கடன் வாங்கி எந்த முதலீடும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தும் இந்த நூலின் ஆசிரியர், கடன் இல்லாமல் வாழ்ந்து, சிறுகச்சிறுகச் சேமிப்பதும் சிறந்த முதலீடுதான் என்று கூறுகிறார். இ.எம்.ஐ. இல்லாத வாழ்க்கைதான் ஒருவரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்லும்.
ஒருவர் பொருளாதாரச் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமானால், அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது முக்கியமல்ல; அவர் கடன் சுமை அற்றவராக இருக்கிறாரா என்பதே முக்கியம். நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்கள் வாழும் பகட்டான வாழ்க்கையைப் போல நாமும் வாழ வேண்டும் என்று நம்மிடம் ஆசையைத் தூண்டுவதற்கு இங்கு ஆயிரம் காரணிகள் உள்ளன.
மற்றவர்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, ஆசைப்பட்டு, கடன் வலையில் சிக்கி, நிம்மதியை இழந்து தவிக்கும் ஏராளமானோரை நாம் பார்க்கிறோம். அவ்வாறு தவிப்பவர்கள் மட்டுமின்றி, அவர்களைப் போல நாமும் தவிக்கக் கூடாது என்று கருதுபவர்களுக்கும் இந்நூல் வழிகாட்டுகிறது.
இ.எம்.ஐ. இல்லா வாழ்க்கை
இராம.பழனியப்பன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 74012 96562
இந்து தமிழ் திசை அரங்கு எண்: 55 & 56
அமைக்கப்படாத அரங்கம்! | ஆஹா! - புத்தகக் காட்சி அரங்கு ஒதுக்கப்பட்டும், புத்தகக் காட்சி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் இன்னும் ‘இல்லம் தேடிக் கல்வி’ அரங்கம் அமைக்கப்படவில்லை. அதை வாசகர்கள் ஓய்வறையாக்கிவிட்ட காட்சி இது.
கொள்கை முன்னிறுத்தல் | செம்மை: பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வேலைவாய்ப்பின்மையும் அதன் விளைவுகளும், வன்முறைக்களமாகும் பொதுவெளி, வலதுசாரி அடையாள அரசியல் கருத்தியல்கள் ஊடுருவும் வழிகள், ஜனநாயகத்திற்குப் பிறகான காலமும் விளிம்பு நிலையினரின் நிலையும், தனியார்மய ஆதிக்கமும் மக்கள் மீதான வன்முறைகளும் உள்ளிட்ட வெவ்வேறு தலைப்புகளில், சமகால அரசியல், சமூகம், பொருளாதாரம் சார்ந்து பகுப்பாய்வு முறையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரியக் கருத்தியல்களின் அடிப்படையில், மதச்சார்பின்மை, சமூக நீதி உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தி இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஜனநாயகமும் சனாதனமும்
நிகழ் அய்க்கண்
உயிர் எழுத்து பதிப்பகம்
விலை: ரூ.210
அரங்கு எண்: 432
தனியிசை கேட்கலாம் | சிறப்பு: தமிழ்ப் பண்பாட்டில் இப்போதைய இசை ரசனை என்பது முழுக்கவும் திரையிசை சார்ந்ததுதான். ஆனால், மற்ற நாடுகளில் தனியிசை சினிமாவைப் போல் பிரபலமானது. இந்தப் பின்னணியில் தமிழில் எதிர்க்குரலாக உருவான தனியிசையைக் குறித்த நூல் இது. திரையிசையின் போக்கும் அந்தப் பெரும்போக்கில் தனியிசையின் பயணமும் எனப் பல பொருள்களில் இந்த நூலில் உள்ள கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தனியிசை ஆளுமைகள், அதன் அழகியல் அம்சம் ஆகியவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது. இதன்வழி தனியிசையின் எதிர்காலத்துக்கும் இந்த நூல் அழைத்துச்செல்கிறது.
தனியிசை
ஆர்.ஸ்ரீனிவாசன்
ஆழி பதிப்பகம்
விலை: ரூ.160
அரங்கு எண்: 201, 202
இயக்க வரலாறு | நயம்: திராவிட அரசியல், தமிழ்நாட்டின் மாபெரும் அரசியல் இயக்கமாக பல்லாண்டுக் காலம் ஆண்டுவருகிறது. இந்த அரசியல் கருத்தாக்கத்தை மக்களிடம் கொண்டுசெல்லப் பாடுபட்ட போராளிகள் பலர் உள்ளனர். அவற்றின் மாபெரும் ஆளுமைகள் மூவர் பற்றிய நூல் இது. திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியார், திமுகவைத் தோற்றுவித்த அண்ணா, அதன் தொடர்ச்சியாக திமுகவின் முகமான மு.கருணாநிதி ஆகியோரின் இயக்கச் செயல்பாட்டை இந்த நூல் விவரிக்கிறது.
திராவிடத்தின் மூன்று முகம்
ஜெகாதா
சத்யா எண்டர்பிரைசஸ்
விலை: ரூ. 500
அரங்கு எண்: 481, 482
வெளி அரங்கில் இன்று... புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (03.01.25) மாலை 6 மணி அளவில் ‘கற்பதும் நிற்பதும்’ என்கிற தலைப்பில் சுகி சிவம் உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து, ‘தமிழ் விடு தூது’ என்கிற தலைப்பில் ஆறு.அழகப்பன் உரையாற்றுகிறார். ‘கதைகளிடம் கற்போம்’ என்கிற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றுகிறார். பபாசி செயற்குழு உறுப்பினர் எஸ்.ராம்குமார் வரவேற்புரையும் பபாசி நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர் பு.மோ.சிவக்குமார் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.