இலக்கியம்

நூல் நயம் | ஒரு கலைஞனுக்கான மரியாதை

பா.அசோக்

கலைஞன் என்பவன் காலத்தால் அழியாதவற்றைப் படைப்பவன். அப்படி ஒரு பன்முகத் தன்மை கொண்ட கலைஞர்தான், மு.கருணாநிதி. அரசியல், இலக்கியம், திரைத் துறை, ஆட்சி நிர்வாகம் என எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் இவரின் தரிசனம் கிடைக்கும். கருணாநிதியின் புத்தகங்கள் மட்டுமல்ல, அவரைப் பற்றியும் பல்வேறு புத்தகங்கள் வந்துள்ளன. அந்த வகையில் நா.சுலோசனா எழுதியுள்ள ‘திரைவானில் கலைஞர்’ என்னும் நூல் வெளிவந்துள்ளது.

கருணாநிதி வசனம் எழுதத் தொடங்கிய ‘ராஜகுமாரி’ முதல் (உண்மையில் அவரது முதல் படம் ‘அபிமன்யு’. ஆனால், ராஜகுமாரி முதலில் வெளியானதால் அதுவே முதல் படமானது) கடைசிப் படமான ‘பொன்னர் சங்கர்’ வரையிலும் அவரது படைப்பை ஆய்வு செய்து, தகவல் திரட்டி ஒரு நூலாகக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. அந்தப் பணியைத் திறம்படச் செய்து, திரைத் துறையில் கருணாநிதி என்னவெல்லாம் செய்தார் என்பதைக் கையடக்க நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியர். புராணக் கதையைப் பின்னணியாகக் கொண்டே பெரும்பாலான படங்கள் வெளிவந்த காலகட்டத்தில், அதை உடைத்துப் புதிய பரிமாணங்களுடன் சமூகக் கருத்துள்ள மாற்றுக் கதைக்களம் கொண்ட படங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்ததில் கருணாநிதியின் பங்கு மகத்தானது.

திரைப்படத்துக்காக அவர் எழுதிய எழுத்துகளில் சமூக மாற்றம், பகுத்தறிவு, சமூகநீதி, முற்போக்குச் சிந்தனைகள் மிளிரும். அதில் அவர் கவனமுடன் இருந்தார். அப்படி அவர் எழுதிய எழுத்து பின்னாளில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் விளிம்பு நிலை மனிதர்களின் மறுவாழ்வுத் திட்டங்களாக நடைமுறைக்கு வந்தது. பிச்சைக்காரர் மறுவாழ்வு, கைரிக் ஷா ஒழிப்பு போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.
திரைக் கதாபாத்திரங்களுக்கான பெயர்களை வைப்பதிலும் கருணாநிதி கூடுதல் கவனம் செலுத்துவார் என்பது இந்தப் புத்தகம் சொல்லும் மற்றொரு முக்கியச் செய்தி.

சபாரத்தினம், திலீபன், அழகிரி, தாளமுத்து, கார்க்கி, வள்ளியம்மை இப்படிப் பல தீரர்கள் இறந்த பின்னும் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான படங்களில் உலா வந்தனர். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரக் கதைப்படி பொற்கொல்லர்தான் குற்றவாளி. ஆனால், ‘பூம்புகார்’ படம் வெளியான காலக்கட்டத்தில் பொற்கொல்லர் சமூகத்தின் மீது பழிச்சொல் விழக் கூடாது என்பதற்காகத் திரைக்கதையை கருணாநிதி மாற்றியிருப்பார். கணவன் இறப்புக்கு நீதி கேட்டுக் கண்ணீர் உகுக்க வேண்டிய கண்ணகியைக் கம்பீரமாகக் கனல் தெறிக்கும் வசனங்களால் உருவகப்படுத்த கருணாநிதியால்தான் முடியும்.

‘பராசக்தி’ படத்துக்கு எதிரான விமர்சனத்துக்குப் பதிலளித்துக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுதிய கவிதை, அந்தப் படத்தின் மூலக் கதையைத் தந்தது பாவலர் பாலசுந்தரம் என்பன போன்ற பல தகவல்களின் பெட்டகமாக இருக்கிறது இந்தப் புத்தகம்.

சில பாடல்கள் நமக்குப் பரிச்சயமானவையாக இருக்கும். ஆனால், எழுதியது யார் எனத் தெரியாது. ‘காகித ஓடம் கடல் அலை மீது...’, ‘வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்...’ போன்ற பாடல்கள் அது போன்றவை. இவை எல்லாம் பாடலாசிரியர் கருணாநிதியின் பங்களிப்பு எனப் பட்டியலிடுகிறது இந்நூல்.

கருணாநிதி நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் இந்தக் காலக்கட்டத்தில் இந்த நூல் வெளிவருவது பொருத்தமானது. இந்த நூல் வழி கருணாநிதிக்குப் பெரிய மரியாதையைச் செலுத்தியுள்ளார் சுலோசனா.

திரைவானில் கலைஞர்
முனைவர் நா.சுலோசனா
சீதை பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 97907 06548

- தொடர்புக்கு: ashok.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT