வதைகளைக் கையளித்தவர்களை வரலாறு அடையாளம் காட்டுவதோடு அதிலிருந்து மீள்வதற்கான பாதையையும் குறிப்பால் உணர்த்துகிறது. ஆனால், இவை எதுவும் இயல்பாக நடந்தேறிவிடவில்லை. அவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையில், சமூகத்தைப் பண்படுத்தியவர்களின் போராட்டமில்லாமல் இந்த மாற்றங்கள் சாத்தியமாகியிருக்காது. பெண்களுக்கு அப்படியான மாற்றங்களுக்கு வித்திட்ட வீரப் பெண்களைத்தான் ‘பெண் எனும் போர்வாள்’ காட்டுகிறது.
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’யின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியானவை. தொடராக வெளிவந்தபோதே பாராட்டும் விமர்சனங்களுமாக வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவை. வாழ்வின் நமது எல்லா நிலைகளிலும் சக பயணியாக நம்மோடு பயணிக்கும் பெண்களை, சிந்தனை அளவிலும் செயல் அளவிலும் சரிநிகராகக் கருதும் அளவுக்கு நாம் மாற வேண்டும் என்பதையே இந்நூல் உணர்த்துகிறது.
பெண் எனும் போர்வாள்
பிருந்தா சீனிவாசன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 74012 96562
இந்து தமிழ் திசை அரங்கு எண்: 55 & 56
ஆளுமைகளின் உரைகள் | சிறப்பு: திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளி, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறது. ஆளுமைகள் தங்கள் துறை சார்ந்து பேசுவது, கலந்துரையாடுவதே இந்த நிகழ்ச்சிகளின் மையம். இந்தப் பள்ளிக்கு வந்துசென்ற ஆயிரக்கணக்கான ஆளுமைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 31 பேரின் உரைகள் ‘வெளிக்காற்று’ நூலில் இடம்பெற்றுள்ளன.
இலக்கியம், ஆய்வு, ஊடகவியல், மருத்துவம், இசை, வரலாறு எனப் பல்வேறு பொருள்களில் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஞாநி, ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ஸ்ரீநாத் ராகவன், வே.வசந்திதேவி, ஏ.எஸ்.பத்மாவதி உள்ளிட்ட முன்னணி ஆளுமைகள் பலரின் உரைகள் நேர்த்தியாக எழுத்தாக்கம் செய்யப்பட்டு, இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
வெளிக்காற்று
தொகுப்பாசிரியர்கள்:
ச.தமிழ்ச்செல்வன், ஆ.பரிமளாதேவி
(எழுத்தாக்கம்: கமலாலயன்)
எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம்
அரங்கு எண்: F23
வண்ணச் சிறார் கதைகள் | செம்மை: தமிழ்நாடு அரசின் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் உருவான 119 படைப்புகளின் தொகுப்பு இது. மூத்த எழுத்தாளர் ஆயிஷா நடராசன் முதல் எம்.எஸ்.பொற்கொடி வரை 39 எழுத்தாளர்கள் இதில் பங்களித்துள்ளனர். எழுத்து அறிமுகம் ஆகாத குழந்தைகளில் இருந்து உயர்நிலை மாணவர்கள் வரை வாசிக்கக்கூடிய படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சமத்துவம், பன்மைத்துவம், சிறார் உரிமைகள், பால் பாகுபாட்டை அகற்றுதல், உடலியல் மாற்றங்கள், சமூக நீதி, சுற்றுச்சூழல், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகம், உள்ளூர் வரலாறு எனப் பல்வேறு மையப்பொருள்களில் கதைகள் அமைந்துள்ளன. அதிகபட்சம் ஒரு கதை 500 – 600 சொற்களுக்குள்ளும், வண்ண ஓவியங்களுக்கு அதிக முக்கியத்துவத்துடனும் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஓவியர்களுக்கும் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு படைப்பாளிகளும் ஓவியர்களும் இணைந்து இளஞ்சிறாருக்கான படைப்புகளை உருவாக்கினர். சென்னை புத்தகக் காட்சியில் எப் 54 அரங்கில் இந்த நூல்கள் கிடைக்கின்றன. தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் கழக அரங்கு எண்: 54இல் இந்த நூல் கிடைக்கும்.
வெளி அரங்கில் இன்று... புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (02.01.25) மாலை 6 மணி அளவில் ‘கதைத் தொழிற்சாலை’ என்கிற தலைப்பில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ என்கிற தலைப்பில் ஜெய ஹரிஷ் உரையாற்றுகிறார். ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஹேம மாலினி உரையாற்றுகிறார். பபாசி செயற்குழு உறுப்பினர் இராம.கண்ணப்பன் வரவேற்புரையும் பபாசி துணை இணைச் செயலாளர் எம்.சாதிக் பாட்சா நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.