இலக்கியம்

தத்துவங்களின் விசாரம்

இலக்​கி​யம், மெய்​யியல், கோட்​பாடுகள் ஆகியவை குறித்து ஜமாலன் எழுதிய பத்து கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ‘தமிழ்ச் சிறு​வாரி மரபும் உடலரசியல் முதலீடு​களும்’, ‘நவீன தமிழ் இலக்​கி​யத்​தில் தேசிய, திரா​விட, இடதுசா​ரிச் சொல்​லாடல்​களும், மரபு​களும்’, ‘தமிழ் நவீனத்துவ மரபில் பாரதி​யும் பாரதி​தாசனும்’ உள்ளிட்ட கட்டுரைகள் இடம்​பெற்றுள்ளன.

பொதுப்புத்தி சார்ந்து அறியாமை​யில் தனது அறிவு மறுப்பு​வாதத்​தையே பின்​நவீனத்துவம் எனத் தமிழ்ச்​சூழல் முன்​வைக்​கிறது என்று கூறும் ஜமாலன், தமிழ்ச்​சூழலில் எது புரிய​வில்​லையோ அதுவே பின்​நவீனத்துவம் என்பது பொதுப்புத்தி சார்ந்த புரிதலாக உள்ளது என்கிறார்.

ஆகவே, பின்​நவீனத்துவம் தமிழ்ச்​சூழலில் அறிமுகப்​படுத்​தப்​பட்ட வரலாற்றை ‘தமிழ்​சூழலில் பின்​நவீனத்து​வம்’ என்ற கட்டுரை மூலம் விவரித்​துள்ளார். தமிழ்ச்​சூழலில் பின்​நவீனத்துவம் பண்பாட்டுத் தளத்​தில் புனிதக் கவிழ்ப்​பாக​வும், இலக்​கியத் தளத்​தில் புரி​யாமல் எழுது​வ​தாக​வும், அரசியல் தளத்​தில் வெறும் அடையாள அரசியல் என்றும் புரிந்​து​கொள்​ளப்​பட்​டிருக்​கிறது என்கிறார்.

அமைப்​பியல், பின்​அமைப்​பியல், பின்​நவீனத்துவம் ஆகிய மூன்​றிற்​கும் இடையேயான வித்​தி​யாசங்​களை​யும், இந்த மூன்று கோட்​பாடு​களும் தமிழ்ச்​சூழலில் அறிமுகமான வரலாறு பற்றி​யும் அவரது இந்தக் கட்டுரை அலசுகிறது. கணிப்​பொறி சார்ந்த உலகாக மாறி​விட்ட இன்றைய சூழலில், அனைத்​துமே டிஜிட்​டல்​மய​மாகி வரும் நிலை​யில், நம்முடைய ஒவ்வொரு அசைவும் இந்த டிஜிட்​டல்​களால் தீர்​மானிக்​கக்​கூடிய நிலை வரலாம்.

இனி உலகப் பொருளா​தாரம் என்பதே இந்த டிஜிட்டல் பொருளா​தா​ரம்​தான். ஆகவே, தகவல் வங்கி​களைத் தங்கள் கைகை​களில் வைத்​திருக்​கும் பெரும் நிறு​வனங்​களும் நாடு​களுமே இனி உலகில் ஆதிக்​கத்​தைச் செலுத்​தும் எனப் பின்​நவீனத்துவம் கூறும் கணிப்புகள் பற்றி கூறப்​பட்​டுள்​ளது.

பின்​நவீனத்துவம் முன்​வைத்த முக்​கியமான கருத்​தாக்​கங்​கள், இந்தக் கோட்​பாடு பற்றி விரிவாக ஆராய்ந்த உலகின் முக்​கியமான சிந்​தனை​யாளர்கள் பற்றியெல்​லாம் அறிமுகம் செய்​யப்​பட்​டுள்​ளது. பன்முகப்​பட்ட அறவியலை, அரசி​யலை, அழகியலை ஒற்றை அதிகாரத்​திற்கு எதிராக முன்​வைக்​கும் ஒரு கலகக்​குரலாக, கோட்​பாடாக, ஆய்வு​முறை​யாக, சிந்​தனை​யாகத் திகழ்வதே பின்​நவீனத்துவம் என இந்தக் கட்டுரை கூறுகிறது.

தொ.பரமசிவன் எழுத்துகளை எப்படி வாசிப்​பது? அவரது எழுத்து​களின் பின்னுள்ள கோட்​பாடு என்ன? என்பது பற்றி விளக்​கும் நோக்​கில் எழுதப்​பட்ட ‘தொ.ப.​வின் பிரதி​யாக்கம் - ஒரு பண்பாட்டுப் பொருள்​முதல்வாத அணுகு​முறை’ என்ற கட்டுரை​யும், தொ.ப.​வின் மார்க்​சியத் திரா​விடப் புரிதலை தமிழியம் சார்ந்த ஒரு சிந்​தனை​யாகப் புத்​தாக்கம் செய்து கொண்டு வாசிக்க முடி​யும் என்று கூறும் ‘தொ.ப.​வின் தமிழியம் தழுவிய பண்பாட்டுப் பொருள்​முதல்​வாதம்’ என்ற மற்றொரு கட்டுரை​யும் இந்நூலில் இடம்​பெற்றுள்ளன.

இவை தவிர, பக்தி இலக்​கிய​மும் இயக்க பக்தி​யும் - கோ.கேசவனின் மார்க்​சியத் திறனாய்வு, இடதுசா​ரித் திரா​விடத் தமிழியக்க முன்னோடி கவிஞர் தமிழ் ஒளி, பின்​காலனிய நிலை​யில் ‘தான், பிற, தன்னிலை​யாதல்’, பொ​தி​யின் மெய்​யியல் சார்ந்த உரை​யாடல்​கள் ஆகிய கட்டுரைகளு​டன் உள்ள இந்​நூல், தமிழ்ச் சூழலில் கோட்​பாட்டு உரை​யாடல் பற்றிய சிந்​தனைகளை வளர்க்​கும் வகை​யில் எழுதப்​பட்டுள்​ளது.

தமிழ்ச் சூழலில் கோட்பாடுகளும் பின்நவீனத்துவமும்
ஜமாலன்
மணல் வீடு வெளியீடு
விலை ரூ.200
தொடர்புக்கு: 98946 05371

SCROLL FOR NEXT