மதுரை மாவட்டத்தில் உள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தில் வாழ்கின்றவர்கள் பற்றிக் கவிஞர் செந்தி எழுதியுள்ள ‘நினைவுகளின் நிலவெளி’ நூல், சமகாலப் பதிவாக விரிந்துள்ளது. கிராமத்தின் வீடுகள், தெருக்கள், குளங்கள், வேளாண்மை, கோயில்கள், திருவிழாக்கள், பள்ளிக்கூடங்கள் என விவரிக்கப்படும் பிரதியில் மனிதர்கள் பற்றிய முடிவற்ற பேச்சுகள் ததும்புகின்றன.
இப்படியான காலத்தில் தன்னைச் சுற்றிலும் நடந்த சம்பவங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் விருப்பம்தான் செந்தியை நினைவுகளின் நிலவெளியைச் சமூக வலைதளத்தில் எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.
செந்தி, தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் வழியாக வன்னிவேலம்பட்டி என்ற சிறிய கிராமம் உருவான வரலாற்றுப் பின்புலத்தையும், அந்த ஊரின் சமூகப் பண்பாட்டுச் சூழல்களையும் அவற்றை உருவாக்கிய காரணங்களையும் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளார்.
கிராமத்தின் கடந்த 50 ஆண்டு காலச் சாட்சியாகத் தன்னைக் கருதுகின்ற செந்தி, தனக்கும் கிராமத்துக்கும் இடையில் நிலவுகின்ற உயிரோட்டமான உறவை எடுத்துரைத்துள்ள முறை, அழுத்தமானது. வெறுமனே கிராமத்தின் பெருமையைச் சிலாகிக்காமல் அங்கே வாழ்கின்ற மக்களின் நல்லதும் கெட்டதும் கலந்த வாழ்க்கையைச் சித்திரித்திருப்பது, வாசிப்பில் சுவாரசியமாக வெளிப்பட்டுள்ளது.
கிராமத்தின் தெருக்கள், வயல், தெப்பம், மடம், கோயில் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ள தகவல்கள், கிராமத்தினரின் இருப்பை உறுதிசெய்கின்றன; நிலத்துக்கும் ஊராருக்கும் இடையிலான உறவைப் புலப்படுத்துகின்றன. கிராமத்தில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள கல்லுப்பட்டி என்ற பெரிய ஊருக்குச் செல்வதுகூட ஒருவகையில் கிராமத்தினருக்குப் பயணம்தான்.
அன்றாடத் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு ஊருக்குள்ளேயே திரிகின்ற மனிதர்கள் வேம்புலையன் கோயில் திருவிழா, பொங்கல், சப்பரம் ஜோடித்தல் போன்றவற்றில் தங்களுடைய இருப்பையும் கிராமத்து வாழ்க்கையையும் அடையாளப்படுத்துகின்றனர். ஊரில் நடைபெற்ற கொலை, கத்திக்குத்து, காவல் துறையினரின் அராஜகம் போன்ற சம்பவங்களை உணர்ச்சிபூர்வமாக விவரிக்கும்போது செந்தி ஒருநிலையில் கதைசொல்லியாக மாறிவிடுகின்றார்.
வெள்ளந்தியான கிராமம் என்றாலும் கண்காணிப்பின் அரசியல் நிலவெளியெங்கும் அழுத்தமாக நிலவுகின்றது. கிராமத்தில் எல்லோருடைய நெற்றியிலும் இன்னாரின் பேரன் அல்லது இன்ன வகையறா அல்லது இன்ன சாதி என்பது ஸ்தூலமாகத் தெரியும். செந்தியின் நினைவுகளில் எல்லா மனிதர்களும் ஒருவகையில் நல்லவர்களே.
கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் செமையாக அடி வாங்கிய செந்தி, அவர்களை இயல்பாகக் கடந்து போனதுடன் இன்றளவும் நட்பாகவும் மரியாதையாகவும் இருக்கிறார். எங்கும் குற்றங்களும் துயரங்களும் ஆளுகை செலுத்தினாலும், மனிதர்களை அவர்களுடைய இயல்புகளுடன் செந்தி நேசித்திருப்பது பிரதியில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. - ந.முருகேசபாண்டியன்
நினைவுகளின் நிலவெளி
செந்தி
மேகா பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9080314831
நம் வெளியீடு: குறள் நெறி கூறும் ஆங்கில நூல்: திருக்குறள் கூறும் நெறிகள் பற்றிப் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், சோம. வீரப்பனின் அணுகுமுறை வித்தியாசமானது. திருவள்ளுவர் தன் குறளில் பல நிர்வாகக் கருத்துகளையும் சொல்லியுள்ளார்.
