கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடு: ஒமைக்ரான் பீதியால் மும்பையில் 144 தடை உத்தரவு டிச.31 வரை நீட்டிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, மும்பையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவை டிசம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மும்பை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 32 ஆக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மும்பை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

''மும்பையில் உள்ள வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும், அவர்கள் அனைவரும் அனைவரும் 2 தடுப்பூசிகளைச் செலுத்தியிருக்க வேண்டும் என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் 5 பேருக்கு அதிகமாகக் கூடுதல், கூட்டம் நடத்துதல், பேரணி செல்லுதல் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கரோனா கட்டுப்பாட்டு விதிகளைக் கடைப்பிடித்து தொற்றைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள், ஷாப்பிங் மால்கள், மக்கள் கூடுமிடங்களில் 2 தடுப்பூசி செலுத்தியவர்களையே அனுமதிக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். அரசுப் பேருந்துகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், மகாராஷ்டிராவுக்குள் வருவோர் 72 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.

எந்த நிகழ்ச்சி, கூட்டம், அரங்குகளில் நடக்கும் கூட்டம் ஆகியவற்றில் அதன் கொள்ளளவில் 50 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் முழுத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மக்கள் பங்கேற்றால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தடை உத்தரவு டிசம்பர் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மகாராஷ்டிராவில் மட்டும் 32 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் படிப்படியாக அதிகரித்துவிடக்கூடாது என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE