இலக்கியம்

சிக்கல் | அகத்தில் அசையும் நதி 5

சு.தமிழ்ச்செல்வி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ‘சிக்கல்’ என்பது ஓர் ஊரின் பெயர். இங்கு நான் சொல்லவந்த ‘சிக்கல்’ வேறு. ஜெனிட்டா என்கிற ஆறு வயது சிறுமியின் குடலில் ஏற்பட்ட சிக்கல் பற்றியது. ஜெனிட்டா கைக்குழந்தையாக இருந்தபோதே அவளுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. அப்போதெல்லாம் அக்கம் பக்கத்துத் தாய்மார்கள் சொல்வதைக் கேட்டு லில்லி டீச்சர் குழந்தையைத் தன் காலில் உட்காரவைத்து மலத்துளைக்குள் முருங்கைக்கீரையின் சிறுகாம்பை விடுவாள். சிறிது நேரத்தில் எவ்வளவு இறுகிப் போயிருந்தாலும் வெளியே வந்துவிடும்.

ஆனால், இப்போதெல்லாம் அவ்வாறு செய்ய ஜெனிட்டா ஒப்புக் கொள்வதில்லை. எத்தனையோ மருத்துவர்களிடம் காண்பித்தும் பிரயோசனமில்லை. சில மருத்துவர்கள் நீட்டு நீட்டான மாத்திரைகளைக் கொடுத்து மலப்புழைக்குள் வைக்கச்சொன்னார்கள். எதுவும் பலன் தரவில்லை. தினம்தோறும் காலைநேரத்தில் இதன் காரணமாகத் தாய்க்கும் மகளுக்கும் பெரும் மல்லுக்கட்டே நடக்கும். லில்லியைப் போலவே அவள் கணவன் சேவியரும் பள்ளி ஆசிரியர்.

அவர்கள் குடியிருக்கும் அந்தச் சிறு நகர்ப் பகுதியிலிருந்து கிராமப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும். இருவருக்கும் இருவேறு திசைகள். ஜெனிட்டாவுக்கு மட்டும் வீட்டுக்கு அருகிலேயே பள்ளிக்கூடம் இருந்தது. ஒன்பது மணிக்குள் மூன்று பேரும் அவரவர் பள்ளிகளில் இருந்தாக வேண்டும். ஐந்து மணிக்கு எழுந்தாலும் வீட்டு வேலை, சமையல் வேலை, தன் வேலை முடித்து ஓடவே நேரம் போதாது. இதில் தினம்தோறும் மகளின் குடலோடு குஸ்தி போடுவதென்பது லில்லிக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.

லில்லி கொடுத்த பேப்பரை வாங்கிக் கொண்டு கழிவறைக்குள் சென்ற ஜெனிட்டா பெருமுயற்சிக்குப்பின் எதையோ சாதித்துவிட்டதைப் போல எழுந்து பார்க்கிறாள். பேப்பரில் இரண்டு சொட்டு ரத்தமும் இரண்டு மூன்று புழுக்கைகளுமே கிடக்கின்றன. வலிக்கும் என்கிற பயமே அவளை அதற்கு மேலும் உட்கார விடாமல் செய்தது. வெளியே ஆத்திரமும் அழுகையும் கலந்த லில்லியின் வழக்கமான புலம்பல் கேட்டுக் கொண்டிருந்தது.

அதேநேரம் வெளியே போய்விட்டு வந்த சேவியர், “லில்லி ரெண்டு நாள் எனக்கு லீவு சொல்லிட்டேன். ஊருக்குப் போறேன். கொல்லையில அறுப்பு அறுக்குதாம். அண்ணனும் ஊருல இல்ல. பாவம் அம்மா, அப்பா வயசானவங்க. அவங்களால சமாளிக்க முடியாது. நான்தான் இந்தத் தடவ பாத்தாகணும். நான் இப்பவே கிளம்புறேன். ஏழு நாப்பதுக்கு ஒரு பஸ் இருக்குல்ல. அதைப் புடிச்சிடணும்” என்றான்.

