ம. மதிவண்ணன், ‘நெரிந்து’ கவிதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கியத்துக்குள் அறிமுகமானவர். 4 கவிதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், 5 மொழிபெயர்ப்புகள், ஒரு ஆய்வு நூல் ஆகியவை வெளிவந்துள்ளன. உள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விவாதங்களாக முன்வைத்து இவர் எழுதிய நூல்கள், அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கை வெற்றி பெறுவதற்குப் பெரிதும் துணைநின்றன.
அருந்ததியர் சமூக வரலாறு பற்றி அவர் எழுதிய ‘சக்கிலியர் வரலாறு’ நூல் தமிழக ஆய்வுத் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சரண்குமார் லிம்பாலே எழுதிய ‘கும்பல்’ நாவல் மதிவண்ணன் மொழிபெயர்ப்பில் கருப்புப் பிரதிகள் (அரங்கு எண்: 555, 556) வெளியீடாக வந்துள்ளது.
தலித் இலக்கியத்தின் இன்றைய போக்கு பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? - தலித் இலக்கியம் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட 1980களின் சூழல் இன்றைக்கு இருப்பதாகக் கருதவில்லை. அப்போது சாதிக்கு வெளியே நின்று சாதியத்தை விமர்சிக்கும் போக்கு நிலவியது. தமிழ்நாட்டில் அம்பேத்கர், பெரியாரின் கருத்தியல்தான் தலித் கருத்தியலாக இருந்தது.
ஆனால், 2000க்குப் பிறகு, பெரியாரின் கருத்தியலை நீக்கிவிட்டு, பறையர்களை முன்னிறுத்திப் பேசுவது மட்டும்தான் தலித்தியம் என்ற கருத்தியலை முன்வைத்தார்கள். பெரியாரை தலித் விரோதி என அவதூறு செய்தார்கள். இந்தக் கட்டத்தில் இங்கு தலித் இலக்கியம் பொதுத்தன்மையை இழந்து, சாதித் தன்மையைப் பெற்றுவிட்டது.
பெரியாரியச் சிந்தனை பெரியாருக்கு முன்பே பதிணென் சித்தர்கள் பாடல்களில், வள்ளலார், கணியன் பூங்குன்றனார் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிரான, எல்லா மக்களுக்குமான குரல்கள் அப்பாடல்களில் ஒலித்துள்ளன. இவ்வாறு பல நூறு ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் பெரியாரியச் சிந்தனையை முற்றிலும் புறக்கணிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு, வேறுவழியின்றி இப்போது பெரியாரையும் இணைத்துப் பேச வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
கவிஞராக அறிமுகமான நீங்கள், இன்று கல்வெட்டுகள், செப்பேடுகளையெல்லாம் ஆராய்ந்து சக்கிலியர் வரலாறு என்ற ஆய்வு நூல் என வேறு கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறீர்கள்... பெரியார் “நான் பெரிய ஆளுன்னு நினைக்கலை. இங்கே பெரிய தலைவர்கள்னு சொல்லிக்கிறவங்க இந்த வேலையை செய்யாததால நான் செய்றேன்” என்பார். நானும் அப்படித்தான் சொல்கிறேன். அவசியம் செய்துமுடிக்க வேண்டிய ஒரு முக்கியமான வேலையை யாரும் செய்யாதபோது, நான் செய்கிறேன்.
உள் ஒதுக்கீடு கோரிக்கையை வலுப்படுத்த, அது தொடர்பான நியாயங்களை முன்வைத்து நூல் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அருந்ததியர்களைச் செருப்பு தைப்பதற்காக அழைத்துவரப்பட்ட வந்தேறிகள் என்று கூறியபோது, அருந்ததியர்களுக்கென இருந்த செழுமையான வாழ்வியலைச் சொல்வதற்காக சக்கிலியர் வரலாறு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவையெல்லாம் காலச்சூழல் என் மீது சுமத்திய வேலைகள்.
கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஆய்வு இவற்றில் உங்களுக்குப் பிடித்த வடிவம் எது? - கவிதைதான் எனக்குப் பிடித்த, விருப்பமான வடிவம். கவிதை என்பது மிகவும் சுதந்திரமானது. எனது உணர்வு எழுச்சிகளில் நான் எழுதுகிற, என்னுடைய உத்வேகத்தில் நான் வெளிப்படுத்துகிற எனது பார்வைகள், சிந்தனைகள் எனது கவிதைகளில்தான் அழகியல் தன்மைகளோடு வெளிப்படுகின்றன. கவிதைகளில் ஒரு ஜீவன் இருப்பதாக நான் உணர்கிறேன்.
