எழுதுகிறவரின் சார்புத்தன்மையோடும் கண்ணோட்டத்தோடும் பதிவுசெய்யப்பட்ட வரலாறுகள் இங்கே ஏராளம். முகலாய அரசை இந்தியாவில் 50 ஆண்டுகள் வழிநடத்தியவரும் இந்திய நிலப்பரப்பில் பெரும்பான்மைப் பகுதியை ஆட்சி செய்தவருமான ஔரங்கசீப் குறித்து எழுதப்பட்ட வரலாறுகள் சிலவற்றில் புனைவும் கற்பிதமும் கலந்திருக்கின்றன.
ஔரங்கசீப் குறித்துச் சொல்லப்பட்டவற்றின் பின்னணியை ஆராய்ந்து உண்மைக்கு நெருக்கமாக எழுதியிருக்கிறார் கலந்தர் ஹாரிஸ். அனைத்துச் சமயங்களையும் போற்றிய அவர் மதவெறியராகவே வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருப்பதையும் இந்த நூல் விவாதிக்கிறது. வெறும் தகவல்களாக அடுக்காமல் சுவாரசிய நடையில் சம்பவங்களைத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர். - பிருந்தா சீனிவாசன்
ஆலம்கீர் ஔரங்கஜேப்
கலந்தர் ஹாரிஸ்
கனவுத்தமிழ் பதிப்பகம்
விலை: ரூ. 225
தொடர்புக்கு: 9840321522
சினிமாவின் முகத்தை மாற்றிய கோட்பாடு: அமெரிக்காவின் ஹாலிவுட் மையப் பிரம்மாண்டம் என்பது முதலாவது சினிமா, ஓரளவு சமூக விமர்சனமும் அழகியலும் கொண்ட ஐரோப்பிய யதார்த்தம் என்பது இரண்டாவது சினிமா என வரையறுக்கும் நூலாசிரியர், மூன்றாம் உலகின் அரசியல்-பொருளாதார-கலாசார விடுதலையைக் கோருவது மூன்றாவது சினிமா என்கிறார். இது சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது என்கிறார். வன்முறை, பசி, போராடுதலின் அழகியலை இது பேசுகிறது.
ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், காலனியத்தை எதிர்த்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் திரைப்பட ஒளிப்பதிவுக் கருவியை ஆயுதமாக மூன்றாவது சினிமா கோட்பாட்டாளர்கள் வழிமொழிந்தார்கள். ஐரோப்பிய, அமெரிக்க சினிமா மேதைகளிடம் மட்டுமல்லாமல் வங்க இயக்குநர் மிருணாள் சென் உள்ளிட்டோரிடமும் மூன்றாவது சினிமா கோட்பாடு தாக்கம் செலுத்தியுள்ளது. இப்படி உலகு தழுவிய மானுட விடுதலை வேட்கையை மூன்றாவது சினிமா திரைப்படக் கோட்பாடு எப்படி விதைத்தது, சினிமாவின் முகத்தை எப்படி மாற்றியது என்பதை விரிவான இந்த நூலின் வழியே ஆவணப்படுத்தியுள்ளார் யமுனா ராஜேந்திரன். - அன்பு
மூன்றாவது சினிமா-இலத்தீனமெரிக்கத் திரைப்பட இயக்கம்
அறிமுகமும் தொகுப்பும்: யமுனா ராஜேந்திரன்
உயிர் பதிப்பகம்
விலை: ரூ.950
தொடர்புக்கு: 98403 64783
வரலாறு சொல்லும் எதிர்காலம்: வரலாற்றை வெகுமக்கள் படிக்கும் விதத்தில் சுவாரசியமாக எழுதுவதற்காகப் புகழ்பெற்ற யுவால் நோவா ஹராரியின் புதிய நூல் நான்கே மாதங்களில் தமிழுக்கு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் தாக்கம் கடந்த ஆண்டின் மிகப் பெரிய விவாதப் பொருளாக இருந்தது. அது குறித்து தன் பார்வையை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார் ஹராரி. மனித குல வரலாற்றில் தகவல்கள் கடத்தப்பட்ட முறை கதைகளில் தொடங்கி, புத்தகங்கள் மூலம் ஆவணமாகவும் பரவலாகவும் மாறின.
இணையம் வரம்பில்லாத அறிவைத் தந்த அதேநேரம், நமது தனிப்பட்ட விருப்பங்களைத் தெரிந்துகொண்டு எதிரெதிர் அணிகளை உருவாக்கி அல்காரிதம் மோதவிட்டது. இப்போது இவை அனைத்தையும் ஒற்றை நூலில் கோக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு என்ன செய்யப் போகிறது என்கிற எச்சரிக்கையுடன் இந்த நூலை ஹராரி எழுதியுள்ளார். எதிர்மறைப் பொருள் கொண்ட ‘நெக்சஸ்’ என்னும் தலைப்பையும் வைத்துள்ளார். மொழிபெயர்ப்பாளர் நாகலட்சுமி சண்முகம் ஹராரியின் 3 நூல்களை ஏற்கெனவே மொழிபெயர்த்தவர். அவருக்கு இந்த நூல் 100ஆவது மொழிபெயர்ப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. - நேயா
நெக்சஸ்
யுவால் நோவா ஹராரி
மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
விலை: ரூ.799
தொடர்புக்கு: 8754507070
அ.வெண்ணிலாவின் புதிய நாவல் | திண்ணை: எழுத்தாளர் அ.வெண்ணிலா வரலாற்றுப் பின்னணியில் புனைவுகள் எழுதிவருகிறார். இப்போது இந்தியாவில் நெருக்கடிநிலைக் காலக்கட்டத்தைத் தன் அடுத்த நாவலுக்கான களமாக எடுத்துள்ளார். தமிழகத்தின் வட மாவட்ட கிராமம் ஒன்றின் சாமானியனின் வாழ்க்கை, நெருக்கடிநிலைப் பிரகடனம் என்னும் அரசியல் தீர்மானத்தால் என்னவாகிறது என்பது நாவலின் மையம்.
பு.கமலக்கண்ணனுக்கு பா.ரா.சுப்பிரமணியன் விருது: பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் பெயரிலான இளம் ஆய்வறிஞர் விருதிற்கு ஆய்வாளர் பு.கமலக்கண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த்தடம் ஆய்விதழ் இந்த விருதை வழங்குகிறது. இந்த விருது பத்தாயிரம் ரூபாய் தொகையும் பரிசு கேடயமும் உள்ளடக்கியது. ஜார்ஜ் எல்.ஹார்ட்டின் ‘தமிழ்ச் செவ்விலக்கியங்கள்’, ‘தமிழ்-சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள்’ அலெக்சாந்தர் எம்.துபியான்ஸ்கியின் ‘திணைக்கொள்கை உருவாக்கமும் சடங்கியல் தொன்மவியல் மூலங்களும்’ உள்ளிட்ட நூல்களைத் தமிழில் கமலக்கண்ணன் மொழிபெயர்த்துள்ளார்.
ஒப்பாய்வு நோக்கில் பண்டைத் தமிழ், சமஸ்கிருத தேர்வு செய்யப்பட்ட பெண் பாற் புலவர் பாடல்களில் வடிவமும் உள்ளடக்கமும் என்கிற தலைப்பில் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுவருகிறார்.