தமிழ் கிளாசிக் நாவல்களில் ஒன்று ‘வாடிவாசல்’. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா 1959இல் எழுதிய நாவல் இது. இந்த நாவல், ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் அறியப்பட்ட ஏறு தழுவல் என்கிற தமிழர் விளையாட்டைப் பற்றியது. இந்த விளையாட்டில் இருக்கும் விலங்கும் அதை அடக்கப் போராடும் மனிதர்களின் விலங்குக் குணமும் இந்த நாவலில் வெளிப்பட்டிருக்கும்.
ஜல்லிக்கட்டு என்கிற தமிழ்ப் பண்பாடு சார்ந்த விஷயமும், ஒரு முனையை நோக்கி விறுவிறுப்பாக நகரும் நாவலின் சொல்முறையும், இந்த நாவலை விசேஷமிக்கதாக ஆக்குகிறது. இதே அம்சங்களுக்காகத்தான் இந்த நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் சினிமாவாகும் வாய்ப்பும் பெற்றது எனலாம். அதற்கெல்லாம் முன்னோடியாக இந்த நாவலின் ‘கிராஃபிக் வடிவம்’ இப்போது வெளிவந்துள்ளது.
எழுத்தாளர் பெருமாள்முருகன் இந்த கிராஃபிக் நாவலுக்கான வரைகலைப் பிரதியை எழுதியுள்ளார். இந்திய அளவில் பிரபலமான கிராஃபிக் கலைஞர் அப்புபன் இதற்கான படங்களை வரைந்துள்ளார். தமிழ் கிளாசிக் நாவல்களை கிராஃபிக் நாவலாக மாற்றி, உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லலாம் என்கிற காலச்சுவடு பதிப்பாளர் கண்ணனின் முயற்சி இது என முருகன் கூறியுள்ளார்.
ஆங்கில கிராஃபிக் நாவல்களின் முன்னுதாரணம், கிராஃபிக் கலைஞர் அப்புபனுடான உரையாடல் ஆகியவற்றின் உந்துதலில் முருகன் இந்த கிராஃபிக் வடிவத்தை எழுதி முடித்துள்ளார். ஒரு சினிமா திரைக்கதைபோல் உரையாடல், விளக்கக் குறிப்புகளுடன் இது உள்ளது. செல்லாயிபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுதான் இதன் மையம். அந்த ஊர் ஜமீனின் காளை காரி, நாயக பிம்பம் கொண்ட ஒரு காளை. அந்தக் காளையை அடக்கிக் கைநழுவிய பரம்பரைப் பெருமையை மீட்க வருகிறான் பிச்சி.
இந்தப் போராட்டம்தான் நாவல். ஜமீனுக்கும் பிச்சிக்கும் இடையில் காரி இருக்கிறது. இந்தக் காரி என்கிற விலங்கின் மீது ஏற்றப்பட்ட மனித உணர்ச்சிகள் வழி மனித மனத்தின் குரூரங்களை நாவல் விசாரிக்கிறது. இந்தப் பின்னணி, படங்கள்வழி இந்த கிராஃபிக் நாவலில் திருத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் மலையாளத்தில் டிசி புக்ஸ் வழியாக வரவுள்ளது; ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த மாத இறுதியில் வெளிவரவுள்ளது. இதன் வழி தமிழ் கிராபிக் நாவலுக்கான புதிய சந்தை திறக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்
வரைகலைப் பிரதி: பெருமாள்முருகன்
ஓவியங்கள்: அப்புபன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.275
அரங்கு எண்: E 50