டெல்லியில் 2-வது நாளாகக் குறைந்த அன்றாட தொற்று எண்ணிக்கை: உச்சம் தொட்டு வீழ ஆரம்பித்துவிட்டதா?

புதுடெல்லி: டெல்லியில் புதிதாக 20,718 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்று மாலை 24,383 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் பாசிடிவிட்டி விகிதம் (அதாவது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற விகிதம்) 30% ஆகக் குறைந்துள்ளது.

டெல்லி கரோனா புள்ளிவிவரம்:

கடந்த 24 மணி நேரத்தில் 20,718 பேருக்கு தொற்று உறுதி.
கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர்: 25,335.
வீட்டுத் தனிமையில் உள்ளோர்: 69,554.
டெல்லியில் உள்ள நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள்: 30,472.

தொடர்ந்து இரண்டாவது நாளாகக் குறைவு: டெல்லியில் கடந்த வியாழக்கிழமை உச்சபட்சமாக ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 28,867ஆக இருந்தது. அதன் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) 24,383 பேருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து இன்று ஜனவரி 15 ஆம் தேதி அன்றாட பாதிப்பு மேலும் குறைந்து 20,718 என்றளவில் உள்ளது.

இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், "டெல்லியில் கரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பதிவான எண்ணிக்கையோடு கரோனா உச்சம் தொட்டுவிட்டதாகக் கருதுகிறோம். இன்று 20,000 என்றளவில் இருக்கும். மருத்துவமனைகளில் அனுமதியாவோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து கரோனா பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கிறோம். அன்றாட பாதிப்பு 15,000க்கும் கீழ் என்றளவிற்கு வரும்போது கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்" என்றார்.

முன்னதாகப் பேசிய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும், கரோனா எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட கவலைப்பட ஏதுமில்லை. மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் தேவையான அளவு உள்ளன. பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை. நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய நேரமிது என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE