விடைபெறும் 2017: பிரகாசித்த நட்சத்திரங்கள்!

By செய்திப்பிரிவு

வ்வோர் ஆண்டும் சாதனை படைத்த, வெற்றியாளர்களாக வலம்வந்த இளைஞர்கள், யுவதிகளுக்குப் பஞ்சமில்லை. இந்த ஆண்டு கவனம் பெற்ற சிலர்.

வாஷிங்டன் சுந்தர்

இந்திய கிரிக்கெட் அணியில் பெரிய பின்னணியோடு அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆண்டு எளிய பின்னணி கொண்ட வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் இவர். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இறுதியாட்டத்தில் விளையாடிய மிகக் குறைந்த வயது வீரர் என்றா பெருமையைப் பெற்றவர். அவர் விளையாடி புனே அணியில் மகேந்திர சிங் தோனி, ஸ்டீவன் ஸ்மித், பென்ஸ்டோக், அஜிங்கிய ரஹானே போன்ற நட்சத்திர வீரர்களைத் தாண்டி சிறப்பான செயல்பட்டால் கவனம் காட்டி ஈர்த்தார். டி20 போட்டிகளில் சிக்கனமாகப் பந்துவீசி விக்கெட் வீழ்த்துவதில் தேர்ந்தவராகிவருகிறார். எதிர்காலத்தில் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கலாம்.

தூயன்

சிறுகதைகள் வாயிலாக இந்த ஆண்டில் பேசப்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஒருவர் தூயன். 1986-ல் பிறந்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘இருமுனை’ யாவரும் பதிப்பகம் வெளியீடாக சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஓர் இளம் எழுத்தாளரின் முதல் தொகுப்பு போல இல்லாமல் முதிர்ச்சியான நடையுடனும் கதைக்களன்களுடனும் இருப்பது சிறப்பு. யதார்த்தத்தையும் தீவிரப் புனைவு சாகசத்தையும் கலந்து எழுதிக்கொண்டிருக்கும் தூயன் வருங்காலத்தில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இலக்கிய விமர்சனங்களிலும் தீவிரமாக ஈடுபடும் தூயன், கோவையைச் சேர்ந்தவர்.

கரண் ராஜன்

ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்தியாவின் பாட்மிண்டன் முகங்களாக உள்ளவர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த கரண் ராஜனும் இந்த ஆண்டு சர்வதேச அளவில் சாதித்து இந்திய பாட்மிண்டன் அரங்கில் ஒளிரும் நாயகனாக மிளிர்கிறார். இந்த ஆண்டு ஜூலையில் மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நடந்த ஃபியூச்சர் சீரியஸ் போட்டியில் பட்டம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், சர்வதேசத் தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் பட்டம் வெல்வது இதுதான் முதல்முறை. இந்த ஆண்டு 40 சர்வதேச தனி நபர் பாட்மிண்டன் போட்டிகளில் விளையாடி, 29 போட்டிகளில் வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார். தரவரிசையில் தற்போது 107-வது இடத்தில் இருக்கும் கரண் ராஜன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகிவருகிறார்.

எழிலரசி

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்த ஆண்டு கவனம் பெற்ற வீராங்கனைகளில் ஒருவர் எழிலரசி. சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த இவர், மாற்றுத்திறனாளி. தமிழக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் பிரிவில் இந்த ஆண்டு தங்கம் வென்றார். இதன்மூலம் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழக மாற்றுத்திறனாளி வீராங்கனை என்ற பெருமையையும் இவர் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டு, வெறும் மூன்று மாத பயிற்சியில் இவர் நிகழ்த்திய சாதனை, அபாரமானது.

முகமது ரிஃபாக் ஷாரூக்

பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை இந்த ஆண்டு நிரூபித்தவர் முகமது ரிஃபாக் ஷாரூக். இந்த ஆண்டு ஊடகங்களில் அதிகக் கவனம் பெற்றவர்களில் இவரும் ஒருவர். 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் தயாரித்த ‘கலாம் சாட்’ என்ற குட்டி செயற்கைக்கோளின் எடை வெறும் 64 கிராம்தான். இந்த கையடக்கச் செயற்கைக்கோள் நாசாவின் எஸ்.ஆர். ராக்கெட்டில் ஜூன் மாதம் விண்வெளிக்குப் பயணித்தது. இதை வெற்றிக்கரமாக உருவாக்கிய முகமது ரிஃபாக் ஷாரூக் இந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 62.5 சதவீதம்தான். தற்போது விண்வெளியில் வேளாண்மை குறித்து ஆய்வை மேற்கொண்டு வருகிறார் இந்த வளரும் விஞ்ஞானி.

