'மணிஷ் சிசோடியா பற்றி முழுநீள முதற்பக்க கட்டுரை முற்றிலும் நடுநிலையானது' - நியூயார்க் டைம்ஸ் விளக்கம்

By செய்திப்பிரிவு

மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு நவ.16-ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனை மேற்கொள்ள தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. மதுபானங்களை வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மதுபானக் கொள்கை, கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனிடையே, டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை குறித்து சர்ச்சை எழுந்தது. இதனால், அதை திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்தது. மேலும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அரசு கடைகளின் மூலமே மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்தார். இந்தப் பிரச்சினை ஆம் ஆத்மி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை ஆயுதமாக பயன்படுத்தி ஆம் ஆத்மி அரசை மிரட்டுவதாக மத்திய அரசு மீது முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் இருப்பதாக கூறி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

நியூயார்க் டைம்ஸ் செய்தியும் ரெய்டும்: முன்னதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தித் தாளில் டெல்லியில் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்தும் அதற்குப் பின்னணியில் இருந்த மணிஷ் சிசோடியா குறித்தும் முதல் பக்கத்தில் முழுநீள கட்டுரை வெளியானது. இந்தச் சூழலிலேயே மத்திய அரசு ரெய்டுகளை ஏவிவிட்டதாக டெல்லி ஆம் ஆத்மி அரசுதெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் செய்தித் தொடர்பாளர் நிக்கோல் டைலர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், டெல்லியின் கல்வி மற்றும் மருத்துவத் துறையின் வளர்ச்சி பற்றிய எங்களின் கட்டுரை கள ஆய்வின்படி வெளியிடப்பட்டது. எங்கள் இதழியல் அரசியல், விளம்பர நெருக்குதல்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார்.

முன்னதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஒரு பேட்டியில், சிபிஐ நடவடிக்கையின் நேரத்தை கவனிக்க வேண்டும். டெல்லியின் கல்வி, சுகாதார மேம்பாட்டை பாராட்டி செய்திகள் வெளியான நிலையில் இந்த ரெய்டு நடந்துள்ளது. அந்த செய்தியைப் பொய்யாக்க வேண்டும் என்ற பதற்றத்தில் இந்த ரெய்டு நடந்துள்ளது என்று கூறியிருந்தார்.

ஆனால், பாஜக தலைவர் ப்ரவேஷ் வர்மா அளித்த பேட்டியில் நியூயார்க் டைம்ஸ், காலீஸ் டைம்ஸ் என்ற இரண்டு பத்திரிகைகளிலும் வந்த செய்தியில் உள்ள தரவுகள் ஒரே மாதிரி உள்ளன. அதனால் இந்த இரண்டு செய்திகளுமே பணம் கொடுத்து பதிவேற்றப்பட்டவை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

15 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்