சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. கடன் செயலிகள் மூலம் கடன்பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அதேபோல, சூதாட்டச் செயலிகளால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இத்தகைய செயலிகள் பெரும்பாலும் சீன நிறுவனங்களால் இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், இந்த செயலிகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இத்தகைய செயலிகளை முடக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 232 செயலிகளை முடக்கியுள்ளது. இவற்றில் 138 செயலிகள் சூதாட்டம் தொடர்பானவை என்றும், 94 செயலிகள் அங்கீகரிக்கப்படாத கடன் சேவை வழங்குபவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஜூன் மாதம் லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக, டிக்டாக், வி-சாட், பப்ஜி உள்ளிட்ட பிரபல சீனச் செயலிகளை, மத்திய அரசு தடை செய்தது.நாட்டின் பாதுகாப்புக் கருதி, கடந்த3 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள நிலையில், அவற்றைக் கண்டறிந்து முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

12 mins ago

ஓடிடி களம்

26 mins ago

க்ரைம்

44 mins ago

ஜோதிடம்

42 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

51 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்