எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் நாடாளுமன்ற முடக்கம் தீர்க்கப்படும்: அமித் ஷா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் தற்போது நாடாளுமன்றத்தில் நிலவிவரும் முடக்கத்திற்கு தீர்வு ஏற்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஊடக நிறுவன நிகழ்வில் கலந்துகொண்டார். அதில் பேசிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது, "அரசியலுக்கு அப்பாற்பட்டு சில பிரச்சினைகள் உள்ளன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூட, அந்நிய மண்ணில் உள்நாட்டு பிரச்சினைகளை விவாதிக்க மறுத்திருக்கிறார்.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: இரண்டு தரப்பும் நாடாளுமன்ற சபாநாயகர் முன்பு அமர்ந்து விவாதிக்கட்டும். அவர்கள் இரண்டு அடி முன் வந்தால் நாங்களும் இரண்டு அடி முன்னேறிச் செல்வோம். அதன்பிறகு நாடாளுமன்றம் இயங்கத் தொடங்கும். ஆனால், நீங்கள் வெறும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. இது அப்படிப்பட்டது இல்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளால் மட்டுமே நாடாளுமன்ற நடைமுறைகள் இயங்க முடியாது. இரண்டு தரப்பும் ஒருவொருவருக்கொருவர் பேச வேண்டும்.

நாங்கள் முயற்சி எடுத்தும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து எந்தவிதமான முன்னெடுப்பும் வரவில்லை. அப்புறம் நாங்கள் யாரிடம் பேசுவது? அவர்கள் ஊடகங்களிடம் பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று முழக்கம் இடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் முழுமையான பேச்சு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் பேசுவதை யாரும் தடுக்கவில்லை.

விதிகளின் அடிப்படையில் தான் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஒருவர் சாலையில் பேசுவது போல நாடாளுமன்றத்தில் பேச முடியாது. இந்த அடிப்படையான புரிதல் அவர்களிடம் இல்லையென்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

இந்த விதிகள் எல்லாம் அவர்களுடைய பாட்டி, தந்தை காலத்தில் இருந்தே இருக்கின்றன. அவர்கள் இந்த விதிகளின்படியே விவாதத்தில் கலந்துகொண்டனர். நாங்களும் விதிகளின் படியே விவாதத்தில் கலந்துகொண்டோம்.

அவர்களுக்கு விதிகளைப் பற்றி எந்த எண்ணங்களும் இல்லை. பின்னர் பேச அனுமதிக்கவில்லை என்று மற்றவர்களைக் குறை கூறுகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவர் நினைத்தபோது எழுந்து நின்று பேச முடியாது. அவையில் பேசுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. நீங்கள் அதனை பின்பற்றியாக வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்திரா காந்தி பேசவில்லை: இந்தியாவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருந்த போது, இந்திராகாந்தி இங்கிலாந்துக்கு சென்றிருந்தார். ஷா கமிஷன் அமைக்கப்பட்டு அவரை சிறையில் அடைக்க முயற்சிகள் நடந்த சமயம் அது. அப்போது இங்கிலாந்து பத்திரிக்கையாளர்கள் சிலர் இந்திரா காந்தியிடம் உங்கள் நாடு எப்படி இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், "எங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை நான் இங்கே கூற விரும்பவில்லை. என்னுடைய நாடு நன்றாக இருக்கிறது. நான் என்னுடைய நாட்டைப் பற்றி எதுவும் கூறமாட்டேன். நான் ஒரு இந்தியராக இங்கே வந்திருக்கிறேன்" என்றார்.

அதேபோல, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஐநா அவையில் காஷ்மீர் பிரச்சினை குறித்து ஒரு விவாதம் நடந்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இந்தியாவின் சார்பிலான குழுவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் தலைமை தாங்கியது அதுதான் முதல் மற்றும் கடைசி முறை. அவர் வாஜ்பாய். ஏனென்றால் அது காஷ்மீர் பிரச்சினை குறித்த விவாதம். இதுதான் நம்பிக்கை. அரசியலைக் கடந்து இங்கே சில விஷயங்கள் இருக்கின்றன. நாம் அனைவரும் அந்த பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

நீதிமன்றங்களே உயர்ந்தவை: கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் பெரிய பதவியிலுள்ள பெண் ஒருவர், ஊழல் ஏதும் நடந்திருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியது தானே என்று எங்களிடம் கேள்வி கேட்டிருந்தார். ஆனால், இப்போது அவர்கள் கூச்சலிட்டு கதறுகிறார்கள்.

நீதிமன்றத்தை விட விசாரணை அமைப்புகள் பெரியவை அல்ல. எல்லா நோட்டீஸ்கள், எஃப்ஐஆர் மற்றும் குற்றப்பத்திரிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். அப்படியென்றால் அவர்கள் நீதிமன்றங்களை நாடலாமே ஏன் வெளியே கூச்சல் போடுகிறார்கள்? ‘ஒரு ஊழல் நடந்திருந்தால், அதில் ஈடுபட்ட ஒருவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டாமா?’ என நான் மக்களிடம் கேட்க விரும்புகிறேன். இரண்டு வழக்குகளைத் தவிர மற்ற எல்லா வழக்குகளும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது போடப்பட்டவையே.

பாரமட்சமில்லை: விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமே குறிவைக்கின்றன என்றால் அவர்கள் நீதிமன்றகளுக்கு செல்லலாமே யார் அவர்களைத் தடுப்பது? எங்களை விட சிறந்த வழக்கறிஞர்கள் அவர்களது அணியில் இருக்கிறார்கள். விசாரணை அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்படுகின்றன. நான் அனைவருக்கும் ஒன்றை மட்டும் செல்லிக்கொள்கிறேன். சட்டத்தைப் பின்பற்றுங்கள். அது ஒன்றே வழி.

அதானி விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய இரு நபர் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. அனைவரும் அவர்களிடம் உள்ள ஆதாரங்களை அந்த குழுவிடம் சமர்பிக்கலாம். குற்றம் ஏதும் நடந்திருப்பின் தண்டனையில் இருந்து யாரும் தப்பிக்க கூடாது. அனைவருக்கும் நீதிமன்ற நடைமுறைகள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.

செபி அமைப்பும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்