இலக்கியம்

நூல் நயம்: காலத்தை உரைக்கும் கலை

Guest Author

சென்னை ஓவிய இயக்கத்தின் முதல் தலைமுறைப் படைப்பாளி மணியம். இவரது ஓவியம், ஒரு காலகட்டத்தைத் தன்னுள்ளே வைத்திருக்கும் பெட்டகம். தமிழில் மிகப் பிரபலமான ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களுக்கு ஸ்தூலமான வடிவம் வழங்கியது மணியம்தான். அவரது நூற்றாண்டு 2024இல் தொடங்குகிறது. அதை ஒட்டி ‘மணியம் 100’ நூலை அவரது மகனும் ஓவியருமான மணியம் செல்வன் ஆசிரியராக இருந்து கொண்டுவந்துள்ளார். ஓவியக் கல்லூரியிலிருந்து ‘கல்கி’ இதழுக்குச் சென்று பிறகு, திரைத் துறை என ஒரு நதியைப் போல் விரிவுகொண்ட மணியத்தின் பயணத்தை இயல்பாக இந்த நூல் சித்தரித்துள்ளது.

தன்னுடைய அப்பாவுக்கு ஒளிப்படக் கருவி மேல் இருந்த விருப்பத்தை ம.செ. அழகாக ஒரு கட்டுரையில் விவரித்துள்ளார். ஒளிப்படங்களை மாதிரியாகக் கொண்டு அவர் தீட்டிய ஓவியங்களைப் பற்றியும் அதில் பகிர்ந்துள்ளார். துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள தென்னிந்தியச் சிற்பக் கலையின் விசேஷமான தலமான ஹம்பிக்கு மணியம் சென்ற பயணத்தையும், அங்கு அவர் செய்த கலைப் பணியையும் ம.செ. தன் அம்மாவின் குரலில் பதிவுசெய்துள்ளார். மணியத்துடன் பயணித்த அந்தக் கால ஓவியர்களையும் கவனத்துடன் இதில் பதிவுசெய்துள்ளனர். மணியத்தின் வண்ண ஓவியங்கள் பல இதில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவை மணியத்தின் திறனையும் ஒரு காலகட்டத்தையும் வாசகர்களுக்குப் பகிர்கின்றன. - விபின்

மணியம் 100
(சரித்திரம் படைத்த சித்திரங்கள்)

பூம்புகார் பதிப்பகம்
விலை: ரூ.960
தொடர்புக்கு: 044 25267543

உளவாளிப் பெண்கள்: உளவுப் பணி என்பது ஆபத்து நிறைந்த, புத்திசாலித்தனம் தேவைப்படும் வேலை. முதல், இரண்டாம் உலகப் போர் காலகட்டங்களில் அதிக அளவில் பெண் உளவாளிகள் இருந்தனர். அவர்களில் பலர் உயிரைப் பணயம் வைத்தும் உயிரை இழந்தும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். நூர் இனாயத் கான், அன்னா சாப்மேன், வர்ஜினியா ஹால், மாதா ஹரி, ஜோசபின் பேக்கர் போன்ற புகழ்பெற்ற 18 பெண் உளவாளிகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளனர். அதே நேரம் அழகு, கவர்ச்சி போன்ற வார்த்தைகளால், இந்தப் பெண்களின் உழைப்பைச் சிறுமைப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம். - ஸ்நேகா

பிரமிக்க வைக்கும்
பெண் உளவாளிகள்

குன்றில் குமார்
சங்கர் பதிப்பகம்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 94441 91256

நம் வெளியீடு: பெற்றோருக்கு வழிகாட்டும் நூல்

பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பற்றி எண்ணுவதை இரண்டுவிதமாகச் சுருக்கிவிடலாம். ஒன்று, ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எல்லாமே தெரியும்’, இரண்டாவது, ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது’. இவை இரண்டும் முழு உண்மையல்ல. நாம் குழந்தைகளாக இருந்தபோது கிடைக்காத வாய்ப்புகள், இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. உலகம் முழுவதையும் அவர்கள் இருந்த இடத்திலேயே அறிந்துகொள்கிறார்கள்.

தொழில்நுட்ப அறிவியலிலும் இணையத்தைக் கையாள்வதிலும் நம்மைவிட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். இவை மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த அறிவு அவர்களை ஆக்கபூர்வமாக வழிநடத்துகிறதா, அவர்களது சிந்தனையை வேறு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறதா என்பதுதான் இந்த நூல் எழுதப்படக் காரணம்.

பதறும் பதினாறு
பிருந்தா சீனிவாசன்

விலை: ரூ.180
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402
ஆன்லைனில் வாங்க: store.hindutamil.in/publications

SCROLL FOR NEXT