ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி கடன் முறைகேடு வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அமலாக்கத் துறை அணுகியுள்ளது.
அதாவது மல்லையாவை அவர் தற்போது இருக்கும் நாடு வெளியேற்ற (deportation) நடவடிக்கை எடுக்க அமலாக்கப் பிரிவு வெளியுறவு அமைச்சகத்தை நாடியுள்ளது. மாறாக நாடுகடத்துதல் (extradition) என்ற நடைமுறை பல சிக்கல்களை ஏற்படுத்துவது, மேலும் கால தாமதம் ஏற்படுத்தும் சட்டச் சிக்கல்கள் உள்ள நடமுறையாகும். அதாவது மல்லையா குற்றம் இழைத்ததற்கான முதற்கட்ட நிரூபணம் தேவை, மேலும் நாடுகடத்தலுக்கான இருநாட்டு ஒப்பந்த விவகாரங்களும் இதில் தலைதூக்க வாய்ப்புள்ளது, இதனால் குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை தற்காத்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டு என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பண தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் மல்லையா ஒத்துழைப்பு அளிக்காததை அடுத்து, அவரின் பாஸ்போர்ட் கடந்த வாரம் முடக்கப்பட்டது.
இந்நிலையில், ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி கடன் முறைகேடு வழக்கில் தொடர்புடைய மல்லையாவை வெளிநாட்டில் இருந்து இந்தியா அழைத்து வருவதற்கு, வெளியுறவு அமைச்சகத்தை அமலாக்கப்பிரிவு அணுகியுள்ளது. விரைவிலேயே சிபிஐ-க்கும் கடிதம் எழுதி, இன்டர்போல் அமைப்பு மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்குவதற்கான முயற்சியில் அமலாக்கப்பிரிவு இறங்கியுள்ளது.
மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கினால், இந்திய வெளியுறவு அமைச்சகம் பிரட்டின் வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி கேட்டுக் கொள்ளும்.
மும்பை நீதிமன்றம் அளித்துள்ள ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை மற்றும் பாஸ்போர் முடக்கம் ஆகிய இரண்டு காரணங்களின் அடிப்படையில் மல்லையாவை இந்தியாக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜிஎம்ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலைய நிறுவனம் சார்பி்ல தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில் மல்லையா குற்றவாளி என நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது.
ஐடிபிஐ வங்கியில் ரூ.430 கோடி கடன் வாங்கிய மல்லையா அதனை வெளிநாடுகளில் சொத்து வாங்குவதற்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை கிங்பிஷர் நிறுவனம் மறுத்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாதது உட்பட கருப்புப் பண சட்டத்தின் கீழும் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.