தமிழி - உலகத் தரத்தில் ஓர் ஆவணப்படம்!

By ஆர்.சி.ஜெயந்தன்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பலரும் கடந்த 30 ஆண்டுகளாக ஆங்கில வழியில் பயின்று பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். பல நாடுகளில் குடியேறி வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர், தமிழின் எழுத்து வடிவத்தை எழுதத் தெரியாதவர்கள். ‘அம்மா’ என்கிற சொல்லை ‘Amma’ என ஆங்கில எழுத்துகள் கொண்டு தட்டச்சு செய்கிறவர்கள். இவ்வாறே ஆங்கில எழுத்துகளின் வழியாக தமிழைச் ‘உரையாடல்’ மொழியாகப் பயன்படுத்துகிறார்கள்.

இன்றைய தலைமுறையிடம் இப்படியேனும் தமிழ் வாழ்த்துகொண்டிருக்கிறதே எனக் கடந்து போகிறோம். ஆனால், வியத்தகு வகையில் ஏழு பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று தமிழ் மொழியின் எழுத்து வடிவத் தடத்தைத் தேடிக் கண்டறிய ஆவல் கொண்டு, ‘தமிழி’ எனும் கூர்மையான ஆவணப்படத்தை கடும் உழைப்பின் வழியே சாத்தியமாக்கி உலகத் தமிழ்ச் சமூகத்துக்கு அர்பணித்திருக்கிறார்கள். தமிழ் மொழி வரலாறு, ஆய்வு என்றால் அது 60 வயதைக் கடந்த பேராசிரியர்களும் மொழியியலாளர்களும் புழங்கும் தளம் எனத் தள்ளியிருக்காமல் முப்பது வயதைக் கடக்காத இவர்கள் சாதித்திருப்பது தமிழ் மொழியின் மீதான, தாய்மொழியின் மீதான நேசத்தையும் அதன் தொன்மையை அறிந்துகொள்வதில் உள்ள அவர்களது பேரார்வத்தையும் காட்டுகிறது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு, நம் பெற்றோர் எழுதி வந்த தமிழ் எழுதுக்கள், அதிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தின் தமிழ் எழுத்துகள், அதற்கும் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருநை ஆற்றுப் படுகை ஆகழாய்வு கூறும் காலத்தின் தமிழ் எழுத்துகள் என்று தமிழ் மொழியின் வரி வடிவம் கடந்து வந்துள்ள அதன் வேர்களைத் தேடிப்போனால் கிடைக்கும் உண்மைகள் வியப்பூட்டக்கூடியவை! இன்று நாம் பயன்படுத்தும் தனித்துவமும் காண அழகும் மிகுந்த தமிழ் எழுத்துகள், இவ்வாறு ஒரு நீண்ட நெடிய பண்பாட்டு வரலாற்றின் அடையாளமாக இருப்பதை ‘தமிழி’ ஆவணப் படத் தொடராக உருவாக்கியிருக்கும் இந்த இளைஞர்கள் குழுவில், அதற்கான ஆய்வு, திரை எழுத்து ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்று பணி புரிந்திருக்கிறார் ச. இளங்கோ. ஆவணப்படத்தை இயக்கியவர் பிரதீப் குமார். இவர்களுடன் மேலும் ஐந்து இளைஞர்கள் களமாடி ‘தமிழி’யை உருவாக்கி, புதிய தலைமுறையினருக்கு தமிழ் மொழியின் வரி வடிவ வரலாற்றைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

இவர்களது உழைப்பையும் இந்த ஆவணப்படத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, அதைத் தயாரித்திருப்பதுடன், அதற்கு தன் குரலையும் இசையையும் தந்திருக்கிறார். இதுவரை இரண்டு மில்லியன் பார்வையாளர்களைச் சென்று சேர்ந்திருக்கும் இந்த ஆவணப்படத் தொடர், இன்றைய தலைமுறையினர் பார்க்க வேண்டிய முக்கிய ஆய்வுப் படைப்பு. இந்த ஆவணப்படம் உருவான பின்னணி குறித்து ச. இளங்கோவிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

சுப்பராயலுவுடன் சந்திப்பு ( தமிழ் காமராசன், சுப்பராயலு, இளங்கோ)


தமிழ் எழுத்துகளின் தொன்மை, தோற்றம் உள்ளிட்டவை குறித்த 'தமிழி ஆவணப்படத் தொடர் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அத்தொடருக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது?

