சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தேவாரம் பதித்த செப்பேடுகள் முதன்முறையாக கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை சென்னையிலிருந்து வந்துள்ள கோயில்கள், மடங்களின் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்க திட்டப்பணி ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு செய்ய தொடங்கினர்.

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யாகசாலை அமைக்க மண் எடுப்பதற்காக, கோயில் உட்புறத்தில் மேற்கு கோபுர வாசல் அருகே நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம்மூலம் பள்ளம் தோண்டப்பட்டபோது, சுமார் 2 அடி ஆழத்தில் 23 உலோகச் சிலைகள், 410 முழுமையான செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இவை 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என முதல்கட்டமாக தெரியவந்தது. இதையடுத்து, அவை கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்கள், மடங்களின் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்க திட்டஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில்ஆய்வாளர்கள் இரா.சண்முகம், க.தமிழ்ச் சந்தியா, சுவடி திரட்டுனர் கோ.விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் கு.பிரகாஷ்குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னையிலிருந்து சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வந்து செப்பேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த செப்பேடுகள் தலா 400 கிராம் எடை, 68 செ.மீ நீளம், 7.5 செ.மீ அகலம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆய்வு குறித்து தாமரைப்பாண்டியன் கூறியது: திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் செப்பேடுகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.ஆனால் தேவாரம் பதிப்பிக்கப்பட்ட செப்பேடுகள் முதன்முதலாக இங்குதான் கிடைத்துள்ளன. முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இவை தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும்.

மேலும், இக்கோயிலில் ஓலைச்சுவடிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்தபோது, 765 ஏடுகள் கொண்ட சுருணைக் கட்டு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் ஏடுகளில் கோயில் குத்தகை மற்றும் வரவு செலவு கணக்குமுறைகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. சுருணை ஏடுகள் எழுதப்பட்ட காலம் கி.பி. 1889-ம் ஆண்டு என்பதும் ஆய்வின் மூலம் அறிய முடிந்தது என்றார்.

இந்த செப்பேடுகளில் எந்தெந்தபாடல்கள் உள்ளன, இதுவரை அறியப்படாத புதிய தேவாரப் பதிகங்கள் ஏதேனும் பதிப்பிக்கப்பட்டுள்ளனவா என்பன குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இன்னும் சில நாட்கள் ஆய்வுப் பணிகள் நீடிக்கும் எனக்கூறப்படுகிறது. ஆய்வின்போது சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

33 mins ago

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்