பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை - வீடியோக்களை நீக்க ட்விட்டர், யூடியூப் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி ஆவண பட வீடியோக்கள், கருத்துகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதை ட்விட்டர், யூடியூப் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு வீடியோ, பதிவுகளை நீக்கி வருகின்றன.

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா - மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிபிசியின் ஆவண படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18-ம் தேதி தடை விதித்தது. இந்த சூழலில் பிபிசி ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பிபிசி ஆவண படத்துக்கான இணைப்பும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இத்தகைய சமூக வலைதள பதிவுகளுக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது. ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் அரசின் உத்தரவை ஏற்று வீடியோக்கள், பதிவுகளை நீக்கி வருகின்றன. ட்விட்டரில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிபிசி ஆவண படம் வெளியாக ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.

எனவே ஆவண படம் தொடர்பான கருத்துகளை நீக்க யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. பிபிசி ஆவண படத்துக்கான இணைப்புகளை நீக்கவும் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண படத்தின் 2-ம் பாகம் வரும் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, பிரதமர் மோடி உட்பட வெளிநாட்டு தலைவர்கள் குறித்து ஆவண படம் வெளியிட தேவையில்லை. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் உட்பட சொந்த நாட்டின் தலைவர்கள் குறித்த ஆவண படங்களை வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நடுநிலையாளர்கள் விமர்சித்து உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்