ஓலைச்சுவடிகளில் எழுதிய பழங்கால எழுத்தாணி கண்டுபிடிப்பு - பெருங்கதை குறிப்பிடும் வெட்டெழுத்தாணி கிடைக்கவில்லை

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: தமிழர்கள் ஓலைச்சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணிகள் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கிடைத்துள்ளன.

தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி தொன்மையான அறிவு மரபுகளை பாதுகாத்து வந்துள்ளனர். ஓலையில் எழுதி வைக்கும் பழக்கமே பெரும்பாலும் இருந்துள்ளது. ஓலையில் எழுதுவதற்கு எழுத்தாணியைப் பயன்படுத்தி உள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கத்தாலான எழுத்தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஓலைச்சுவடிகளை சேகரித்துப் பதிப்பித்து வரும் தமிழக அரசின் திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப்பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறைப் பேராசிரியருமான சு.தாமரைப்பாண்டியன் இந்த எழுத்தாணிகளைக் கண்டுபிடித்துள்ளார். மதுரையில் சிவக்குமார், திருநெல்வேலியில் ராமலிங்கம், கன்னியாகுமரியில் கணேசன் ஆகியோரது வீடுகளில் ஓலைச்சுவடிகளைத் தேடும்போது இந்த அரிய எழுத்தாணிகள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது: தமிழர்கள் ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந்துள்ளது. தமிழர்களின் தொன்மை அறிவு தொழில்நுட்பக் கருவியான எழுத்தாணிகளையும் பாதுகாப்பது அவசியம். அகநானூறு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, தமிழ்விடு தூது ஆகிய நூல்களில் ஓலையில் எழுதிய குறிப்புகள் காணப்படுகின்றன.

மந்திர ஓலை, சபையோலை, அறையோலை இறையோலை, தூதோலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன்னோலை, படியோலை என்று அழைக்கப்பட்டன. ஓலைகளைப் பாதுகாக்கும் இடம் ஆவணக் களரி என்றழைக்கப்பட்டது.

எழுத்தாணியால் ஓலையில் எழுதுவது கடினமான செயல் என்பதை ‘ஏடு கிழியாதா, எழுத்தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் தனிப்பாடல் வரிகள் குறிக்கின்றன. பொன்னாலான எழுத்தாணி இருந்ததை சீவக சிந்தாமணி மூலம் அறிய முடிகிறது.

பழந்தமிழர்கள் பயன்படுத்திய குண்டெழுத்தாணி, கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், பெருங்கதையில் குறிப்பிடும் வெட்டெழுத்தாணி மட்டும் இதுவரை எங்குமே கிடைக்கவில்லை. ஓலைச்சுவடிகளைத் திரட்டி நூலாக்குவதுபோல் மரபு தொழில்நுட்பக் கருவிகளான எழுத்தாணிகளைப் பாதுகாப்பதும் அவசியம் என்றார்.

எழுத்தாணி வகைகள்: குண்டெழுத்தாணியை குழந்தைகள் எழுதிப் பழக பயன்படுத்துவர். இது அதிக நீளமின்றி எழுத்தாணியின் கொண்டைப்பகுதி கனமாகவும் குண்டாகவும், முனைப்பகுதியின் கூர்மை குறைவாகவும் காணப்படும். இதில் எழுதும் எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

கூரெழுத்தாணியை நன்கு கற்றுத்தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். இதன் முனைப்பகுதி கூர்மையாக இருக்கும். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரிகள் வரை எழுதலாம்.

வாரெழுத்தாணியானது சற்று நீளமாக இருக்கும். கொண்டைக்குப் பதில் சிறிய கத்தியும், கீழ்ப் பகுதியில் கூர்மையாக இருக்கும். கத்தி, ஓலையை வாருவதால் வாரெழுத்தாணி என்றானது.

மடக்கெழுத்தாணியானது, ஒருமுனையில் கத்தியும், மறுமுனையில் கூராகவும் உள்ளதை ஒரு மரக் கைப்பிடிக்குள் மடக்கி வைப்பதால் மடக்கெழுத்தாணி என்றானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

39 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்