வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 
இந்தியா

'எப்போதும் வெளிநாட்டுப் பயணம்; என்னதான் செய்கிறேன் நான்' - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அகமதாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு வெளியுறவு அமைச்சராக தனது பணியென்ன என்பதை அங்கிருந்த இளைஞர்கள் மத்தியில் விளக்கிப் பேசினார்.

அவர் பேச்சிலிருந்து.. நீங்கள் அடிக்கடி செய்திகளில் வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளார், ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்றெல்லாம் கேட்டிருப்பீர்கள். ஆனால் நான் அந்தப் பயணங்களில் என்ன செய்கிறேன் என்று மக்களாகிய நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒன்று உலக நாடுகளுக்கு இந்தியாவை எடுத்துரைப்பது. இன்னொன்று உலகத்தை இந்தியா நோக்கி அழைத்து வருவது.
இந்த உலகம் இந்தியாவிற்காக தயாராகிவிட்டது. மோடி அரசு வெளியுறவுக் கொள்கைகள் 10 நாட்களுக்கானது, 10 மாதங்களுக்கானது, 10 வருடங்களுக்கானது என பல்வேறு பார்வைகளையும் உள்ளடக்கிக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மோடியின் வெளியுறவுக் கொள்கையில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. அவை பாதுகாப்பு, வளர்ச்சி, மக்கள் நலன் ஆகியனவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் உலகம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயஙகள் இரண்டு இருக்கின்றன. ஒன்று மாறும் அமெரிக்கா. மற்றொன்று எழுச்சி காணும் சீனா. சீனா அரசியல், ராணுவம், பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோல் இன்று உலகம் காணும் அமெரிக்கா மிகவும் வித்தியாசமானது. அது புதிய அமெரிக்கா. கரோனா காரணமாகவும், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டுக்கு வெளியே நடப்பது சார்ந்தது என்று கருதக்கூடாது. நம் அன்றாட வாழ்க்கைச் சார்ந்தது வெளியுறவுக் கொள்கை.

இந்தியா கடந்த காலங்களில் தீவிரவாதத்திற்கு ஆளாகியது. ஆனால் இப்போது தீவிரவாதம் தொடர்பான நம் பார்வை மாறியுள்ளது. 2008ல் உரி, புல்வாமாவில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். நமது அரசாங்கம் தனது கொள்கைகளில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை நாம் கண்டு வருகிறோம். இவ்வாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

SCROLL FOR NEXT