உணவுச் சுற்றுலா: ஜவ்வாது மலை கருநண்டு ரசம்

By டாக்டர் வி.விக்ரம்குமார்

கிழக்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்றது ஜவ்வாது மலை தொகுப்பு! எழில் சூழ்ந்த சவ்வாது மலையின் அழகை ரசிக்கும் நோக்கில், அங்குள்ள மலைக் கிராமம் ஒன்றுக்குச் சென்றோம். சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பாதிக்கப்படாத பகுதியாக அது இருந்தது.

மலையிலேயே பல்லாண்டு காலம் வாழும் மலைக் கிராமத்து மக்கள், புற்களால் வேய்ந்த கூரை கொண்ட மண் வீடுகள், சாணம் கொண்டு மெழுகிய மண் தரையில் சிதறிய அரிசிகளைக் கொத்திக் கொண்டிருந்த நாட்டுக்கோழிகள், மலைக் கிராமத்து விவசாயம், உயர்ந்திருந்த கடுக்காய் மரங்கள், உறையாத பனி மூட்டம் என இயற்கையின் அழகிய கூறுகள் ஜவ்வாது மலையெங்கும் நிரம்பிவழிந்தன. அந்த மாலை வேளையில், இயற்கையின் முழு வனப்பும் வெளிப்பட்ட அந்த மலைக் கிராமத்தை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தோம்.

மலை நண்டுகள்

அப்போது அங்கிருந்த சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க அன்பர், 'ஜவ்வாது மலையின் அருவிகளிலும் ஓடைகளிலும் இருக்கும் பாறை இடுக்குகளில் மலை நண்டுகள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு செய்யப்படும் குழம்பும் ரசமும் தனித்துவமானது' எனத் தெரிவித்தார். எங்களுக்கோ தனித்துவமான அந்த மலை நண்டுகளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் மேலோங்கியது. மாலை மங்கத் தொடங்கியிருந்த நேரம் என்பதால், 'நான் மட்டும் சென்று நண்டுகளைப் பிடித்து வருகிறேன்; நீங்கள் ஓய்வெடுங்கள்' எனச் சொல்லிவிட்டு, சடசடவென காட்டுக்குள் அவர் நுழைந்தார். அடுத்த சில மணி நேரங்களில் பாறை இடுக்கிலிருந்த நண்டுகள் பிடித்துவரப்பட்டன.

நீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் ஒன்றின் மீது ஒன்றாக அசைந்துகொண்டிருந்தன மலை நண்டுகள். கடல் நண்டுகளையும், வயல் நண்டுகளையும் ஏற்கனவே பார்த்த அனுபவம் இருப்பதால், இந்த மலை நண்டுகள் வித்தியாசமாகக் காட்சியளித்தன. கருமையான நிறம், அசையும் அதன் நீண்ட கரங்கள், ஓட்டுக்குள் இருந்து அவ்வப்போது எட்டிப்பார்க்கும் அதன் கருமையான கண்கள், கூடுதல் சுறுசுறுப்பு என அழகாகக் காட்சி அளித்தன அவை!

மருத்துவ நண்டுகள்

"சுவையிலும் மருத்துவ குணத்திலும் மற்ற நண்டு வகைகளை விட இந்த மலை நண்டுகள் மேன்மையானவை. சளி, இருமல் துன்பப்படுத்தினால் எங்களின் முதல் மருந்து நண்டு ரசம்தான். மழை, குளிர்காலங்களில் அடிக்கடி நண்டுக் குழம்பையோ நண்டு இரசத்தையோ உணவாக எடுத்துக்கொள்வோம்" என்று நண்டுகளைப் பிடித்து வந்தவர் தெரிவித்தார். 'கடல் நண்டுகளை விட மலை நண்டுகளுக்குச் சற்று வெப்பத் தன்மை குறைவு தான்' எனும் அனுபவக் குறிப்பையும் வழங்கினார். பொதுவாக நண்டுகளுக்கு வெப்பமுண்டாக்கி செய்கை இருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு கோழையை வெளியேற்றும் செய்கையும் நண்டுக்கு உண்டு.

நண்டு பிடிக்கும் கலை

"மலை நண்டுகளைப் பிடிக்கும் நுணுக்கம் மிகவும் முக்கியமானது. கொஞ்சம் தவறினாலும் தனது கொடுக்கினால் கைகளைப் பதம் பார்த்துவிடும். பல முறை இறுக்கிப்பிடித்து எனது விரல்களிலிருந்து இரத்தம் வடிந்திருக்கிறது" என நண்டுகளைப் பிடித்து வந்த அன்பர் நண்டுபிடி குறிப்புகளை வழங்கினார்.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நண்டுகளை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று அவரிடம் நுணுக்கத்தைக் கேட்டு அறிந்துகொண்டேன். நண்டின் பக்கவாட்டில் லாவகமாகக் கட்டை விரலையும் ஆட்காட்டி விரல்களையும் வைத்து இறுக்கிப் பிடித்தேன். அசையாமல் எனது விரல்களுக்கு நடுவிலிருந்தது நண்டு! அவ்வப்போது ஓட்டுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தன நண்டின் கண்கள்!