நாங்கள் நினைத்ததைவிட சிறப்பான வரவேற்பு இருக்கிறது. பல்வேறு அறிவுத்துறையினரும் தமிழித் தொடருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். பிற இந்திய மொழிகளில் இத்தொடரை மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தது உண்மையில் இத்தொடருக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். வெளிநாடுகளை சேர்ந்த சிலர், இத்தொடரின் எல்லா அத்தியாயங்களுக்கும் (Episodes) யூடியூபில் ‘ரிவ்யூ’ செய்திருந்தது மகிழ்ச்சியளித்தது. ரோஜா முத்தையா நூலகத்தின் இயக்குநர் சுந்தர், சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் இத்தொடரை முதலில் பார்த்து பாராட்டியதுடன் பல்வேறு அறிவுத்துறையினருக்கும் அறிமுகப்படுத்தினர். தமிழி தொடர் வெளியானபோது தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் தனது ‘மாபெரும் சபைதனில்’ என்கிற நூலில் இத்தொடருக்கு நல்லதொரு அறிமுகம் வழங்கிச் சிறப்பித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தமிழி ஆவணப்படத் தொடருக்கு அளித்த ஆதரவு தெம்பளித்தது. தொல்லியலாளர்கள் கா.ராஜன், அமர்நாத் ராமகிருஷ்ணன், ராஜவேலு உள்ளிட்டோரின் ஆதரவு மறக்க முடியாதது.

தமிழி தொடருக்கான ஆய்வு, எழுத்துப் பணியை ஏற்ற நீங்கள் தமிழ் உள்ளிட்ட எந்த ஆய்வுத்துறையையும் சாராதவர். இப்பணி எவ்வளவு கடினமானதாக இருந்தது?

நான் அடிப்படையில் ஓர் ஊடகவியலாளன். 2011 முதல் செய்தி ஊடகங்களில் பணி புரிந்து வந்தவன் என்பதால் பல்வேறு அறிவுத்துறைகளிலும் நிகழும் மோதல்களை சில நேரங்களில் ஆழ்ந்து அறியும் வாய்ப்புகள் கிடைத்தன. அவ்வாறான ஒரு வாய்ப்புதான் மார்க்சிய ஆய்வாளர் தேவபேரின்பன் எழுதிய ‘தமிழும் சமஸ்கிருதமும்’ என்கிற நூல். புது எழுத்து வெளியீடான அந்நூல், அப்போது நிகழ்ந்து வந்த திருக்குறளின் சமயம் தொடர்பான கருத்து மோதலில் தொல்லியலாளர் நாகசாமிக்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டது. அந்நூலில் தேவபேரின்பன் தமிழ் எழுத்துகளின் தொன்மைக் குறித்து எழுதி இருந்த பகுதி ஆர்வத்தைத் தூண்டியது. எங்கள் குழுவினர் தொடக்கத்தில் திருவள்ளுவரின் சமயம் தொடர்பான ஆவணப்படம் எடுக்கவே யோசித்திருந்தோம். தமிழறிஞர்கள் தரப்பிலிருந்து அதற்கு முறையான ஒத்துழைப்புக் கிடைக்காத சூழலில், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் கணிதவியல் பேராசிரியர் பாண்டியராஜனை நாங்கள் சந்தித்த போது, அவர் பழந்தமிழ் எழுத்துகள் எவ்வாறு வளர்ச்சியடைந்திருக்கும் என்பதை விளக்கி வரைந்துக் காட்டியது வியப்பாக இருந்தது.