சவுமியா

இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான மாணவ- மாணவிகள் மேற்படிப்புக்கு வருகிறார்கள். தகுதியால் அல்ல என்ற சொல்லப்பட்டுவரும் வாதத்தைத் தகர்த்தெறிந்த மாணவியானார் சவுமியா. பழங்குடி இனத்தைச் சேர்ந்த சவுமியா, பிளஸ் டூ பொதுத் தேர்வில் 1200-க்கு 1187 மதிப்பெண்களைப் பெற்றார். அதோடு நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். மருத்துவம் படிக்க வாய்ப்பிருந்தது. ஆனால், கால்நடை மருத்துவத் தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றதால், கால்நடை மருத்துவக் கல்லூரிக்கே சென்றார். நீட் தேர்வுக்கெனத் தனியாகப் பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் கடைசி நேரத்தில் மட்டுமே தேர்வுக்குத் தயாரகி இவர் தேர்ச்சி பெற்றது பலருக்கும் முன்னுதாரமானது.

காஞ்சன மாலா

பாரா விளையாட்டுப் போட்டிகளில் இப்போதுதான் இந்திய வீரர், வீராங்கனைகள் உலக அளவில் கவனம் பெறத் தொடங்கியுள்ளனர். அப்படி இந்த ஆண்டு கவனம் பெற்ற வீராங்கனை காஞ்சன மாலா. பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்பில் காஞ்சன மாலா இந்தியாவுக்கு முதன்முறையாகத் தங்கப் பதக்கம் பெற்றுக்கொடுத்திருக்கிறார். அண்மையில் மெக்சிகோவில் உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தச் சாதனையைப் படைத்த காஞ்சன மாலா, இந்த ஆண்டு ஜூலையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற பாரா நீச்சல் சாம்பியஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் பெற்று கவனம் ஈர்த்தார்.

ஜிக்னேஷ் மேவானி

இந்த ஆண்டு அரசியலில் கவனம் ஈர்த்த இளைஞர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஜிக்னேஷ் மேவானி. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வட்கம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவோடு சுயேச்சையாகப் போட்டியிட்ட இவர், பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தினார். தலித்களுக்காகக் குரல் கொடுத்து அவர்களுடைய தளபதி ஆகியிருக்கிறார் இந்த 35 வயது இளைஞர்.

கடந்த ஆண்டு குஜராத்தில் உனா நகரில் பசு மாட்டுத் தோலை உரித்ததற்காக 4 தலித்துகள் பசுப் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட காணொளி வைரலாகப் பரவியபோது அந்தப் பிரச்சினைக்கு எதிராகப் போராட தொடங்கியதிலிருந்து குஜராத்தில் இவரது அரசியல் தொடங்கியது. தலித் மக்களுக்காகத் தொடர்ந்து நடத்திவரும் போராட்டம், தேர்தல் வெற்றி போன்றவை குஜராத்தைத் தாண்டி நாடு முழுவதும் ஜிக்னேஷைப் பிரபலமாக்கியுள்ளது.

ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் வீரர்களில் திடீரென விஸ்வரூபம் எடுக்கும் வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இந்த ஆண்டு மட்டும் இரண்டு சாதனைகளை இவர் படைத்திருக்கிறார். ஒரு நாள் போட்டியில் ஏற்கெனவே இரண்டு முறை இரட்டைச் சதம் அடித்து உச்சத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, மொகாலியில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 208 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் 3 முறை இரட்டைச் சதம் அடித்து முத்திரைப் பதித்த வீரரானார்.

கிரிக்கெட்டில் இந்தச் சாதனையைப் படைப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. இதேபோல மும்பையில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசினார் ரோஹித். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் வங்கதேசதுக்கு எதிரானப் போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையை ரோஹித் சர்மா தற்போது சமன் செய்திருக்கிறார்.

ராகுல் யாதவ்

தொழில்முனைவோராக வேண்டும் என நினைக்கும் இந்திய இளைஞர்களுக்கு ரோல் மாடல் ராகுல் யாதவ். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பிரபலமானவர்களின் பட்டியலில் உள்ளார். ஆன்லைன் மூலம் வீடு / சொத்துகளை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங் டாட். காம் நிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி இவர். நிலங்களை மேம்படுத்துவது, வணிக மதிப்பு கொண்ட சொத்துகளை வாங்கி விற்பது, சர்வதேச விரிவாக்கம் செய்வது எனப் பல நிறுவனங்களை நடத்திவருகிறார். ‘இந்திய ஸ்டார்ட் அப்புகளின் கெட்ட பையன்’ என்று இவரது பிம்பம் சர்ச்சைகளால் கட்டமைக்கப்பட்டாலும், இவருக்கான பாப்புலாரிட்டி குறையவில்லை.

தொகுப்பு: டி. கார்த்திக், ஷங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்