அதைத் திறம்படத் தேடி எடுத்து வாசகர்களுக்கு இந்நூல் வழி விருந்து படைத்துள்ளார் அவர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘வணிக வீதி’ இணைப்பிதழில் அவர் எழுதிய 125 கட்டுரைகள் வெளிவந்த காலத்தில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
அந்தக் கட்டுரைகள் தலைமைப் பண்பையும் நிர்வாகத் திறனையும் வளர்த்துக் கொள்ள உதவியது எனலாம். ஒரு வகையில், இது நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, சந்தைப்படுத்தல் மேலாண்மை போன்ற நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தொடர் எனலாம்.
இந்த நூலின் முதல் 60 கட்டுரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. திருக்குறளின் சாராம்சத்தைப் பிழிந்து அதை விரிவுபடுத்துவது எளிதான காரியமல்ல. ஆனால், அதை சோம. வீரப்பன் திறம்பட இந்நூலில் செய்துள்ளார்.
தி ஆர்ட் ஆஃப் ஜாகிங் வித் யுர் பாஸ் (The Art of Jogging With Your Boss)
சோம. வீரப்பன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.250
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562
தினந்தோறும் பூக்கும் ஒளி: சமூகத்துக்குப் பயனளிக்கும் பல முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்துவருபவர் எழுத்தாளரும் முன்னாள் தலைமைச் செயலாளருமான இறையன்பு. தினமும் தனது நட்பு வட்டத்துக்கு வாட்ஸ்அப்இல் அவர் அனுப்பும் சின்ன சின்ன செய்திகளில்கூட, ஒரு கவிதைக்கான தெறிப்பும் ஆழ்ந்த சிந்தனைகளும் வெளிப்படும். அப்படியான காலை நேரப் பகிர்வுகளைத் தொகுத்து வெளியிட்ட ‘இறையன்புவின் அமுத மொழிகள்’ என்னும் தொகுப்பு பலராலும் பாராட்டுப் பெற்றது. அதன் இரண்டாவது தொகுப்பாக ‘வைகறை வாழ்த்துகள்’ வரவாகியுள்ளது.
‘மரம் மெளனமாக இருப்பதாலேயே/வெட்டும்போது வலிக்காது என்பதல்ல’, ‘இயல்பான புன்னகையை இதழ்கள் சிந்தினால்/மலர்ந்து விடுகின்றது இதயம்’, ‘உதிர்ந்து/கிடக்கும் ஒவ்வொரு பறவையின் இறகிலும்/காற்று வெளியின் இரகசியம் காப்பாற்றப்படுகிறது’ - இப்படியாக நூல் முழுக்க 765 நற்சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார் நூலாசிரியர்.
பொன்மொழியாக, தத்துவமாக, ஹைக்கூ கவிதையாக எழுதப்பட்டுள்ள வரிகளை வாசிக்கையில், தினமும் நமக்கும் அனுப்பினால் நற்சிந்தனையோடு அன்றைய நாளைத் தொடங்கலாமே என்னும் ஆவல் எழுவதைச் சொல்லியே ஆக வேண்டும். - மு.முருகேஷ்
வைகறை வாழ்த்துகள்
இறையன்பு
கற்பகம் புத்தகாலயம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 044-2431 4347
தளராத போராட்டத்தின் வரலாறு: கவிஞர் அறிவுமதியின் பிரபலமான கவிதை ஒன்று, ‘துப்பாக்கிக் கையிலிருந்தும்/ தான் பிறந்த பொன்பரப்பி மண்ணில்/துடிதுடிக்கச் செத்தான் தமிழரசன்’ என்று தமிழரசனைப் போற்றுகிறது. தமிழ்நாடு இடதுசாரி இயக்க/தமிழர் போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒரு பெயர் தமிழரசன்.