தொல்லியலாளர் க.ராஜனுடன் தமிழி குழுவினர்

தொல்லியல் அறிஞர்கள், தமிழறிஞர்கள் என பலரும் தமிழ் எழுத்துகளின் தோற்றம் குறித்த விவாதத்தில் காலந்தோறும் ஈடுபட்டுவரும் நிலையில், இவ்விவாதத்தை வெகுஜனத் தளத்துக்குக் கொண்டு சென்று கவனத்தை உண்டாக்குவதும் எழுத்துலகில் நடைபெற்று வந்த விவாதத்தைக் காட்சி ஊடகத்துக்குக் கொண்டு செல்வதன் வழியாக இன்னும் பல தமிழ் இளைஞர்களை இது குறித்துச் சிந்திக்கச் செய்வதுமே எங்கள் குழுவின் நோக்கங்களாக இருந்தன. பேராசிரியர் பாண்டியராஜன் உடனான சந்திப்பில் ஊக்கம் பெற்று, தமிழ் எழுத்துகளின் பரிமாண வளர்ச்சி குறித்த ஆவணப்படத்தை உருவாக்கலாம் என்கிற யோசனையை பிரதீப் (தமிழி ஆவணப்படத் தொடரின் இயக்குநர்) முன்மொழிந்தார். அப்போது, தொடக்கத்தில் எனக்கு அது சாத்தியமற்றதாகவே தோன்றியது. ஆனால், பிரதீப், லோகேஷ், பாலாஜி, திலகேஷ், நரசிம்மன் என எங்களது குழுவினரின் பயன்கருதாத கடின உழைப்பால் இத்தொடரின் உருவாக்கம் சாத்தியமானது.

ஏற்கெனவே செய்யப்பட்ட நீண்ட நெடிய ஆய்வுகள் பதிப்பிக்கப்பட்டிருக்கலாம். அப்படி ஆய்வுத் தளத்தில் வெளிவந்த நூல்கள், வலுவான தரவுகளைத் தேடிப் பிடிப்பதில் உங்களுக்குச் சரியான வழிகாட்டுதல்கள் கிடைத்தனவா?

தமிழ் ஆய்வுகள் சார்ந்த தரவுகளில் கவனம் செலுத்திவந்த தமிழ் காமராசன், சுகவன முருகன், தீபிகா உள்ளிட்டத் தோழமைகள் இத்தொடருக்கான ஆய்வுப் பணிகளில் உதவினர். வாசிக்க வேண்டிய நூல்களை அறிமுகம் செய்ததோடு, நேர்காணல் செய்ய வேண்டிய ஆய்வாளர்களையும் அடையாளம் காட்டினர். ஆய்வாளர்களை அணுகி, அனுமதி பெற்று, நேர்காணல் செய்ய எனது ஊடகப் பணி உதவியாக இருந்தது. உண்மையைச் சொல்வதெனில், ஆய்வாளர்கள், பேராசிரியர்களின் வழிகாட்டுதல் இருந்ததால் இப்பணி நான் தொடக்கத்தில் ஊகித்ததுபோல் அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை. எங்கள் முன் இருந்த முக்கிய கடமை எதுவெனில், பகுத்தறிவு அடிப்படையில் வாதங்களைச் சரியாகத் தொகுப்பது மட்டுமே. இத்துறைகளில் பணிபுரியும் பல்வேறு அறிஞர்களும் பல்வேறுக் கோட்பாடுகளை முன்மொழியக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களின் கருத்துகளில் எதைக் கொள்வது, எதைத் தவிர்ப்பது என்பதில் தயக்கமோ, குழப்பமோ இல்லாமல் முடிவுகளை எடுத்தோம். இதில் (தமிழ்) உணர்ச்சி என்பதை முன்நிபந்தனையாகக் கொள்ளாமல் அறிவியலையும் பகுத்தறிவையும் முன்வைத்து ஆய்வுகளை அணுகி அவற்றைக் கோர்த்து எழுதி ஆவணப்படாக்கியதால் எல்லோரும் பாராட்டத்தக்க வகையில் நடுநிலையுடன் ‘தமிழி’ உருவாகி இருப்பதாகக் கருதுகிறேன்.

