2024 தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி - உத்தர பிரதேசத்தில் பாஜக.வை நேரடியாக எதிர்த்து போட்டியிட நிதிஷ் குமார் திட்டம்?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஜேடியு தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி, லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த முயற்சிகளில் ஒன்றாக உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் அவர் கூட்டணிப் பேச்சை தொடங்கியுள்ளார். இதற்காக, டெல்லியின் குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவை நிதிஷ் சந்தித்து பேசியுள்ளார்.

பிஹாரை ஒட்டியுள்ள கிழக்கு உ.பி.யில் நிதிஷ் குமாரின் குர்மி சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இதனால் அப்பகுதியில் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைப்பதுடன், அங்குள்ள ஒரு தொகுதியில் போட்டியிடவும் நிதிஷ் குமார் தயாராகி வருகிறார். பிரதமர் மோடி பாணியில் வேற்று மாநிலத்தில் போட்டியிடுவது அவரது திட்டமாக உள்ளது. நிதிஷ் குமாருக்காக உ.பி.யின் பூல்பூர், மிர்சாபூர், அம்பேத்கர் நகர் ஆகிய தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜேடியுவின் உ.பி. மாநிலத் தலைவர் அனுப் சிங் பட்டேல் கூறும்போது, “இந்த யோசனையை, பாட்னாவில் நடைபெற்ற எங்கள் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமாரிடம் தெரிவித்தோம். இதை ஏற்கும் வகையில் அவர் பேசியிருப்பதால், 2024 மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் பாஜகவை நிதிஷ் நேரடியாக எதிர்க்கும் வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

உ.பி.யின் பூல்பூரில் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, வி.பி.சிங் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். பூல்பூருடன் மிர்சாபூர் மற்றும் அம்பேத்கர் நகரிலும் குர்மி மற்றும் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். இதனால் இந்த மூன்றில் ஒரு தொகுதியில் நிதிஷ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி.யின் புந்தேல்கண்ட், மத்திய பகுதியிலும் சேர்த்து சுமார் 20 மக்களவைத் தொகுதிகளில் ஜேடியு வெல்லும் வாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளது. எனவே சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்து போட்டியிட ஜேடியு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

நிதிஷின் ஜேடியு ஏற்கெனவே உ.பி.யின் 2017 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. பிறகு காங்கிரஸுடன் சமாஜ்வாதி கூட்டணி சேர்ந்ததால் மதசார்பற்ற வாக்குகள் பிரியும் என போட்டியை கைவிட்டார்நிதிஷ். பிறகு பாஜக அணியில்இருந்ததால் 2019 மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் போட்டியிடாத நிதிஷ், 2022 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். 27 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர்கள் 26-ல் வைப்புத்தொகையை இழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்