மலை நண்டு ரசம்

நண்டுகளைச் சமைக்கத் தயாரானார் மலைக் கிராமத்து முதியவர். உடலின் மையப் பகுதிகளைத் தனியாக எடுத்து நண்டுக் குழம்புக்காகவும், இதர பாகங்கள் நண்டு ரசத்திற்காகவும் எனப் பிரித்துக்கொண்டார். பெரிய பாத்திரத்தில் நண்டுகளைப் போட்டு நன்றாக இடிக்கத் தொடங்கினார். அந்தக் கலவையோடு தண்ணீர் சேர்க்கப்பட்டது. தண்ணீர் சேர்க்கப்பட்ட நண்டுக் கலவை விறகடுப்பின் தீயில் கொதிக்கத் தொடங்கியது.

பின்னர் அம்மியில் அரைத்த இஞ்சிப் பூண்டு விழுது, சின்ன வெங்காயம், மிளகுத் தூள், மஞ்சள், மிளகாய்க் கலவை ஆகியவற்றைக் கொதிக்கும் கலனில் கலந்து கூடுதல் நேரம் கொதிக்க வைத்து நன்றாகக் கலக்கினார். சிறிது நேரத்திலேயே பாத்திரத்திலிருந்து வாசனைமிக்க ஆவி மேல் எழும்பி மதி மயக்கியது. நண்டுச் சாறோடு அஞ்சறைப் பெட்டி பொருட்களும் சேர்ந்துகொள்ள அற்புதமான வாசனை அங்கே பரவியது! கிராமத்து வயல்களிலும் கிணறுகளிலும் பிடித்த நண்டுகளை உரலில் இடித்து நண்டு ரசம் தயாரிக்கும் கிராமத்து நினைவுகள் எட்டிப்பார்த்தன!

குளிருக்கு இதமளித்த ரசம்

இரவு சுமார் எட்டு மணி அளவில் சவ்வாது மலைக் கிராமத்தின் வெட்ட வெளியில் அமர்ந்திருந்தோம். உச்சியிலிருந்து நிலா எங்களை நோட்டமிட்டுக்கொண்டே இருந்தது. நல்ல குளிரும் கூட! எங்களுக்கு முன்னே கட்டைகளின் உதவியுடன் தீ மூட்டப்பட்டிருந்தது. சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எங்கள் வேட்கையை நிவர்த்தி செய்தது நண்டு ரசம்! பனிமூட்டப் புகைக்கு ஈடு கொடுத்தது நண்டு ரசத்திலிருந்து வெளியான மெல்லிய ஆவி!

இனிப்பும் காரமும் கலந்த புதுமையான சுவை! எச்சில் சுரப்புகளைத் தூண்டும் விதமான வாசனை! பருகப் பருக நண்டு ரசத்தின் மருத்துவ குணத்தை உள்வாங்க முடிந்தது. கூடுதலாக இன்னொரு கப் நண்டு ரசத்தைக் கேட்டுப் பருகினோம்.

புதுமையான உணவு அனுபவம்

அதிமதுரம் சேர்த்துச் செய்யப்படும் நண்டு ரசத்தைப் பற்றி சித்த மருத்துவக் குறிப்பு இருக்கிறது. ஆனால், அதிமதுரம் சேர்க்காமலே மலை நண்டு ரசத்தில் இனிப்புச் சுவை இழையோடி இருந்தது. அந்த இனிப்புச் சுவை, சவ்வாது மலை நண்டுகளின் சிறப்பு என நான் புரிந்துகொண்டேன். இனிப்புச் சுவை இருப்பதால்தான் என்னவோ, மற்ற நண்டு வகைகளை விட, இவ்வகை நண்டுகளுக்கு வெப்பம் சற்று குறைவு என்று அவர் கூறிய விஷயம் பொருந்திப்போனது! சித்த மருத்துவ சுவைத் தத்துவம் நினைவில் வந்து சென்றது.

மலைப் பகுதி குளிருக்குத் தேவையான வெப்பத்தை நண்டு ரசம் நிச்சயம் கொடுக்கும். கபம் சார்ந்த பிரச்சனை உடையவர்களின் முதல் தேர்வாக இந்த மலை நண்டு ரசம் இருக்கட்டும். நீண்ட நாட்கள் சளி, இருமல் தொந்தரவால் அவதிப்படுபவர்கள், உணவாகும் மருந்தான இந்த மலை நண்டு ரசத்தைத் தாராளமாக முயன்று பார்க்கலாம்.

நண்டு ரசம் பருகிய அடுத்த அரை மணி நேரத்தில் நண்டுக் குழம்பும் சுடு சாதமும் எங்களுக்காகப் பரிமாறப்பட்டது. ஜவ்வாது மலையின் கரு நண்டுகள் புதுமையான உணவு அனுபவத்தை வழங்கின!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

42 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

50 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

56 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்