கலைகளுள் மிகவும் மேன்மை பொருந்தியதாக போற்றப்படும் பஞ்ச பட்சி சாஸ்திரம், சிவபெருமானால் பார்வதி தேவியிடம் கூறப்பட்டதாக ஐதீகம். இந்தக் கலையை அறிந்திருந்தால், அனைத்திலும் வெற்றி காணலாம் என்று அறியப்படுகிறது. பஞ்ச பட்சி சாஸ்திரத்தைக் கொண்டு வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவைகளின் குணநலன்களை மனிதரோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உள்ளது.
ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது. பட்சி சாஸ்திரம், குருநாதரின் வழியாகச் சீடர்களுக்கு கூறப்பட்டு வந்தது. பார்வதி தேவி முருகப் பெருமானுக்கும் முருகப் பெருமான், அகத்தியர் போன்ற சித்தர்களுக்கும் இக்கலையை எடுத்துரைத்தனர்.
பார்வதி தேவி நந்திதேவருக்கும் இக்கலையை பயிற்றுவித்தார். நந்திதேவர் மூலம் போகருக்கும், போகர் மூலம் உரோமரிஷிக்கும் இக்கலை பயிற்றுவிக்கப்பட்டதாக ஐதீகம். பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாட்சரம் என்ற சிவ மந்திரத்துக்கு உண்டு. அதனால் பஞ்சாட்சரம் ஜெபிப்பவரை, யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை பஞ்ச பட்சி சாஸ்திரம் வெளிப்படுத்துகிறது. (ந – வல்லூறு, ம – ஆந்தை, சி – காகம், வ – கோழி, ய – மயில்) பஞ்சாட்சர மந்திரத்துக்கு உரிய தேவதையாக இருக்கும் சிவபெருமானே முதலில் இந்த சாஸ்திரத்தை உபதேசித்துள்ளார்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் மூலம் எதிர்காலத்தில் நடைபெற உள்ள செயல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். ஒரு செயலை செய்யும்போது, அதை நல்ல வேளையில் தொடங்கினால் அதன் பலன் நன்மையாகவே அமையும், நமது முன்னேற்றத்துக்கான வழிகாட்டியாக நாம் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் கணித்த பஞ்ச பட்சி பலன்கள் இந்த நூலில் உள்ளன. 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான பஞ்ச பட்சி பலன்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
பஞ்சபட்சி பஞ்சாங்கம் 2025
தம்பிரான் ரிஷபானந்தர்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.90
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
சம்சாரிகளின் சாகா வாழ்வு: கரிசல் பூமியில் வாழும் எளிய மக்களின் வாழ்க்கைப்பாடுகளைக் கதைகளாக எழுதிவரும் எழுத்தாளரின் நான்காவது சிறுகதை நூலிது. இதிலுள்ள 20 கதைகளிலும் வரும் மனிதர்கள் அனைவருமே கரிசல் மண்ணின் வெள்ளந்தியான சம்சாரிகளாக இருக்கிறார்கள். அவர்களது அன்றாடங்களை, அவர்களது பேச்சு மொழியிலேயே எழுதியுள்ளார்.
தனக்கென இருக்கும் நாலுகுறுக்கம் நிலத்திலும் மக்காச்சோளத்தைப் பயிரிட்டுவிட்டு, அதில் அமெரிக்கன் புழு நெளிவதைக்கண்டு புலம்பும் சம்சாரி ரவியும் (‘முறிமுக்கால்’), சொந்த மாமா மகனான வெள்ளைச்சாமியை வேண்டாமெனச் சொல்லி, அசலூரானுக்கு வாக்கப்பட்டுச் செல்லும் லட்சுமி, மணமான பின்னர் வெள்ளைச்சாமியின் கனிவான விசாரிப்பில் நெகிழ்ந்து போவதும் (‘பிசகு’), குடித்துவிட்டுப் பச்சிளம் குழந்தையைப் பாலியல் துன்புறுத்தல் செய்யத் துணிந்த கணவனை அடித்துக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குச் சென்று திரும்பும் சோலையம்மாளும் (‘கொட்டாப்புளி’) வாசித்து முடித்த பிறகும் நம் சாகா வாழ்வுடைய சம்சாரிகளாக நம் மனதில் நிலைபெறுகிறார்கள். ஏமிலாந்தி, பூரிதக்குஞ்சலம், மந்தைப்பிஞ்சை, ஒச்சன் ஆகிய கதைகள் தனித்த கவனத்தைக் கோருகின்றன. - மு.முருகேஷ்
மந்தைப்பிஞ்சை
கா.சி.தமிழ்க்குமரன்
பவித்ரா பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 8778924880