அகழாய்வுக் களங்களில் தமிழி படப்பிடிப்பு

தமிழியை எப்படி இவ்வளவு பிரமாண்டமாகத் தயாரிக்க முடிந்தது?

செய்தி ஊடகத்தில் பணிபுரிந்ததால் எனக்குக் காட்சிகளைவிட கருத்தே முக்கியமானதாகப்பட்டது. செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை, ஒரு செய்தியைச் சொல்ல ஒரு ஒளிப்படமோ, ஒரு பத்து நொடி காட்சித் துண்டோ கூடப் போதுமானது. ஆனால், திரைத்துறையில் பணியாற்றியவர் என்கிற முறையில், தொடக்கம் முதலே ஆவணப்படத்தின் தரத்தில் எவ்வித சமரசங்களும் இருக்கக் கூடாது என்பதில் இயக்குநர் பிரதீப் கவனமாக இருந்தார். அதுதான் ஆவணப்படத்தின் தரத்துக்கான அடிப்படைக் காரணம். ஆவணப்படத்தின் கருத்துச் சாரத்துக்கு நான் கொடுத்த முக்கியத்துவமும் அதன் வடிவத்துக்கு பிரதீப் அளித்த முக்கியத்துவமும் இணைந்தே இந்த ஆவணப்பட உருவாக்கம் நல்ல தரத்தில் அமையக் காரணமாக அமைந்தன எனக் கருதுகிறேன்.

என்னைத் தவிர இத்தொடரின் உருவாக்கத்தில் பங்களித்த அனைவருமே திரைத்துறை சார்ந்தோர். மிக மிக முக்கியமாக ஹிப்ஹாப் தமிழா ஆதியின் குரல், அவரது இசை ஆகியன தமிழியின் தரத்தை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் தமிழறிஞர்களும் பாராட்டும் வகையில் உயர்ந்ததோர் மட்டத்துக்குக் கொண்டுச் சென்றன. இறுதிக்கட்டப் பணிகளுக்கு நிதியுதவி செய்ததுடன் ஆவணப்படத்தொடரின் தயாரிப்பாளராக மாறி தனது யூடியூப் பக்கத்திலேயே எல்லோரும் காணக்கூடிய வகையில் இலவசமாக வெளியிட்டார். ஹிப்ஹாப் தமிழாவின் இந்தப் பங்களிப்பு இத்தொடரின் பரவலான வரவேற்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. தமிழ் ஹிப்ஹாப், சுயாதீன தமிழ்த் தனியிசை ஆகியவற்றின் வழியாக கோடிக்கணக்கான பார்வையாளர்களை உலகம் முழுவதும் பெற்றுள்ள ஆதியின் நட்சத்திரப் புகழும் மொழிகளின் மொழியான தமிழ் குறித்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் அறிந்துகொள்ளக் காட்டிய ஆர்வமும் தமிழியின் பரவலையும் வீச்சையும் சாத்தியமாக்கின.

பொருநை ஆவணப்பட படப்பிடிப்பு

உங்கள் குழுவினரின் அடுத்த ஆவணப்பட முயற்சி தொடங்கிவிட்டதா?

