தமிழ்ச் சிறுகதையில் பெண்மொழியைத் தொடர்ந்து கவனித்து வருபவர் பேராசிரியர் அ.ராமசாமி. இந்த நூலில் பெண் எழுத்தாளர்கள் 28 பேரின் ஆக்கங்களை ராமசாமி எடுத்துக்கொண்டுள்ளார். ஒரு வாசகராகவும் விமர்சகராகவும் இந்தக் கதைகளை அணுகி வாசகர்களுக்கான புதிய சாளரங்களைத் திறந்துவைக்கிறார். ஆர்.சூடாமணி முதல் இன்றைக்கு எழுதிவரும் தீபு ஹரி வரை பலரது ஆக்கங்களைக் கட்டுரைப் பொருளாகக் கொண்டுள்ளது இந்த நூல்.
பெண்ணிய வாசிப்புகள்
அ.ராமசாமி
எழுத்து பதிப்பகம்
விலை: ரூ.300
அரங்கு எண்: 540, 541
சமயங்களின் அரசியல் வரலாறு | செம்மை: தமிழ்ச் சமய வரலாற்றைப் பண்பாடு, அரசியல் பின்னணியில் முன்வைக்கிறது இந்த நூல். சங்க காலத்தில் கோயில்கள் ஒரு பெரிய அமைப்பாக இருக்கவில்லை. சோழர்கள் காலத்தில்தான் கோயில்கள் பல கட்டப்பட்டன. அந்தக் கோயில்கள் எப்படிச் சமூகமாக ஆயின என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.
சோழர் கால உணவு உற்பத்திப் பெருக்கம் பெரும் போர்ப்படையை வைத்துக்கொள்ள வழிவகுத்தது. இந்தப் புதிய பின்னணியில் ச.செந்தில்நாதன் தன் ஆழமான பார்வையுடன், இந்த கட்டுரை நூல் வழி முன்வைக்கிறார். தமிழ்ச் சமய வரலாறு பற்றிய புதிய தெளிவை இந்த நூல்வழி அவர் ஏற்படுத்துகிறார்.
தமிழ்நாட்டுச்
சமய வரலாறு
சிகரம் ச.செந்தில்நாதன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.600
அரங்கு எண்: 605, 606
சமகால அரசியலின் கண்ணாடி | நம் வெளியீடு: சமகால நிகழ்வுகளையும் போக்குகளையும் ஆவணப்படுத்துவது ஒரு நாளிதழின் முக்கிய அம்சம். தமிழ் இதழியல் உலகில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் கருத்துப் பேழைக் கட்டுரைகள் தனித்துவ அடையாளம் பெற்றவை. சமூக நிகழ்வுகள், ஜனநாயக விழுமியங்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், வரலாற்றுச் சுவடுகள், மொழி அரசியல், இலக்கியம் எனப் பல்வேறு விஷயங்களை விரிவாகப் பேசும் கட்டுரைகள் அதில் இடம்பெற்றுவருகின்றன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது.
வெவ்வேறு வகைமைகள், கட்டுரையாளர்கள், பேசுபொருள்கள் எனப் பல வகைப்பாடுகளின் அடிப்படையில், தேர்வுசெய்யப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரைகள், ஒரு காலக்கட்டத்தின் பிரதிபலிப்பு. தமிழில் அறிவியல் சார்ந்த சொல்லாடலை இந்து தமிழ் திசை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகிறது. அதன் பிரதிபலிப்பை இந்நூலில் பார்க்கலாம். வாசகர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று இந்தத் தொகுப்பு வெளியாகிறது.
தலையங்கப் பக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி -1)
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: 220
தொடர்புக்கு: 74012 96562
இந்து தமிழ் திசை அரங்கு எண்: 55 & 56
வெளி அரங்கில் இன்று... புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (1.1.25) மாலை 6 மணி அளவில் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்கிற தலைப்பில் பர்வீன் சுல்தானா உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து ‘தமிழ் ஓசை - சங்க காலப் பாடல்கள் இன்றைய இசையில்’ என்கிற தலைப்பில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உரையாற்றுகிறார். இந்நிகழ்வுக்கு தாரேஸ் அகமது இ.ஆ.ப. தலைமை தாங்குகிறார். பபாசி செயற்குழு உறுப்பினர் சிவ செந்தில்நாதன் வரவேற்புரையும் பபாசி செயற்குழு உறுப்பினர் எஸ்.ராம் குமார் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.