நொடிதோறும் கடந்தோடும் வாழ்க்கையின் ஓட்டத்தில் கடந்த கால வரலாற்றினை அறிவதும் தெளிவதும் அவசியமானதே. ஆண்டுகளின் குறியீடாக, வெறும் பெயர்களாக, ஓரிரு சம்பவங்களாக மட்டுமே சிலவற்றை அறிந்துகொள்வது ஒருபோதும் வரலாற்றை அறிவதாகாது.
நெடிய காலத்தின் ஒவ்வொரு ஆண்டிலும், ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும், ஒவ்வொரு நிகழ்வுகளுக்குப் பிறகும் பலப்பல செய்திகள் பின்னிப் பிணைந்துள்ளன. வரலாற்றினைக் கட்டுரையாக எழுதுவதைவிடவும் நாவலாக எழுதும்போது இன்னும் பரவலான வாசகப் பரப்பைச் சென்றடையும் என்கிற எண்ணத்தில், கடையேழு வள்ளல்களுள் ஒருவராகத் திகழ்ந்த வள்ளல் அதியமானின் வாழ்க்கையைப் புதினமாக்கியுள்ளார் இரவீந்திர பாரதி.
தகடூர் உள்ளிட்ட தமிழ் நிலத்தின் பெரும்பகுதியை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி குறித்த தகவல்கள் பல சங்க கால நூல்களில் இடம்பெற்றுள்ளன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் கிடைக்கப்பெற்ற தரவுகளை மையப்படுத்தி, சுவாரசியமான மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது இப்புதினம். அறத்தின் வழிநின்று ஆட்சிசெய்த, கொடையுள்ளம் கொண்ட அதியமானை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்வதில் வெற்றியடைந்துள்ளது. - மு.முருகேஷ்
அறம் வளர்த்த அதியமான்
இரவீந்திர பாரதி
பரிதி பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 72006 93200
சமகாலச் சரித்திரம்: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சங் பரிவாரம், பாஜகவின் அரசியல் போக்கை விவரிக்கிறது ‘நேற்று குஜராத் இன்று மணிப்பூர் நாளை..?’ என்கிற நூல். அந்தந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த செய்திகளின் அடிப்படையில் அவற்றின் பின்னணியைப் பேசுகிறது இந்நூல். குஜராத்தில் சங் பரிவாரம் செயல்பட்ட விதம் தொடங்கி, தற்போது மணிப்பூர் கலவரம் வரை நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலை வலுவூட்டும் வகையில் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோரின் கட்டுரைகள், பேட்டிகள் இடம்பெற்றிருப்பது வாசிப்புக்கு உறுதியை அளிக்கிறது. - மிது
நேற்று குஜராத் இன்று மணிப்பூர் நாளை..?
எம்.ஆர்.ரகுநாதன்
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 044-24331510
வேதாகமத்தின் வரலாறு: கிறிஸ்துவ வேதாகமத்தின் வரலாறு போலவே தமிழ் கிறிஸ்துவ வரலாறும் நீண்டது. 1706ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வருகை தந்த சீகன் பால்குதான் முதன்முதலில் வேதாகமப் பகுதிகளைத் தமிழில் வழங்கினார். 1967இல் புரட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்களும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களும் பயன்படுத்தக்கூடிய பொது மொழிபெயர்ப்பு வந்தது. கிறிஸ்துவ வேதாகமத்தின் வரலாறு கிறிஸ்துவ சமயத்துக்கு மட்டுமன்றி, தமிழ் உரைநடை வரலாற்றுக்கும் முக்கியமானது. தமிழ், ஆங்கிலம் உள்பட 5 மொழிகளில் புலமையுடையவர் பேராயர் சபாபதி குலேந்திரன். 20 ஆண்டு கால உழைப்பில் இந்த நூலை எழுதியிருக்கிறார். - ஸ்நேகா
கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு
சபாபதி குலேந்திரன்
குமரன் புத்தக இல்லம்
விலை: ரூ.325
தொடர்புக்கு: 94448 08941.
புதிய அரசியல் பாடல்கள்: தமிழ் நாட்டார் இலக்கியம் தனித்துவம் கொண்டது. செவ்விலக்கியத்துக்கு நிகரான கற்பனை வளமும் சொல்லாட்சியும் கொண்டது. அந்த நாட்டார் பாடல் வகையில் வையம்பட்டி முத்துச்சாமி இயற்றிய பாடல்களின் தொகுப்பு இது. பல வண்ணங்களில் முத்துச்சாமி பாடல்களை இயற்றியிருக்கிறார். ‘பருத்திச் செடிக்குப் பஞ்சு மிட்டாயைத் தின்னக் கொடுத்தது யாரு’ எனக் குழந்தைகளின் அதிசயக் கேள்விகளுடனான பாட்டும் இதில் உண்டு.
‘நின்னு நிமிர்ந்து போனவனை அந்த ‘நெப்போலியன்’ சாச்சுப்புட்டான்’ எனக் குடியின் கேடுகளை விவரிக்கும் பாட்டும் இதில் உண்டு. மாறிவிட்ட நமது பண்பாட்டை, அரசியல் சூழலைக் கவலையுடன் பல பாடல்கள் பதிவுசெய்துள்ளன. இந்தப் பாடல்கள் அதன் உள்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளன. என்றாலும் ஓசை நயத்தையும் கவித்துவத்தையும் பாடல்களில் வாசித்துணர முடிகிறது. - விபின்
வையம்பட்டி முத்துச்சாமி பாடல்கள்
ஜெய்ரிகி பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 8643842772