உங்களது ‘சக்கிலியர் வரலாறு’ நூல் ஏற்படுத்தியுள்ள தாக்கம்... எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. செருப்பு தைப்பதற்காக ஆந்திரத்திலிருந்து விஸ்வநாத நாயக்கரால் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களே அருந்ததியர்கள் என 1970களில் நா.வானமாமலை எழுதினார். அதை மறுத்து, சோழர் காலத்திலேயே இங்கு வாழ்ந்தவர்கள் அருந்ததியர்கள் என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்களை வெளியிட்டு 2011இல் எழுதினேன். ஆனால், இடதுசாரி தரப்பிலிருந்து எந்த எதிர்
வினையும் இல்லை. இன்னும் ஏராளமான கூடுதல் ஆதாரங்களுடன் 2023இல் சக்கிலியர் வரலாறு வெளிவந்து விட்டது. அதன் பிறகும் இடதுசாரிகளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
மாறாக, சக்கிலியர் வரலாறு வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு உங்கள் நூலகம் இதழில், மாற்கு எழுதிய ‘அருந்ததியர்: வாழும் வரலாறு’ நூல் பற்றிய பெரிய கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். முன்பு வெளியான ஒரு பழைய நூலை முன்னிறுத்தி, சக்கிலியர் வரலாறு நூலை முக்கியத்துவம் இழக்கச் செய்ய வேண்டும் என்பதை தவிர இதில் வேறு எந்த நோக்கமும் இருக்க முடியாது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது. சம காலத்தில் இல்லாவிட்டாலும், நிச்சயம் உண்மை ஒருநாள் வெளியே வரத்தான் செய்யும். அந்த வகையில் சக்கிலியர் வரலாறு நூல் நிச்சயமாக ஒருநாள் பெரு விளைவை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்.
நா.வானமாமலை ஆய்வு பற்றிய உங்களுடைய விமர்சனம் மிகக் கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறதே... நா.வா. மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அருந்ததியர்கள் தொடர்பாக ஒரு தவறான கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார். அந்தக் கருத்தைத் தக்க சான்றுகளோடு மறுத்திருக்கிறேன். இடதுசாரியாக இருக்கும் ஒருவர், தான் நம்பும் ஒரு கருத்தின் பக்கம் தீவிரமான உறுதித்தன்மையுடன் நின்று பேசுவதுதான் இயல்பானது.
மார்க்ஸ், அம்பேத்கர் போன்றவர்கள் இப்படித்தான் பேசினார்கள். நானும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்புலத்திலிருந்து வந்தவன்தான். உங்களிடமிருந்து எதைக் கற்றுக்கொண்டு வந்தேனோ, அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். தார்மிக ரீதியில் இந்த நூல் தொடர்பாக இடதுசாரிகள் எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தமட்டில் ஆய்வுத்தளத்தில் பரவலாக அவர்கள்தான் இருக்கின்றனர்.
எனது விமர்சனங்களுக்கு ஜனநாயகபூர்வமாகப் பதில் சொல்லி, என்னையும் உங்கள் கருத்தை ஏற்கச் செய்ய முயன்றிருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் நா.வா. மீது நான் விமர்சனம் வைப்பதே தவறு என்று எப்படி கூற முடியும்? எனது விமர்சனங்களுக்குப் பதில் கூறாமல், எனது எதிர்ப்பைப் பொருள்படுத்தாமல், இவனால் என்ன செய்துவிட முடியும் எனப் பண்ணையார்தன மனப்பான்மையோடு, கண்டுகொள்ளாமல் செல்வது ஜனநாயகபூர்வமானது அல்ல. நிச்சயமாக நா.வா. மீதான எனது விமர்சனங்களுக்கு மவுனம் ஒருபோதும் பதில் ஆகாது.
அருந்ததியர் உள் ஒதுக்கீடு அமலுக்கு வந்த 2009ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போது எதிர்ப்புக் குரல் அதிகமாக உள்ளதே... அருந்ததியர் உள் ஒதுக்கீட்டைத் தொடக்கத்தில் ஆதரித்தவர்கள் பின்னர் எதிராகத் திரும்பினர். குறிப்பாக திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, செ.கு.தமிழரசன் போன்ற தலைவர்கள் எதிர்த்தனர். அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி, தனது சாதுரியத்தால் இந்த எதிர்ப்புகளை மட்டுப்படுத்தி, உள் ஒதுக்கீட்டை அமலுக்குக் கொண்டுவந்தார். எனினும், நீதிமன்றப் பரிசீலனையில் உள் ஒதுக்கீடுச் சட்டம் ரத்துசெய்யப்பட்டு விடும் என அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
பட்டியலினத்தில் மிகவும் பின் தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு அண்மையில் வழங்கிய தீர்ப்பு இவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள் ஒதுக்கீடு என்பது சட்டத்தால் உறுதிசெய்யப்பட்டுவிட்டதால் இப்போது அவர்களிடமிருந்து எதிர்ப்புக் குரல் அதிகமாக உள்ளது.
அருந்ததியர்கள் மத்தியில் உங்கள் எழுத்துகளுக்கான வரவேற்பு எப்படி உள்ளது? - அருந்ததியர் மத்தியில் எழுத்தாளர்கள் குறைவு என்பதால், எனது எழுத்துகளை விரும்பிப் படிக்கிறார்கள். ஆனால், அடிப்படையிலேயே போதிய கல்வியறிவு இல்லாத, இலக்கியம் என்பது, எழுத்து என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்ற விழிப்புணர்வு இல்லாத சமூகமாக உள்ளது. இந்தச் சூழலில்தான் எழுதிவருகிறேன்.
உங்களுடைய அடுத்த படைப்பு... உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடிப்படையாக வைத்து ஒரு நூல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
- தொடர்புக்கு:devadasan.v@hindutamil.co.in