“என்ன திடீருன்னு?”
“அதான் சொன்னனே. அப்பா இப்பதான் போன் பண்ணுனாங்க.”
அவசர அவசரமாய் எதை யெதையோ எடுத்து ஒரு பைக்குள் போட்டுக் கொண்டிருந்தார். தன் தாயிடமிருந்து இன்று எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருந்த ஜெனிட்டாவுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. “அப்பா நானும் ஊருக்கு வாறேன். ஆயா, தாத்தாவ பாக்கணும்” என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டாள். இனி அவளைச் சமாதானப்படுத்த முடியாதென்பதால் இருவரையும் அனுப்பிவைத்தார் லில்லி. சனிக் கிழமை விடியற்காலையில் தானும் ஊருக்கு வருவதாகச் சொல்லி இருந்தாள்.

சேவியருடன் மணமாவதற்கு முன் லில்லிக்கு ஒரு காதல் இருந்தது. படிக்கும் இடத்தில் ஏற்பட்ட நட்பு. விக்னேஷ் மாற்று மதத்தைச் சேர்ந்தவன் என்பதால் மேலதிகமான ஈர்ப்பு அவன் மீது ஏற்பட்டிருந்தது லில்லிக்கு. இதையெல்லாம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளும் காலத்திலா நாம் வாழ்கிறோம் என்று இருவரும் பரஸ்பர புரிதலுடன் பிரிந்துவிட்டார்கள். கடைசியாகப் பார்த்துக்கொண்டபோது அவன் அவளிடம் கைக்குள் அடங்கக்கூடிய அளவிலான சிறிய பிள்ளையார் சிலை ஒன்றைக் கொடுத்திருந்தான்.

அது இரண்டு, மூன்று தலைமுறைகளாகத் தன் குடும்பத்தில் இருந்துவந்ததாகவும் தனக்கு மிகவும் பிடித்த பிள்ளையார் என்றும் சொன்னான். ‘தேர்வு நேரங்களிலும் ஏதாவது பிரச்சினை என்றாலும் இதைக் கைக்குள் வைத்து வேண்டிக்கொள்வேன். என் நினைவாக இதை நீ வைத்துக்கொள். இந்தப் பிள்ளையார் எப்போதும் உனக்குத் துணையாக இருப்பார்’ என்றும் சொல்லியிருந்தான். லில்லியும் இதுவரையிலும் அந்தப் பிள்ளையாரை யாருக்கும் தெரியாமல் தன்னுடனே வைத்திருக்கிறாள். அவளுக்குமேகூட சில இக்கட்டான தருணங்களில் இந்தப் பிள்ளையார் மந்திரம் கைகொடுத்தி ருக்கிறது. விக்னேஷுடன் சேர முடியாத ஏக்கத்தை இது ஓரளவு சமன்செய்துகொண்டிருந்தது.

ஜெனிட்டாவை ஊருக்கு அனுப்பியதி லிருந்து லில்லிக்கு அவள் நினைவாகவே இருந்தது. இரண்டு நாள்களும் காலைக் கடன் கழிக்க முடியாமல் எப்படியெல்லாம் அவதிப்படப் போகிறாளோ என்று அதையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். இதை எப்படிச் சரிசெய்வது, யாரிடம் போய் மன்றாடி நிற்பது என்று யோசித்துக்கொண்டிருந்தவளின் மனதில் சட்டென்று அந்த எண்ணம் தோன்றியது. நாம் கலங்கி நின்ற சமயங்களில் நமக்குக் கைகொடுத்த பிள்ளையார் மந்திரத்தை ஜெனிட்டாவின் விஷயத்திலும் முயன்று பார்ப்பதென்று முடிவெடுத்திருந்தாள்.