ஆதிச்சநல்லூர்- சிவகளை-கொற்கை எனப் பொருநை ஆற்றங்கரையில் நடைபெற்ற அகழாய்வைத் தொல்லியலாளர்கள் உடன் ஓராண்டு முழுமையாக பயணித்து ஆவணப்படமாக எடுத்திருக்கிறோம். இந்த ஆவணப்படத்துக்கும் ஹிப்ஹாப் தமிழா தான் தயாரிப்பாளர். தமிழியை விட இந்த ஆவணப்படம் பெரிய பொருட்செலவை கோருவதாக அமைந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் வெளியாகும். அதேபோல், கீழடியில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் மியூசியத்தில் உள்ள காட்சியரங்கில் தினமும் திரையிடுவதற்கான குறு ஆவணப்படத்தையும் எங்கள் குழு உருவாக்கி இருக்கிறது. இந்த ஆவணப் படத்தின் ‘டீசர்’ முன்னோட்டத்தை இந்து தமிழ் திசை நாளிதழ் தனது ‘தமிழ் திரு விருதுகள்’ நிகழ்வில் கடந்த ஆண்டு வெளியிட்டது.

ஆவணப்படத்தைக் கடந்து வேறு ஏதும் முயற்சிகள் நடைபெறுகின்றனவா?

பிரதீப், லோகேஷ், பாலாஜி, சரண், சந்தோஷ், நரசிம்மன் என எங்கள் குழுவினர் எல்லோரும் திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றனர். தமிழ் சார்ந்த நல்ல படைப்புகளை இவர்கள் கொண்டுவருவார்கள் என நம்புகிறேன். ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக நான் தற்போது பணியாற்றி வருகிறேன். தமிழன்டா இயக்கம் சார்பில் தமிழ் ஆய்வாளர் தமிழ் காமராசன் உடன் இணைந்து தமிழி எழுத்துகள் தொடர்பான ஆய்வுநூல் ஒன்றை எழுதி வருகிறேன். ஓராண்டில் முடிக்கும் திட்டத்துடன் தொடங்கப்பட்ட இந்நூலை 3 ஆண்டுகள் ஆகியும் முடிக்க இயலவில்லை. பழந்தமிழகத்தில் எழுத்து உருவாக்கம் தொடர்பாக எழுதத் தொடங்கிய எங்கள் பணி, தெற்காசியாவின் தொல்லெழுத்து உருவாக்கம் என விரிவுபடுத்திக் கொள்ளப்பட்டதால் தான் இந்தத் தாமதம். தொல்லியலாளர்கள் சுப்புராயலு, க.ராஜன் உள்ளிட்டோரைச் சந்தித்து நூல் உருவாக்கத்தின் போது எழுந்த சந்தேகங்கள் குறித்து உரையாடினோம். கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலத்திலும் தன்னை சந்திக்க அனுமதி வழங்கியதுடன் கிட்டத்தட்ட அரைநாள் தமிழி எழுத்துகள் குறித்து வகுப்பெடுத்த சுப்புராயலு அவர்களுக்கு இவ்விடத்தில் நன்றிக்கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். இறுதிக்கட்ட பணிகள் முடிந்து விரைவில் இந்நூல் வெளியாகும்.

ஆங்கிலேயக் காலனி ஆட்சி காலத்தில் பண்டைய தெற்காசிய எழுத்துகளில் ஏன் கவனம் செலுத்தப்பட்டது என்கிற கேள்வியுடன் தொடங்கி, பிராகிருத மொழியின் கண்டுபிடிப்பு, பிராமி எழுத்துகளின் கண்டுபிடிப்பு என பலவற்றையும் பிரிட்டிஷ் ஆய்வாளர்களின் எழுத்துகளின் வழியே ஆய்வு செய்திருக்கிறோம். இந்த நூலுக்கான ஆய்வுப்பணி வழியே, அறிஞர்களின் பாடுகளையும், என்னென்ன சான்றுகளின் அடிப்படையில் அறிஞர்கள் இம்முடிவுகளுக்கு வந்தனர் என்பதையும் பதிவு செய்ய முயன்றிருக்கிறோம். இதையொரு படிக்கல்லாக கொண்டு இளைஞர்கள் இத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு விடைதெரியா கேள்விகளுக்கு விடை கண்டறிந்தால் அதுவே இம்முயற்சிகளுக்கான பலனாக அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்