இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற ராகுல் யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஜம்மு: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அவர் காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி நேற்றுமுன்தினம் யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் யாத்திரையை ராகுல் தொடங்கினார். அவருடன் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் சென்றார்.

பனிஹால் பகுதியில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, பனிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காத அளவில் இருந்தது. அங்கு போதுமான போலீஸாரும் இல்லை எனத் தெரிகிறது.

இதனால் பாதுகாப்பு கருதி ராகுல் காந்தியை பாதுகாப்பு வாகனத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு இருப்பதாக கூறி யாத்திரையை காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது. நேற்றைய தினத்தில் மட்டும் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு யாத்திரையை நடத்த ராகுல் திட்டமிட்டு இருந்தார். ஆனால் பனிஹாலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தை அடைவதற்குள் யாத்திரை நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, “ராகுல் யாத்திரை செய்து கொண்டிருந்த போது திடீரென பாதுகாப்பு அதிகாரிகள் விலக்கிக் கொள்ளப்பட்டனர். இது மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி ஆகும்.

மேலும் அங்கு போதுமான போலீஸாரும் இல்லை. நாங்கள்பனிஹால் சுரங்கத்தை அடைந்தபோது அங்கிருந்த போலீஸார் வேறு இடத்துக்கு தங்களது வாகனங்களை எடுத்துச் சென்றுவிட்டனர்.

ராகுல் காந்தியுடன் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் இருந்தார். இருவருக்கும் தகுந்தபாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்யவில்லை. இங்கு மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடிநடந்துள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் போலீஸார் கவனக்குறைவுடன் செயல்பட்டுள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT