புது டெல்லி: கடந்த 1985-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட உணவின் ரசீதை உணவகம் ஒன்று பகிர்ந்துள்ளது. அது இப்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. காரணம் அதில் இடம்பெற்றுள்ள விலை. இத்தனைக்கும் சமூக வலைதளத்தில் இந்த போஸ்ட் பகிர்ந்து 9 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இப்போது அது வைரல் ஆகியுள்ளது.
‘அந்தக் காலத்தில் இதோட விலை வெறும் இவ்வளவுதான்’ என வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். சிலர் அதை கடந்து வந்தவர்களாவும் இருக்கலாம். இப்போது உணவகத்திலோ அல்லது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தாலோ ஒரு குடும்பம் சில நூறுகள் தொடங்கி ஆயிரம் ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி இல்லை. அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது இந்தப் பதிவு.
டிசம்பர் 20, 1985 தேதி குறிப்பிடப்பட்டுள்ள ரசீதை டெல்லியில் இயங்கிவரும் லசீஸ் உணவகம் பகிர்ந்துள்ளது. வாடிக்கையாளர் ஒரு பிளேட் ஷாஹி பன்னீர், டால் மக்கானி, ரைத்தா மற்றும் 9 பீஸ் ரொட்டி ஆர்டர் செய்துள்ளார். அதன் மொத்த விலை ரூ.26 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் இப்போது வைரலாகி உள்ளது. இன்றைய விலையுடன் இதனை ஒப்பிட்டால் அதைக் கொண்டு ஒரு பாக்கெட் சிப்ஸ்தான் வாங்க முடியும் என நெட்டிசன்கள் பல்வேறு வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.