மதுரை: ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்பில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சிறந்து விளங்கத் தொடங்கியுள்ள நிலையில், தனது காளையைக் களமிறக்கத் தயாராகி வருகிறார் மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த வவிஷ்ணா. ஜல்லிக்கட்டுப் போட்டியென்பது ஆண்களால் ஆண்களுக்காகவே நடத்தப்படும் விளையாட்டு என்ற நிலை முன்பு இருந்தது. இப்போட்டியை நடத்த தடை விதிக்கப்பட்டபோது அதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் களமிறங்கினர்.
அதைத் தொடர்ந்து தற்போது பெண்கள் பலரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தங்களின் பங்களிப்பை தரத் தொடங்கி விட்டனர். ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து, பயிற்சி அளித்து வாடிவாசலில் களமிறக்குவதில் பெண்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாடிவாசலில் காளையை அவிழ்த்துவிடும்போது, அந்தக் காளை அதுவரை பிடிபடாத காளையாக இருந்தால் அதன் பெருமைகளைச் சொல்வதுடன், உரிமையாளரின் பெயரையும் வர்ணனையாளர்கள் அறிவிப்பார்கள்.
இதுவரை பெரும்பாலும் உரிமையாளரின் பெயர் ஆண்களாகத்தான் இருந்து வந்தது. அண்மைக்காலமாக காளைகளின் உரிமை யாளர்களின் பெயரில் பெண்களும் இடம் பெறத் தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில் விரைவில் இடம்பெற உள்ளார் மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த வவிஷ்ணா. இவர் வளர்க்கும் காளைக்கு ‘ராமு பையா’ என்று பெயர்.
இந்தக் காளையை கடந்த 10 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இக்காளையை களமிறக்கி வருகின்றனர். இதுவரை எந்தவொரு போட்டியிலும் வீரர்களால் இந்தக் காளையை அடக்க முடியவில்லை.
2020-ம் ஆண்டு தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால் மதுரை திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் படித்து வந்த வவிஷ்ணாவால் பிளஸ் 2-வுக்குப் பிறகு படிக்க முடியவில்லை. குடும்பத்தின் பொருளாதார நிலைமையைக் கருதி வீட்டிலிருந்தபடியே தையல் தொழில் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்.
அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது தந்தை ஆசையாக வளர்த்த ஜல்லிக்கட்டுக் காளையையும் பராமரித்து வருகிறார். அந்தக் காளைக்கு பசி, வலி, வேதனை, பயம், கோபம், தேவை இவற்றையெல்லாம் குறிப்பால் உணர்ந்து அதைக் குழந்தைபோல் வளர்த்து வருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர் ஜல்லிக்கட்டுக் காளையை வளர்க்கும் நோக்கம் சுவாரசியமானது.
இது தொடர்பாக வவிஷ்ணா கூறியதாவது: அப்பாவுக்கு ஜல்லிக்கட்டுக் காளையை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். எனக்கு இணையாக இந்தக் காளையையும் பாசமாக வளர்த்தார். அவர் காலமானதையடுத்து அவர் வளர்த்த காளையை நான் பராமரித்து வருகிறேன். காளையை நான் வளர்த்து வந்தாலும் இதுவரை போட்டி நடைபெறும் இடத்தில் வாடிவாசலில் எனது சித்தப்பா தான் அதை அவிழ்த்து விட்டு வருகிறார்.
நான் சிறுமியாக இருந்தபோதிலிருந்தே எங்கள் வீட்டில் ஜல்லிக்கட்டுக் காளையை வளர்ப்பதால் அதைப் பார்த்து எனக்குப் பயமில்லை. காளைக்குத் தண்ணீர் வைப்பது, தீவனம் வைப்பது, மேயவிட்டு அழைத்து வருவது ஆகிய அனைத்துப் பணிகளையும் நான் செய்ததால் இக்காளை எனது சொல்படி கேட்கும். என்னையும், சித்தப்பாவையும் தவிர்த்து வேறு யாரையும் ‘ராமு பையா’ அருகில் நெருங்கவிடாது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இதுவரை யாரிடமும் பிடிபடாத எனது காளை வாஷிங் மெஷின், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பட்டுச் சேலைகள் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளது. இந்த முறை நானே நேரில் சென்று வாடிவாசலில், ‘ராமு பையா’-வை களமிறக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.