‘நீதிமன்றங்கள் குற்றங்களை ஈர்க்கின்றன’ என்கிற பிரான்ஸ் காஃப்காவின் நாவல் வாக்கியம்போல் இன்றைய நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும் குற்றங்கள் உருவாவதற்கான இடங்களாக மாறியிருக்கின்றன.
சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுச் சிறைக்குச் செல்லும் குற்றவாளிகள் விடுவிக்கப்படும்போது, பெரிய குற்றங்களுக்குத் தயாராகிவிடுகிறார்கள் என்பதைப் பல கொலை, கொள்ளை விசாரணைகளில் பார்க்கிறோம். இந்தப் பின்னணியில் நமது குற்றவியல் சட்டங்களையும் சிறை அமைப்பையும் விசாரணை செய்கிறது, கண்ணப்பன் ஐபிஎஸ்ஸின் இந்தப் புத்தகம்.
காலனிய அரசால் முதன்முதலாகக் குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்ட வரலாற்றைத் திருத்தமாகச் சொல்லி இந்த நூல் தொடங்குகிறது. சிறார் குற்றவாளிகள் குறித்து ஒரு முழுமையான சித்திரத்தைச் சில கட்டுரைகள் வழி உருவாக்குகிறார் கண்ணப்பன். டெல்லி நிர்பயா சம்பவத்தை உதாரணமாகக் கொண்டு இதைச் சொல்கிறார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறார்.
சிறார்களுக்குச் சட்டம் அளிக்கும் சில விலக்குகள் அடிப்படையில், அவர்களைக் குற்றச்செயல்களில் ஈடுபடவைக்கும் பெரும்போக்கை நூல் சுட்டிக் காட்டுகிறது. அதனால், கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம், குற்றங்களின் அடிப்படையில் அவர்களைப் பெரியவர்களாகக் கருத இடமளிக்கிறது என்பதையும் சொல்லி, அதற்கு ஒரு வழக்கை உதாரணமாக்குகிறது இந்நூல். சிறார் சிறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தம், பெண் சிறைவாசிகளின் பிரச்சினைகள், புலனாய்வில் தனியார் பங்கு என நம் சமூகம் கைக்கொள்ளக்கூடிய பல பொருள்களை இந்தக் கட்டுரையில் கண்ணப்பன் தனது கருத்தாக முன்வைக்கிறார்.
அவரது இன்னொரு நூல் புலன் விசாரணைகள் பற்றிப் பேசுகிறது. சினிமாவில் காட்டப்படும் புலன் விசாரணைக்கு அப்பாற்பட்ட ஒன்று நிஜத்தில் இருக்கிறது. அந்த நிஜத்தைச் சொல்பவை இந்த நூலில் உள்ள கட்டுரைகள். தன் பணி அனுபவத்தின் அடிப்படையில், இந்த நூலை எழுதியுள்ளார். கொலை என்கிற நோக்கில் விசாரிக்கப்பட்ட ஒரு சம்பவம், விசாரணையில் குழந்தைகளின் உண்மை வழி அது தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனத் தெளிந்துள்ளது.
ஒரு பெல்ட்டை வைத்து ஒரு பாலியல் வழக்கைத் துப்பறிந்ததும் புத்திசாலித்தனமான விசாரணைக்கு ஒரு சோற்றுப் பதம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வழக்கில் போதிய சாட்சியம் இல்லாததால் நீதிமன்றம் தண்டனை வழங்கவில்லை. இந்த நூல்கள் குற்றங்களையும் அதன் விசாரணையையும் சொல்லும் விதத்தில், நம் நோக்கில் அறம் சார்ந்த சில கேள்விகளையும் முன்வைக்கின்றன.
சீர்திருத்தவா? சிறுமைப்படுத்தவா?
விலை: ரூ.350
புலன் விசாரணை ஒரு கலை
விலை: ரூ.300
கண்ணப்பன் ஐபிஎஸ்
எழிலினி பதிப்பகம்
தொடர்புக்கு: 98406 96574