சென்னையில் ஆதரவற்றவர்களை காக்கும் கரங்களான ‘காவல் கரங்கள்’ 

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னையில் குற்ற செயல்களை தடுக்க காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கருணை அடிப்படையில் ‘உயிர் காக்கும்’ பணியிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ‘மனிதம் போற்றுவோம், மனித நேயம் காப்போம்’ என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்து சென்னையில் ‘காவல் கரங்கள்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், உடல் நலிந்தவர்கள் என பாதிப்புக்கு உள்ளான பல தரப்பினரையும் மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கின்றனர். மேலும், அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைப்பது வரை அனைத்து பணிகளையும் இந்த காவல்துறையின் ‘காவல் கரங்கள்’ தற்போதுவரை செய்து வருகிறது.

அதோடு நின்றுவிடாமல், உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களுக்கு தன்னார்வலர்கள் உதவியுடன் இறுதி சடங்குகளையும் செய்து கண்ணியத்துடன் அடக்கம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் 2,736 ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது ‘காவல் கரங்கள்’ அமைப்பு. காவல் துறையின் இந்த அமைப்புடன் 24 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 120 தன்னார்வலர்கள், 60 மாநகராட்சி இல்லம், 24 தனியார் இல்லம், சமூக நலத்துறை, 108 ஆம்புலன்ஸ் ஆகியோர் கைகோத்து ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.

அதன்படி, மன நலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரிபவர்கள், உடல் நலிவுற்று பரிதாபமான நிலையில் உள்ளோர், முதுமையால் சாலையோரம் தவிப்பவர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்து திக்கு தெரியாமல் தவிப்பவர்கள் என இதுவரை காவல் கரங்கள் அமைப்பு மூலம் 5,417 ஆதரவற்றோர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 4 ஆயிரம் பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 791 பேர் அவர்களின் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, உ.பி, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

காவல் ஆய்வாளர் மேரி ராஜூ மற்றும் 8 போலீஸார் மற்றும் 150 தன்னார்வலர்களை கொண்டு செயல்பட்டு வரும் இந்த ‘காவல் கரங்கள்’ அமைப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. சென்னையில் சிறப்பாக செயல்படும் இந்த அமைப்பை தமிழகம் முழுவதும் விரிவாக்கும் பணியை டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி உள்ளார். இந்த அமைப்பு, முதல்வரின் நல்லாளுமை விருது, ஸ்காட்ச் தங்க விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காவல் ஆய்வாளர்
மேரி ராஜு.

இதுகுறித்து, காவல் கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காவல் ஆய்வாளர் மேரி ராஜூ கூறும்போது, ‘ஆதரவற்றவர்களை மீட்பதோடு எங்கள் பணி முடிந்து விடுவது இல்லை. அவர்களை குணமாக்கி, குடும்பத்தினரை கண்டறிந்து, அவர்களிடம் ஒப்படைத்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எதையும் எதிர்பார்த்து செய்வது இல்லை. இந்த பணி மனநிறைவு தருகிறது’ என்றார். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்களே... காவல் கரங்கள் அமைப்பை பொது மக்கள் தொடர்பு கொள்ள 94447 17100 என்ற எண்ணில் அழைக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்