவும் சிறிய அளவில் ‘ஸ்டார்ட் அப்' நிறுவனத்தைத் தொடங்கி, அதை அசுர வளர்ச்சிக்குக் கொண்டு சென்றவர்கள் வரை பலர் எழுதிய புத்தகங்களை அதன் சிறப்புகளை, அவர்கள் கடந்துவந்த சோதனைகளை நம் கண்முன் இந்நூல் தரிசனப்படுத்துகிறது.

வணிக நூலகம்
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.180
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562

இந்து தமிழ் திசை கலந்துகொள்ளும் புத்தகக் காட்சிகள்:

திருப்பூர் மாவட்ட புத்தகக் காட்சி வேலவன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நாளை (02.02.2025) முடிவடையும் இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகம் (அரங்கு எண்: 106) கலந்துகொண்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட புத்தகக் காட்சி
S.S. நகர், புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்று வருகிறது. நாளை (02.02.2025) முடிவடையும் இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகம் (அரங்கு எண்: 6 ) கலந்துகொண்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட புத்தகக் காட்சி பெரம்பலூர் நகராட்சி திடலில் நடைபெற்று வருகிறது. 31.01.2025 முதல் 09.02.2025 வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகம் (அரங்கு எண்: 38 ) கலந்துகொண்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட புத்தகக் காட்சி பேருந்து நிலையம் அருகில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. 01.02.2025 முதல் 09.02.2025 வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகம் ( அரங்கு எண்: 7 ) கலந்துகொண்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட புத்தகக் காட்சி திருநெல்வேலி டவுன் டிரேட் செண்டர் பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 31.01.2025 முதல் 10.02.2025 வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகம் ( அரங்கு எண்: 42 ) கலந்துகொள்கிறது.

இந்தப் புத்தகக் காட்சிகளில் இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’, ‘என்றும் தமிழர் தலைவர்’, ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’, ‘இந்து தமிழ் திசை இயர் புக்’ உள்ளிட்ட நூல்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

SCROLL FOR NEXT