“பல தடைகள் இருப்பினும் டெல்லி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது ஆம் ஆத்மி அரசு” - துணைநிலை ஆளுநர் உரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி அரசு கல்வித் துறையில் செலுத்தும் கவனத்தினால் மாணவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஐந்து நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 17) தொடங்கியது. அதன் முதல் நாள் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உரையாற்றினார். ஆளுநர் தனது உரையில் ஆம் ஆத்மி அரசின், கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைச் சுட்டிக்காட்டி பேசினார்.

அரசுக்கு பாராட்டு: துணைநிலை ஆளுநர் தனது உரையில், "ஆம் ஆத்மி அரசு கல்வித் துறையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி அதனை உறுதிபடுத்தி வருவதால் மாணவர்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.

புதிய மருத்துவமனைகளில் 16,000 படுக்கைகள் சேர்க்கப்படும்; தற்போதுள்ள மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.

கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த அரசு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, உணர்வுபூர்வமான கொள்கைளினால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல தடைகள் இருந்த போதிலும், டெல்லியின் வளர்ச்சிக்காக ஒரு வலுவான அடித்தளம் அமைக்க பல்வேறு துறைகளில் முன்னோடியான முயற்சிகளை எனது இந்த அரசு எடுத்துள்ளது. மக்களின் நலனுக்காக, ஒவ்வொரு துறைகளிலும் பல்வேறு சிறப்பான முயற்சிகளை எனதிந்த அரசு மேற்கொண்டு வருகிறது" என்றார்.

பாஜக எம்எல்ஏகள் வெளியேற்றம்: முன்னதாக, டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரையின்போது பாஜக, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏகள் ஒவ்வொருவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கலால் வரிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் கூறப்படும் ஊழல் குற்றாட்டிற்காக ஆம் ஆத்மி அரசின் அரவிந்த் கேஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஜித்தேந்திர மஹாஜன், அனில் பாஜ்பாய், ஓபி சர்மா ஆகியோரை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.

உறவுகளில் விரிசல் இல்லை: டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இன்று, "எனது அலுவலகத்திற்கும் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும் இடையில் உருவான மோதல்கள் சில நேரம் அதன் எல்லைகள் மீறியிருக்கின்றன. ஆனால் இரண்டுக்குமான உறவில் விரிசல்கள் ஏற்பட்டதில்லை. காற்று என்னுடைய இலைகளை தினமும் உதிர்க்கலாம், ஆனாலும் காற்றுடனான எனது உறவு ஒருபோதும் நின்று போகாது என மரம் ஒன்று காற்றிடம் சொன்னதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்" என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "இவை சிறிய பிரச்சினைகள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். இரண்டு கோடி மக்கள் சேர்ந்து தேர்ந்தெடுத்த ஓர் அரசாங்கத்தை பணிசெய்ய அனுமதிக்க வேண்டும். பணிசெய்யவிடாமல் தடைகளை ஏற்படுத்தினால் அது சரியில்லை" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 secs ago

வாழ்வியல்

9 mins ago

ஓடிடி களம்

19 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

54 mins ago

தொழில்நுட்பம்

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்