இந்தியா

அதிமுக - பாஜக கூட்டணி சலசலப்பு முதல் அமித் ஷா யோசனை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 18, 2023

செய்திப்பிரிவு

பி.எம்.மித்ரா திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்த கோரிக்கை: பி.எம். மித்ரா என்னும் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினை தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும் எனக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி: அண்ணாமலையால் சலசலப்பு: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று பேசியதாக கூறப்படுகிறது. இது இரு கட்சி தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், "நல்ல, திரைக்கதை, வசனத்தை நான் படித்தேன். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நடைபெற்ற ஒரு விஷயத்தை வேண்டும் என்று இட்டு கட்டி எழுவது தவறானது. இது எங்களின் உட்கட்சி விவகாரம். நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக் கொள்வதை பொது வெளியில் பேசுவதும், குறிப்பாக இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரிப்பதை நான் கண்டிக்கிறேன். இதற்கு கருத்து சொல்வதே தவறுதான். கட்சி கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்படும். தேர்தல் காலத்தில் தான் கூட்டணி. இப்போது தேர்தல் இல்லை. தேர்தல் குறித்து பேச இது நேரமும் இல்லை" என அவர் கூறினார்.

அதேவேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக தான் தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை ஏற்கும். முடிவு செய்யும். யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட்டு என்பதை முடிவு செய்யும் கட்சி அதிமுகதான்" என்று கூறினார்.

அண்ணாமலை பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதில்: தேர்தல் கூட்டணி பற்றி அண்ணாமலை பேசியது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், "தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழகத்தில் இதுவரை யாரும் தனித்துப் போட்டியிட்டது இல்லை. கூட்டணி வைத்துதான் போட்டியிட்டு உள்ளனர். தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவிக்க முடியாது. கருத்து கூற, கேள்வி கேட்க, பதில் கூற அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது" என்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: இபிஎஸ் வேட்புமனு தாக்கல்: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 21ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்தநிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை விசாரிக்கிறது.

‘பிக் பாக்கெட் அடிப்பது போல பதவியை பெற முயற்சி’ : பிக் பாக்கெட் அடிப்பது போல அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பெற முயற்சி நடப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்தித்த அவர், "5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெறும். தேர்தல் நடத்துவதற்கு முன்பாக உறுப்பினர் படிவம் அளிக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். இதை எல்லாம் முடித்த பிறகுதான் அதிமுகவின் உட்சபட்ச பதவிக்கு தேர்தல் நடைபெற வேண்டும். இவை எதுவும் செய்யாமல் பிக் பாக்கெட் அடிப்பது போன்று பதவியை பெற முயற்சிக்கிறார்கள். எதுவுமே முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது” என்று கூறினார்.

புழல் உள்ளிட்ட 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு: 'ஏரிக்கரை மேம்பாடு' என்ற பெயரில் புதிய திட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் உள்ள 10 ஏரிகளை மேம்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

இதன்படி பெரும்பாக்கம் ஏரி, ரெட்டேரி, முடிச்சூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, கொளத்துார் ஏரி, புழல் ஏரி ஆகிய 10 ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

இந்த ஏரிகள் புரனமைக்கப்பட்டு ஏரியைச் சுற்றி நடைபாதை, சைக்கிள் பாதை, வாடகை சைக்கிள் நிலையம், திறந்த வெளி உடற்பயிற்சி அரங்கம், தோட்டம், வாகன நிறுத்துமிடம், சிறுவர் விளையாட்டு திடல், திறந்த வெளி தியேட்டர், திறந்த வெளி அரங்கம், நீர் விளையாட்டுகள், மீன் பிடிக்கும் இடம், பறவைகள் பார்க்கும் இடம், மியாவாக்கி காடுகள், படகு சவாரி உள்ளிட்டவை அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: இந்தியாவில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை சனிக்கிழமை புதிய உச்சமாக ரூ.44 ஆயிரத்தை எட்டியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ரூ.44,480-க்கு விற்பனையானது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி பட்ஜெட் எதிரொலியாக ஒரு சவரன் ரூ.44,040-க்கு விற்பனையான உச்சமாக இருந்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 843 பேருக்கு கரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 843 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 126 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்: அமித் ஷா: எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் தற்போது நாடாளுமன்றத்தில் நிலவிவரும் முடக்கத்திற்கு தீர்வு ஏற்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் அவர், இரண்டு தரப்பும் நாடாளுமன்ற சபாநாயகர் முன்பு அமர்ந்து விவாதிக்கட்டும். அவர்கள் இரண்டு அடி முன் வந்தால் நாங்களும் இரண்டு அடி முன்னேறிச் செல்வோம். அதன்பிறகு நாடாளுமன்றம் இயங்கத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன்: பிரச்சாரத்தின் போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு, பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான 9 வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT