உ.பி-யில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட சம்பவம்: வலுக்கும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சஹாரான்பூர்: சஹாரான்பூர் மாவட்டத்தில், கபடி வீராங்கனைகளுக்கு கழிவறைப் பகுதியில் வைத்து உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராலாகி, எதிர்கட்சிகளின் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூர் மாவட்டத்தில், செப்.16-ம் தேதி நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கபடி போட்டியின்போது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், கழிப்பறையின் வாசல் ஒன்றில் சிறுநீர் கழிக்கும் கோப்பைகளுக்கு அருகில் சாதம், குழம்பு வகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து கேமரா அந்தக் கழிப்பறையையும், அங்கிருக்கும் சிறுநீர் கோப்பைகளையும் காட்டுகின்றது. கூடவே, கழிப்பறையின் தரையில் ஒரு தாளின் மீது திறந்தநிலையில் பூரி வைக்கப்பட்டுள்ளதும் காட்டப்படுகின்றது. வீராங்கனைகள் அவற்றில் இருந்து தேவையான உணவுகளை தட்டில் எடுத்து வைத்துச் சாப்பிடுகின்றனர். இரண்டாவது வீடியோ ஒன்றில், தொழிலாளர்கள் வெளியே நீச்சல் குளத்தின் அருகில் சமையல் செய்த இடத்தில் இருந்து பாத்திரங்களை எடுத்து வருவது காட்டப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து, ஆளும் பாஜக அரசு கபடி வீராங்கனைகளை அவமானப்படுத்திவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், "பல்வேறு பிரசாரங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் பாஜக அரசால், விளையாட்டு வீரர்களுக்கு உணவு பரிமாற முறையான ஏற்பாடு செய்ய பணம் செலவளிக்க முடியவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளது.

தெலங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் சமூக வலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஓய்.சதீஷ் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. இதுதான் பாஜக வீரர்களுக்கு கொடுக்கும் மரியாதையா? அவமானம்” என்று தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரீய லோக் தளத்தின் தலைவர், ஜெயந்த் சவுத்ரி, சதீஷ் ரெட்டியின் பதிவைப் பகிர்ந்து, "அவமரியாதை" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மாநில அரசு, சஹாரான்பூர் மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

முன்னதாக, "விளையாட்டு அரங்கில் இருந்த இடநெருக்கடி காரணமாக வீரர்களுக்கான உணவை ரெஸ்ட் ரூமில் (கழிப்பறை) வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அன்று மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் வீரர்களுக்கு அங்கிருந்த நீச்சல் குளத்தின் அருகில் சாப்பாடு பரிமாறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். விளையாட்டு அரங்கத்தில் சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்ததாலும், அன்று மழையாக இருந்ததாலும், உணவினை நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்த ரெஸ்ட் ரூமில் வைத்திருந்தோம். வேறு எங்கும் உணவினை எடுத்து கொண்டுவைக்க முடியவில்லை" என்று அனிமேஷ் சக்சேனா தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சஹாரான்பூர் மாவட்ட நீதிபதி அகிலேஷ் சிங் கூறுகையில், "மோசமான ஏற்பாடுகள் குறித்து புகார்கள் வந்துள்ளன. மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உரிய விசாரணை நடத்தி மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

வணிகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

46 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்