ஈரானிய இயக்குநர்களில் புகழ்பெற்றவர் அப்பாஸ் கியாரஸ்தமி. ‘வேர் இஸ் தி ஃபிரெண்ட்ஸ் ஹோம்’, ‘தி விண்ட் வில் கேரி அஸ்’ போன்ற பல திரைப்படங்களைப் பார்க்காத சினிமா ஆர்வலர்கள் குறைவு. கியாரஸ்தமி ஒரு கவிஞரும்கூட. பாரசீகக் கவிதைப் பண்பாட்டில் தனித்துவமிக்க கவிதைகளை உருவாக்கியிருக்கிறார்.
அவரது கவிதைகள் முதன்முறையாக க.மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் ‘பாயக் காத்திருக்கும் ஓநாய்’ தொகுப்பாக வெளிவந்துள்ளது. எளிமையும் கவித்துவக் காட்சிகளும் நிறைந்தவை இந்தக் கவிதைகள். நான்கு வரிகளில் கவிதைக்கு அருகில் இருக்கும் இந்தச் சொற்கள், ஓர் உணர்வை உருவாக்கி வாசகரை நிச்சலனப்பட வைக்கின்றன. எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் தனது ரசனையின் அடிப்படையில் சில கதைகளை மொழிபெயர்த்துள்ளார்.
அமெரிக்க எழுத்தாளர் ரேமண்ட் கார்வரின் மூன்று கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்ச் சிறுகதை மொழியில் மாற்றத்தை ஏற்படுத்திய எழுத்தாளர்களில் கார்வரும் ஒருவர். ஆண்-பெண் உறவுகள், நவீன வாழ்க்கைச் சிக்கல் என இன்று நம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்பே அனுபவித்த தேசத்தின் கதைகள் இவை எனலாம்.
ஆண்டன் செகாவின் மூன்று கதைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் அதிகம் கவனிக்கப்படாத எட்கர் கெரத், பர்கத் பிர்பல் போன்ற எழுத்தாளர்களின் கதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. கார்வரைப் போல் அதிகம் வாசிக்கப்பட்ட ஹெமிங்வேயின் கதை ஒன்றும் இந்தத் தொகுப்பில் உள்ளது.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் லத்தீன் - அமெரிக்க எழுத்துகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவை. அந்த இலக்கியத்தின் பெண் எழுத்துகளைக் ‘கடலோடியின் மனைவி’ என்னும் தலைப்பில் எழில் சின்னதம்பி மொழிபெயர்த்துள்ளார். இதிலுள்ள 20 கதைகள் இந்தப் பண்பாட்டின் ஒரு முகத்தை நமக்குக் காட்டுகின்றன. ‘விசாரணை’ நாவலில் வரும் கே கதாபாத்திரம் உலகப் பிரசித்திபெற்றது. காஃப்காவும் கே என்று அறியப்பட்டார்.
இன்னும் இரு கேக்களை இந்த நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது; ரஷ்ய எழுத்தாளர் கார்ம்ஸ், ஜப்பானிய எழுத்தாளர் கவபட்டா. இந்த மூன்று கேக்களின் குறுங்கதைகளை ‘கே3’ என்கிற தலைப்பில் கணேஷ்ராம் மொழிபெயர்த்துள்ளார். இதுபோல் செகாவின் ‘நிச்சயிக்கப்பட்ட பெண்’, அசதா மொழிபெயர்த்த கட்டுரை, நேர்காணல் தொகுப்பு அடங்கிய இந்த ஏழு நூல்களை நூல்வனம் வெளியிட்டுள்ளது.
ஏழு மொழிபெயர்ப்பு நூல்கள்
புத்தகக் காட்சி சலுகை விலை: ரூ.1,000
அரங்கு எண்: 438