மும்பை மாநகரில் ஒவ்வொரு வார்டிலும் ‘நமோ டீ ஸ்டால் மற்றும் ஃபுட் ஸ்டால்’ தொடங்க உரிமம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலரும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு குழு தலைவருமான பிரகாஷ் கங்காதர் நேற்று முன்தினம் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, “இவ்வாறு உரிமம் வழங்குவதன் மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும். வறட்சி பாதித்த பகுதிகளில் இருந்து மும்பை வரும் மக்களும் இதனால் பயன் அடைய முடியும். இந்த ஸ்டால்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் முத்ரா திட்டத்தின் பொதுமக்கள் நிதியுதவி பெறமுடியும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடம் அவர்கள் கடன் கேட்டு விண்ணப் பிக்க முடியும்” என்றார்.
மகாரஷ்டிர மாநிலத்தின் பிரபல உணவான வட-பாவ் பெயரில் மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் ‘ஷிவ் வட-பாவ்’ உணவகங்கள் தொடங்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு போட்டியாக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் நமோ டீஸ்டால் தொடங்க பிரகாஷ் கங்காதர் கோரிக்கை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நமோ டீஸ்டால் தொடங்கும் யோசனை பாஜகவின் அதிகாரப்பூர்வ திட்டம் அல்ல என்று பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து மும்பை பாஜக தலைவர் ஆசிஷ் ஷெலர் கூறும்போது, “வேலைவாய்ப்பை உருவாக்கவும் சாதாரண மக்களுக்கு உதவிடவும் பிரகாஷ் கங்காதர் இந்த யோசனையை கூறினார். அவரது உணர்வை மதிக்கிறோம். இது அவரது தனிப்பட்ட யோசனை. பாஜகவின் யோசனை அல்ல” என்றார்.