அதன் பிறகு அவளால் தாமதிக்க முடிய வில்லை. விடியும் முன் எழுந்தாள். முதல் பேருந்தைப் பிடித்து ஊரில் இறங்கியபோது பொழுது விடிந்திருந்தது. கிராமத்து மனிதர்கள் விவசாய வேலைகளில் சுறுசுறுப்பாகி இருந்தனர். சேவியர் களத்து மேட்டுக்குச் சென்றிருப்பதையும் அவனோடு ஜெனிட்டாவும் சென்றிருப்பதையும் அறிந்து லில்லியும் அங்கே சென்றாள். மறக்காமல் அந்தப் பிள்ளையாரைத் தன் முந்தானையால் மறைத்து எடுத்துச்சென்றாள்.

தூரத்தில் ஜெனிட்டாவுடன் இன்னும் இரண்டு, மூன்று பிள்ளைகளின் பேச்சுக்குரல் கேட்டது. ஜெனிய மட்டும் தனியா கூப்பிட்டு இத அவளோட கையில கொடுத்து வேலி ஓரமா உட்காரவச்சி பாக்கணும் என்னும் திட்டத்தோடு நடந்தாள். பிள்ளைகள் ஊசியா, உலக்கையா என்று கேட்டு ஊசி எனச் சொன்னவர்கள் அருகருகாகவும் உலக்கை எனச் சொன்னவர்கள் விலகியும் பாவாடையை மழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். லில்லி அவர்களுக்குப் பின்னால் அரவம் படாமல் போய் நின்றாள். பிள்ளைகள் ஏதேதோ விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். “ஜெனி நான் ஒரு விடுகத போடுறன். நீ சொல்றியா?” என்றாள் ஒரு சிறுமி.

“ம்…போடு.”
“வேலி ஓரத்துல வெங்கலப் புள்ளயாரு அது என்ன?”
சற்று யோசித்துவிட்டு “எனக்குத் தெரியலயே...”
“ஒன்னகிட்டயேதான் இருக்கு நீ வேணும்னா எழுந்து பாறேன்.”
ஜெனிட்டா எழுந்து, “எங்க?” என்றாள். “ந்தோ” என கைகாட்டிய இடத்தைப் பார்த்த ஜெனிட்டா “ச்சீ போடி.. அசிங்கம்…” என முகம்சுளித் தாள். மற்ற பிள்ளைகள் கைகொட்டிச் சிரித்தார்கள். லில்லியும் அந்தச் சிறுமி கைகாட்டிய இடத்தைப் பார்த்தாள். தன் கை முந்தானையில் மறைத்து வைத்திருப்பதை ஒத்த அதைவிடவும் பெரியதான ஒரு பிள்ளையாரை ஜெனிட்டா அனாயசமாக உருவாக்கியிருந்தாள்.

கிழக்கிலிருந்து சூரியனின் கதிர் பட்டு அது பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருந்தது. லில்லியின் இதழ்களில் புன்னகை அரும்பியது. நிம்மதியாய் பெருமூச்சு விட்டாள். அவள் வீட்டுக்குச் செல்ல நினைத்துத் திரும்பி நடந்தாள். அவள் கையிலிருந்த பிள்ளையார் சிலை எங்கோ நழுவி விழுந்திருந்தது. தூரத்தில் தேவாலய மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது.

இவ்வாறு அந்தக் கதை முடிந்திருக்கும். கிராமத்துச் சூழல் தந்த குதூகலமான மனநிலையும் அங்கு அவளுக்குக் கிடைத்த இயற்கையான உணவு வகைகளும் அவளது குடலை இலகுவாக்கியிருக்குமோ? எது எப்படியோ தீர்ந்தது பிரச்சினை. ஜெனிட்டாவின் மலச்சிக்கல் மட்டுமல்ல, லில்லியின் மனச்சிக்கலும்தான்.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

SCROLL FOR NEXT