இந்திய விடுதலைக்குப் பிறகும் நாட்டில் நிலவிய வர்க்க பேதத்தை ஒழித்துக்கட்ட இடதுசாரி இயக்கங்கள் களத்தில் இறங்கின. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாரு மஜும்தரின் நக்சல்பாரி இயக்கம் அவற்றுள் ஒன்று. அந்த இயக்கத்தால் உந்தப்பட்டவர்களில் தமிழரசனும் ஒருவர்.
பொறியியல் மாணவரான தமிழரசன், இயக்கச் செயல்பாடுகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான ஈர்ப்பு, தமிழரசனின் போராட்ட வாழ்க்கையில் திருப்புமுனையானது. தேசிய இன விடுதலை என்கிற மையத்தை நோக்கிப் பின்னால் நகர்ந்தார் அவர். தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை அதற்காக புலவர் கலியபெருமாளும் தமிழரசனும் இணைந்து தோற்றுவித்தனர்.
இந்த தமிழரசன் என்கிற ஆளுமையை இந்நூலின் கட்டுரைகள் துலக்கமாக்குகின்றன. தமிழரசனின் தீவிர இயக்கச் செயல்பாட்டால் அவரது மெய்யியல் தேடல் பல சமயம் பின்னோக்கிப் போவதுண்டு. ஆனால், இந்த நூல் தமிழரசனின் மார்க்சியப் பாடத்தைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.
சாரு மஜூம்தார் இறப்புக்குப் பிறகான நக்சல்பாரி இயக்கத்தின் பிளவு, அதில் தமிழரசனின் நிலை எனத் தனி நபர் வரலாறு ஒரு இயக்கப் போராட்டத்தின் வரலாறாகவும் இந்நூலில் தொழிற்பட்டுள்ளது.
தமிழரசன் மேற்கொண்ட தாக்குதல் போராட்டங்கள் இந்நூலில் சம்பவம், சம்பவமாகத் திருத்தமாகவே சொல்லப்பட்டுள்ளன. அன்றைய இந்தியப் பிரதமரின் தமிழ்நாட்டு வருகையின்போது, அவர் வாகனம் பயணிக்கவிருந்த பாதையில் குடமுருட்டிப் பாலத்தின் மீது அடையாளத் தாக்குதல் நடத்தித் தங்கள் எதிர்ப்பைத் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
பெரிய வரலாற்று விபத்தான அரியலூர் மருதையாற்றுப் பாலம் தகர்ப்பு பற்றிய விளக்கமான விவரிப்பும் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பாலம் தகர்ப்பு பற்றிப் பல கதைகள் உலா வரும் நிலையில், இந்த நூலும் ஒரு விசாரிப்பைச் செய்துள்ளது.
ஆனால், ஒரு போராட்ட வரலாற்றைச் சொல்லும் தொனிக்கு மாறாக அந்த விவரிப்புகள் ஒரு புனைகதையின் விறுவிறுப்புடன் சொல்லப்பட்டுள்ளன. தோழர்கள் தியாகு, பொழில்வாய்ச்சி இளங்கோவன், தமிழ்வாணன், புலவர் கலியபெருமாள் போன்றோரின் எழுத்துகள் இந்த நூலுக்குக் கனம் சேர்க்கின்றன.
அரியலூர் பாலம் தகர்ப்புக்குப் பிறகும் அவரது நம்பிக்கைக்குரிய பொன்பரப்பியில் மக்களால் தாக்கப்பட்டுக் கொல்லப்படும்வரை தமிழரசன் தனது ஆயுதப் போராட்டத்தை எதன் பொருட்டும் நிறுத்திவிடவில்லை என்பது கவனத்துக்கு உரியது. மேலும், தமிழரசனுக்குப் பிறகான இந்த இயக்கத்தின் தொடர்ச்சி பற்றியும் இந்த நூல் பதிவுசெய்வது விசேஷமானது. - ஜெய்
தோழர் தமிழரசன் விடுதலை வீரன்
தொகுப்பு: தமிழ்நேயன்
பொதுமைப் பதிப்பகம்
விலை: ரூ.690
தொடர்புக்கு: 8056119257