வாசகர்கள் மத்தியில் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற நூல்களை மலிவு விலையில் மக்கள் பதிப்பாக வெளியிட்டுவருகிறது, சீர் வாசகர் வட்டம் (அரங்கு எண்: 82, 83). மக்கள் பதிப்புகள் வரிசையில், சீர் வாசகர் வட்டம் வெளியிட்ட ‘புதுமைப்பித்தன் கதைகள்’ 35 ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.
‘தாய்’ நாவல் 15 ஆயிரம் பிரதிகளும், பேராசிரியர் வீ.அரசு தொகுத்த ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு’ 6 ஆயிரம் பிரதிகளும், ‘பெண் ஏன் அடிமையானாள்?’ சுமார் 5 லட்சம் பிரதிகளும் விற்பனையாகியுள்ளன. 2,700 பக்கங்களிலான லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ ரூ.1,500தான். பரிசுப் பொருளாக வழங்குவதற்கு ஏற்ற வகையில், 15 தனித்தனி நூல்களாகத் தயாரிக்கப்பட்டு, அட்டைப்பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
பி.எச்.டேனியலின் (தமிழில்: இரா.முருகவேள்) ‘எரியும் பனிக்காடு’ நாவல் முதலில், ரூ.150 விலையில் 6 ஆயிரம் பிரதிகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.200க்கு 4 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. அதேபோல், செழியனின் ‘உலக சினிமா’ ரூ.225 விலையில் (768 பக்கங்கள்) வெளிவந்துள்ளது.
இவ்வாறு அடுத்தடுத்து நல்ல நூல்களைக் குறைந்த விலையில் மக்கள் பதிப்பாக வெளியிட்டு வருவதன் மூலம், குறுகிய காலத்திலேயே வாசகர்களின் பரவலான கவனத்தைச் சீர் வாசகர் வட்டம் பெற்றிருக்கிறது. அந்த வகையில், விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘கயிறு’ சிறார் கதை புத்தகத் திருவிழாவில் ரூ.1க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாதி வேற்றுமை பாராமல் அனைவரிடத்திலும் அன்புடன் பழக இளஞ்சிறார்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட நூல் இது. இந்நூலின் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் தேவைப்படுவோருக்கு ரூ.5 என்ற விலையில் தரப்படுகிறது.
இந்த ஆண்டின் சென்னை புத்தகத் திருவிழாவில் ‘கயிறு’ சிறுகதை மட்டும் 50 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபலமான நூல்களை இவ்வாறு மலிவு விலையில் விற்பது எவ்வாறு சாத்தியம் என்பது பற்றி சீர் வாசகர் வட்ட அமைப்பாளர் தம்பியிடம் கேட்டபோது, “சீர் வாசகர் வட்டம் என்பது, லாப நோக்கம் கொண்ட விற்பனை நிறுவனம் அல்ல.
சீர் வாசகர் வட்டத்தில் செயல்படுவோர் அனைவரும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். அவர்கள் இங்கு ஊதியம் எதுவுமின்றி, தன்னார்வ அடிப்படையில்தான் தங்கள் பங்களிப்பைச் செலுத்துகின்றனர்” என்றார்.
“தமிழ்நாடு முழுவதும் எங்கள் வாசகர் வட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அதனால்தான் ‘உலக சினிமா’ முன் வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுக் குறுகிய காலத்திலேயே, தமிழ்நாட்டின் 100 மையங்களில் 5 ஆயிரம் பிரதிகளுக்கு முன்பதிவைப் பெற முடிந்தது. இந்தப் புத்தகத் திருவிழா முடிவதற்குள் இந்நூல் 15 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்.
சீர் வாசகர் வட்டத்தின் மக்கள் பதிப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஏராளமான தன்னார்வலர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே எங்களால் இவ்வாறு மலிவு விலையில் நூல்களைப் பதிப்பிக்க முடிகிறது” என்கிறார் தம்பி. - தேவதாசன்